யானைகளுக்கு அஞ்சி மரத்தில் வீடு கட்டி வாழும் இளம் குடும்பம்
அநுராதபுரம், மஹாவிலாச்சிய பகுதியில் இளம் குடும்பம் ஒன்று யானைகளுக்கு அஞ்சி மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
போதுமான வாழ்வாதாரம் இல்லாத காரணத்தினால் நிரந்தர வீடு ஒன்றைக் கட்ட முடியாமல் இவ்வாறு மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.
பணம் இல்லாத காரணத்தினால் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.
இந்த வீட்டில் நானும் எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றோம். எனது மூத்த மகள் 18 வயதுடையவர் என்பதுடன் இளைய மகன் 5 வயதுடையவர் ஆவார்.
எனது மூத்த மகள் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றாள். நான் கூலி வேலை செய்து எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன்.
நாங்கள் இதற்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள எமது உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வந்தோம். பின்னர் உறவினர்களுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக மஹாவிலாச்சிய பகுதிக்கு சென்றோம்.
அந்த பகுதியில் வசிக்கும் நபரொருவர் எங்கள் மீது இரக்கப்பட்டு காணி ஒன்றை வழங்கினார்.
அந்த காணி விவசாய நடவடிக்கைகளுக்கு சொந்தமானது என தெரிவித்து பிரதேச மக்கள் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர், மஹாவிலாச்சிய பிரதேச செயலாளரின் தலையீட்டில் அந்த காணி உத்தியோகபூர்வமாக எங்களுக்கு வழங்கப்பட்டது.
காணியில் அறை ஒன்றை கட்டுவதற்கு அத்திவாரம் இட்டோம். ஆனால் போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அறை கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது.
பின்னர், யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்த மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றோம்.
நாங்கள் பெரிதாக எதுவும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் வாழ்வதற்கு இரண்டு அறைகள் கட்டி தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.