மொட்டைமாடியில் தூங்கிய சிறுவனை தாக்கிய ஓநாய்: “ஒபரேஷன் பேடியா” என்ற திட்டமும் அமுல்
இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனொருவன் ஓநாய் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) பதிவானதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓநாய் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைகளுக்காக பஹ்ரைசில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் கடந்த சில வாரங்களாகவே ஓநாய்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், உத்தரபிரதேசத்தில் 50 கிராமங்களில் ஆறு ஓநாய்கள் அடங்கிய கூட்டம் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் ஏற்கனவே 10 சிறுவர்கள் மற்றும் ஒரு பெண்ணின் உயிரைக் கொன்றுள்ளதாகவும் மேலும் 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் ஓநாய்களை பிடிப்பதற்காக “ஒபரேஷன் பேடியா” என்ற திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அண்மையில் ஆறு ஓநாய்கள் கிராமத்துக்குள் நுழையும் காணொளிகளும் வெளியாகி வைரலாகியிருந்தது.
இந்தி திட்டத்தில் மூலம் குறித்த ஓநாய்களை வெகுவிரையில் பிடித்துவிடுவதாகவும் வன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.