பலதும் பத்தும்

முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா (1924-2024)

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா (1924 -2024)  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் அவர்களும், சிறப்பு அதிதியாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி கேமலோஜினி குமரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலய முன்றலில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான பண்பாட்டு ஊர்வலமானது பிரதான வீதியூடாக பிரதேச செயலகத்தை அடைந்ததும்,ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் அவர்களினால் சுவாமி விபுலானந்தரின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்தல் மற்றும் பூசை நிகழ்வுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கதாப்பிரசங்கம், பேச்சு, பாடல், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் (அம்பாறை) திரு கே. ஜெயராஜி அவர்களினால் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தினம் தொடர்பான விசேட ஆன்மீக சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.