பாம்பன் தூக்குப்பாலத்தை முழுமையாக திறக்கும் சோதனை வெற்றி
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கப்பல்கள், படகுகள் கடப்பதற்காக இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளத்தில் செங்குத்து வடிவில் திறந்து மூடும் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த தூக்குப்பாலத்தை கடந்த 2 நாட்களாக திறந்து மூடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அதிகபட்சமாக 15 மீட்டர் உயரம் வரை திறக்கப்பட்டது. 3-வது நாளாக நேற்று மாலையும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அதிகபட்சமாக 17 மீட்டர் உயரம் வரையிலும் முழுவதுமாக தூக்குப்பாலம் திறக்கப்பட்டு, மீண்டும் கீழே இறக்கப்பட்டு வெற்றிகரமாக இந்த சோதனை நடந்து முடிந்தது.
மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு இது குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-தூக்குப்பாலத்தை முழுவதுமாக 17 மீட்டர் உயரம் வரை திறந்து சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும் இன்னும் சில நாட்கள் தூக்குப்பாலத்தை திறந்து மூடி சோதனை தொடர்ந்து நடைபெறும். சிறிய கோளாறு கூட வரக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு சோதனை நடத்தப்படுகிறது. அடுத்ததாக பாம்பன் ரெயில் பாலத்தையும், தூக்குப்பாலத்தையும் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்கான கடிதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது. அவரது ஆய்வின்போது 21 பெட்டிகளுடன் ரெயில் இயக்கி சோதனை நடைபெறும். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கிய பின்னர் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி, புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்து, ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.