பழங்குடியினர் இடையேயான மோதலில் 50 பேர் பலி
மெல்போர்ன், பப்புவா நியூ கினியாவில், பழங்குடியினர் இடையேயான மோதல் தொடர்கின்ற நிலையில், புதிதாக வெடித்துள்ள மோதலில், 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ளது பப்புவா நியூ கினியா. இங்கு பழங்குடியினர் பிரிவுகளுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக சில பகுதிகளுக்கு வந்து சட்டவிரோதமாக குடிபுகுந்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள், அங்குள்ள பழங்குடியினரை விரட்டி வருகின்றனர்.
இதையடுத்து, பழங்குடியினர் பிரிவுகளுக்கு இடையேயான மோதல், வன்முறையாக மாறியுள்ளது. தற்போது நவீன ஆயுதங்களுடன் இவர்கள் போராடி வருகின்றனர். போர்கெரா பகுதியில் கடந்த சில தினங்களாக மோதல் நடந்து வருகிறது. இதில், 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில்தான், கடந்த மே மாதம் நடந்த நிலச்சரிவில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். மீட்புப் பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில், தற்போது, இரு தரப்புக்கு இடையே மோதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.