விதி (அ) கர்ம வினை உண்டென்றால் ஏன் இந்த மனித பிறவி?
பொதுவாக விலங்குகளுக்குக் கர்ம பலன் குறைவு என்பார்கள். அதற்குக் காரணம் “அவைகள் உணவிற்காக வேட்டையாடுகின்றனவே தவிர, வஞ்சகம் செய்து சக விலங்குகளை வன்புணர்வு செய்வதில்லை, தன் இனத்திற்குத் தானே துரோகமும் செய்வதில்லை..” என்பார்கள்.
இயற்பியலின் மூன்றாம் விதியின் படி ஒரு செயலுக்கான எதிர்வினை கட்டாயம் இருக்கும். நல்லதோ கெட்டதோ அதற்கான அதிர்வலைகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று நானும் படித்திருக்கிறேன்.
பரம்பரை சொத்துக்காக அடித்துக் கொள்கிறவர்களுக்கு, எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் பரம்பரை வியாதிகள் தானாக உடலில் சேர்ந்து விடுகின்றன. அது போலத் தான் கர்ம வினை என்றும் கூறுகிறார்கள்.
என் பெரியப்பா மகள் 2000-ஆண்டில் அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். 2010 வரை அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளின் படி அந்தக் கணவன் மனைவி இருவருக்கும் உடலில் எந்தக் குறையுமில்லை என்றே ரிசல்ட் வந்தது. என் பெரியப்பா ஒரு முறை நாடி ஜோதிடரை சென்று சந்திக்கும் பொழுது நானும் உடன் சென்றிருந்தேன்.
ஒரு அரை மணி நேரம் அலசி ஆராய்ந்த பின் அந்த ஜோதிடர் “உங்க குடும்பத்துல இரண்டு பெண் குழந்தைகளோட சாபம் முதல்’ல உங்கப்பாவை தாக்கி இருக்கு, அடுத்ததா குடும்பத்துக்கு மூத்த மகனான உங்களைத் தாக்கிடுச்சு..” என்றார். மேலும் அந்தப் பொண்ணுங்களுக்கு நியாயமா சேர வேண்டியதை கூட நீங்க கொடுக்கல போல இருக்கு..” என்றார்.
அன்று இரவு எங்கள் வீட்டில் எங்கள் அப்பாவும் பெரியப்பாவும் பேசிக் கொள்ளும் போது தான், எங்கள் இரண்டு சித்திகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றே தெரிந்தது. அதில் ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணி, கணவனின் கொடுமை தாளாமல் நிறைமாத கர்ப்பிணியான அவர் கிணற்றில் குதித்து விட்டார். அவருக்கு இன்னொரு பெண் குழந்தை இருந்தது, அவளின் திருமணதிற்குக் கூட எங்கள் பெரியப்பா மற்றும் என் அப்பா செல்லவில்லை என்று பேசிக் கொண்டார்கள்.
இன்னொரு சித்தி தன் குடிகார கணவனின் போக்குப் பிடிக்காமல் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து தீக்குளித்து இறந்து விட்டார். அவருக்கும் ஒரு மகன் இருக்கிறான், ஆனால் அவனுடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தது. பூர்வீக வீட்டை விற்கும் பொழுது கூட அவர்களுக்கான பங்கை பற்றி அண்ணன் தம்பிகள் யோசிக்கவில்லை போலும்.
என் தாத்தா நீரிழிவு நோய் மற்றும் கணையப் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்தார். அவர் உடலில் இருந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை கெட்ட நீரை ஊசி மூலம் வெளியேற்றுவார்களாம். அந்த டாக்டரை பார்த்தாலே இரண்டு கைகளால் கும்பிட்டு ‘இன்று வேண்டாம்’ என்று அழுவாராம்.
நாடி ஜோதிடம் பார்த்த பிறகு அந்த அத்தைகளின் பிள்ளைகளைத் தேடி பிடித்து அவர்களுக்குச் சேர வேண்டிய முறையான பங்கை பேங்க் வட்டி முறையில் கணக்கிட்டு கொடுத்து விட்டார்கள். திருமணமான என் அத்தை மகள் என் பெரியப்பாவிடம் கூறியது இந்த வார்த்தைகளைத் தான். “பணம் வேண்டாம் மாமா.. அது இல்லாமலே நிறையச் சமாளிச்சிட்டோம்.. நீங்க எல்லாம் என்னை அடிக்கடி வந்து பாருங்க.. எனக்கு அது போதும்..” என்றாள். என் அப்பா வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணின் கையில் பணத்தைத் திணித்தார். இன்னொரு அத்தை மகன் வியாபாரத்தில் நொடித்துப் போயிருந்த சமயம் என்பதால், அவர் மறுக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டார்.
பஸ்ஸில் திரும்பி ஊருக்கு வரும் போது என் பெரியப்பா மற்றும் என் தந்தை இருவரும் தானாகத் தேம்பி அழ ஆரம்பித்தார்கள். உண்மையில் இவர்கள் வேண்டும் என்றே அந்தக் குழந்தைகளை நிர்கதியாக விடவில்லை, ஒவ்வொருவரின் வாழ்க்கை சூழ்நிலையும் போராட்டமும் அப்படி. பத்து குழந்தைகளுக்கு மேல் இருக்கும் வீட்டில் பிறந்தவர்களுக்கு, அவர்களுக்கான வாழ்க்கை பாதையை அமைத்து கொள்வதற்குள் பாதி ஆயுள் கழிந்து விடும். இதில் இறந்தவர்களை பற்றி கவலைப்பட நேரம் இருக்குமா என்ன. ஆனால் காலமும் கர்மாவும் கணக்கை நேர் செய்யாமல் விடாது போலும்.
எனக்கென்னமோ அந்தக் கர்ம வினை கழிந்தது இவர்களின் அன்பினால் ஏற்பட்ட கண்ணீரினால் தான் என்று தோன்றுகிறது. அடுத்த ஒரே வருடத்தில் என் பெரியப்பா மகளுக்குப் பிள்ளை பிறந்தது.
இதில் அந்த நாடி ஜோதிடர் கூறியது தான் ஹைலைட்டே. “இதை தீர்க்காம விட்டீங்கன்னா, இந்த கணக்கை நேர் செய்ய திரும்ப திரும்ப பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும்..” என்றார். இது எப்படி இருக்கு பாருங்க.
நான் அடிக்கடி யோசிப்பது இந்த விஷயத்தைத் தான். ஒருவர் அறியாமல் செய்த வினையே இந்தப் பாடுபடுத்துகிறது என்றால், தவறு என்று தெரிந்தே கருவறுக்கும் அற்பர்களின் சந்ததிகளின் நிலைமை எப்படி இருக்கப் போகிறதோ.. அதைக் காலம் தான் முடிவு செய்யும் போலும்.