பல நாட்டு தூதுவர்கள் பிரதமருக்கு வாழ்த்து!
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரியவை 2024.10.02 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த பல நாடுகளின் தூதுவர்கள், தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்
அதன்படி இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா, கொரியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவில் பிரதமர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது
அதனைத்தொடர்ந்து பிரதமருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கியும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அமைதியான தேர்தல் குறித்தும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் கூடிய தொலைக்காட்சி ஒளிபரப்புகளை டிஜிட்டல் மயமாக்குதல், ஜப்பானின் மானியங்கள் மற்றும் கடன்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் அவர்கள், நாட்டில் நிலையான ஆட்சியைப் பேணுவதன் முக்கியத்துவம், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்டதுடன் இலங்கையில் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமைதியான மற்றும் ஜனநாயகத் தேர்தலை நடத்தி, சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ததற்காக இலங்கையைப் பாராட்டுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா, கொரியா, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது