காதல் எப்போது எப்படி யார் மேல் வரும்?
காதல் ஒரு மாயத் திரை. அதை எந்த வரைமுறைகளும் வரையறைக்குள் கொண்டு வர முடியாது. இப்படி இப்படி இருந்தால் காதல் அப்படி அப்படி நடந்து கொண்டால் காதல் என்றெல்லாம் யாரும் ஆணித்தனமாக கூறிவிட முடியாது.
படித்திருந்தால் காதல் வரும்,
பணம் வைத்திருந்தால் காதல் வரும்,
அழகாக இருந்தால் காதல் வரும்,
நல்லவர்கள் மீது தான் காதல் வரும் என்பதெல்லாம் கிடையாது.
நம்முடைய மனநிலைக்கு, நாம் அந்த தருணத்தில் இருக்கும் உணர்வுகளின் சமிக்ஞைகளுக்கு ஏற்ப, காதல் நம்மை தொற்றிக் கொள்கிறது.
பத்து நாட்கள் தொடர்ச்சியாக நம்முடைய இன்பத் துன்பங்களை, சுகதுக்கங்களை நாம் ஒருவருக்கு ஒருவர் பகிரும் பொழுது, பல நிலைகளை நம்முடைய மூளையானது கணக்கீடு செய்கிறது. ஒருவேளை நம் இருவரின் நிலைப்பாடுகளும், சிந்தனைகளும், கருத்துக்களும் ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றினால் அல்லது நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது போல் இருந்தால், இவர் தான் நமக்கானவர்/நமக்கானவள் என்னும் பிம்பத்தை நம்முடைய மூளை உருவாக்குகிறது. அதற்கு நாமும் காதல் என்று பெயர் சூட்டி விடுகிறோம்.
இந்த ஈர்ப்பு, கிளர்ச்சி, ஹார்மோன்களின் குத்தாட்டம் நமக்கு அதிபயங்கர சந்தோஷ உணர்வை அளிக்கிறது. அதுவே நாம் இருவருக்குள் இருக்கும் பிணைப்பினை அதிகப் படுத்துகிறது.
பின்னர் ஏன் 99 சதவிகித காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை என்று கேட்டால். காதல் கிளர்ச்சி வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு. காதல் செய்ய பொன், பொருள், பணம், அந்தஸ்து குடும்பம், சொந்த பந்தம் என்பது தேவையில்லை.
ஆனால் நிஜவாழ்வில் அன்பு, பாசம், பிணைப்பு என்பதைத் தாண்டி இவ்வுலகில் வாழ பணம் பொருள் இன்பம் சுற்றம் மிகவும் முக்கியமானது. அதை நிச்சயம் எந்த ஒரு மனதும் கணக்கீடு செய்யும். இதில் ஆண் பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. அதன் காரணமாகவே காதலிக்கும் போது நாம் காணாதது திருமணத்தின் போது நம் கண்ணுக்கு தெரிகிறது. அதனாலேயே காதலும் முறிவில் முடிகிறது.
வாழ்வில் சாதிக்காத யாரையும் பெரும்பாலான பெண்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
அதேபோன்று ஒரு பெண்ணால் தனக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை என நினைக்கும் ஆண்மகன் அப்பெண்ணை ஏற்பதில்லை. இதையாரும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இதிலிருந்து நான் கூறவருவது என்னவென்றால், தேவையில்லாமல் உங்கள் உணர்வுகளின் அதிர்வலைகளை காதல் என நம்பி கழு மரத்தில் ஏற வேண்டாம்.
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு எனக் கூறினால்,
ஒருவரைக் கண்டதும் உங்களுடைய மனம் அவர்களின் அனைத்தையும் கணக்கீடு செய்து, சரி இவர்கள் காதலிக்க தகுதியானவர் என்று கூறினால், தயவுசெய்து அவர்கள் மேல் காதலில் விழாதீர்கள். ஏனென்றால் நீங்கள் கணக்கீடு செய்வது எதுவுமே நூறு சதவிகிதம் உண்மையாக இருக்காது.
ஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாமல், அவர் மேல் ஒரு இனம் புரியாத உணர்வுப் பிணைப்பு ஏற்பட்டால், கண்ணை மூடிக்கொண்டு அவர்களை எப்படியேனும் திருமணம் செய்து கொள்ளுங்கள். நம்முடைய உள்ளுணர்வு என்றும் பொய்யுரைகாது என்பதே நிதர்சனம்.
காதல், எப்படி யார் மீது வரும் என்பது நமக்கு தெரியவே தெரியாது. அதுதான் உண்மை.
ஒருவரைக் கண்டதும், “மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே” எனும் பாடல் உங்கள் மனதை வருடிச் சென்றால், வாழ்த்துக்கள் நீங்கள் காதலில் தொபக்கட்டீர் என்று விழுந்து விட்டீர்கள் என அர்த்தம்.