சிறுவர்களிடையே பரவும் இன்புளுவன்சா; முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம்
இன்புளுவன்சா அறிகுறிகள் உள்ள சிறுவர்கள் இந்த நாட்களில் அதிகம் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகள் உள்ள சிறுவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என சுகாதாரத் துறையினர் பெற்றோரிடம் கேட்கின்றனர்.
இதேவேளை, கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, foot and mouth disease) உள்ள குழந்தைகளும் இந்நாட்களில் பதிவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே சரியான சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டுகிறார்.
அதிக காய்ச்சல், ஒழுகும் மூக்கு, தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், சோர்வாக உணர்தல் போன்றவை இந்நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
வைரசு பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இவ்வறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, இவ்வாறான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.