பாரதி தமிழன்னைச் சொத்தாகும் !… கவிதை… ஜெயராமசர்மா
தாய் நாட்டின் விடுதலைக்காய்
தமிழெடுத்துக் கவி பாடி
தலை நிமிர்ந்த கவிமன்னன்
தான் எங்கள் பாரதியே
ஓய் வறியாக் கொடுத்தானே
உணர்வு எழச் செய்தானே
தாய் மண்ணை நேசித்தே
தன் வாழ்வை மறந்தானே !
பெண் போற்றி வாழ்ந்தானே
மண் போற்றி நின்றானே
தன் துன்பம் மறந்தானே
தமிழ் எண்ணி நின்றானே
பொன் பற்றி எண்ணாமல்
பொழுது எல்லாம் தாயகத்தின்
விடிவுதனை மனம் எண்ணி
வெகுண் டெழுந்தான் பாரதியும் !
பன் மொழிகள் கற்றான்
பன் நூல்கள் கற்றான்
என்றாலும் தமிழ் மொழியே
இனிமை எனச் சொன்னான்
தமிழ் என்று சொன்னாலே
அமிழ் தூறும் என்றான்
அவன் வார்த்தை அகமிருத்தி
அவன் நினைவில் நிற்போம் !
பாரதி பக்தி பக்குவமாகும்
பராசக்தி பாரதி முக்கியமாகும்
துணிவே பாரதி முதலேயாகும்
அதுவே சக்தி வரமேயாகும்
நித்தம் துதித்தான் சக்தியை
நிறுத்தினான் மூடப் பக்தியை
நம்பினான் பாரதி சக்தியை
நாட்டையே சக்தியாய் பார்த்தனன் !
பாரதி பாடாப் பொருளில்லை
பாரதி பார்க்காத் திசையில்லை
பாரதி சிந்திக்காக் கருவில்லை
பாரதி தமிழன்னைச் சொத்தாகும்
பாரதி என்றாலே தன்மானம்
பாரதி என்றாலே தமிழுணர்வு
பாரதி என்றாலே துணிவாகும்
பாரதி தமிழுக்கே உயிராகும் !
புரட்சி என்றால் பாரதி
புதுமை என்றால் பாரதி
வரட்சி இல்லா கவிதைகளை
வாரி வழங்கினான் பாரதி
முயற்சி என்றால் பாரதி
முழுமை என்றால் பாரதி
அயர்ச்சி இல்லா பாரதி
அவனை அகத்தில் அமர்த்திடுவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா