உழவு இயந்திர விபத்து நடக்கக் காரணம் என்ன?; அரபுக் கல்லூரி நிர்வாகம் தகவல்
அம்பாறை மாவட்டம் – மாவடிப் பள்ளியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவத்தில் உழவு இயந்திர சாரதி,உதவியாளர் மற்றும் மத்ரஸா மாணவர்கள் என 13 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில்,என்ன நடந்தது என நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எங்களுடைய மத்ரசா நிர்வாகமும் அதிபர் உட்பட அனைவரும் தீர்மானித்ததற்கு அமைய, அனர்த்தம் ஒன்று ஏற்படுகின்ற பட்சத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய போதிய வசதிகள் எமது மத்ரசாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் அவர்களை அங்கு தொடர்ந்து வைத்திருந்து பராமரிப்பது என முடிவு செய்திருந்தோம்.
ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக எமது காஸிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் மாணவர் விடுதி, வகுப்பறைகள், தொழுகை அறைகள் என்பன மழை நீரினால் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு மாணவர்கள் அங்கு விபத்தை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மலசலகூட குழிகள் கூட நிரம்பிக் காணப்பட்டது. இப்படி அடிப்படை வசதிகள் கூட மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதனால் மீண்டும் எங்களுடைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கூடி சில முடிவுகளை எடுத்தோம்.
மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் கல்லூரிக்கு விடுமுறை வழங்கி மாணவர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தோம்.
இதற்காக பிரத்தியேகமாக ஒரு பஸ் வண்டியை வாடகைக்கு அமர்த்தி மாணவர்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தோம். ஆனால் சம்மாந்துறைக்கு மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றபோது, காரைதீவில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் பஸ் வண்டியில் செல்ல முடியாது என்றும் உழவு இயந்திரத்தின் ஊடாக போக்குவரத்து செய்யப்படுகின்றது என்றும் கூறியதன் விளைவாக நாங்கள் அதிலே அனுப்ப சம்மதித்தோம்.
இதனை மாணவர்களின் பெற்றோருக்கும் அறிவித்து, அவர்கள் மறுமுனையில் நிற்கிறோம் நீங்கள் அனுப்புங்கள் என்று கூறியதன் பிற்பாடுதான் நாங்கள் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பினோம். ஆனால் இறைவனின் ஏற்பாடு அந்த உழவு இயந்திரம் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவே உண்மை நிலைமையாகும் என குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தில் மத்ரஸா மாணவர்கள் 13 பேரும் , உழவு இயந்திர சாரதி, நடத்துனர் உட்பட 15 பேர் உழவு இயந்திரத்தில் பயணித்ததாக மத்ரஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 7 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.
மீதியானவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து நேற்று வியாழக்கிழமையும் (28) நடைபெற்ற நிலையில், நேற்று முற்பகல் வரை 7 உடல்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் இருவர் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளர் எனவும் ஏனைய ஐவரும் மத்ரஸா மாணவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.