மர்லின் மன்றோ படப் பாதிப்பில் உருவான ‘வாழ்க்கை ஒப்பந்தம்’
அந்த காலகட்டத்தில், மற்ற மொழி படங்களுக்கும் சென்னை தாய்வீடாக இருந்ததால் பல திரைப்படங்கள் தமிழ்- தெலுங்கு, தமிழ்- மலையாளம், தமிழ்-கன்னடம், தமிழ்- தெலுங்கு- கன்னடம் என உருவாக்கப்பட்டன. இப்படி உருவான பல படங்கள் வசூலையும் வாரிக் கொடுத்திருக்கின்றன. அதில் ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ படமும் ஒன்று.
நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்தார். ஜமுனா, நாயகி. கே.சாரங்கபாணி, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி உட்பட பலர் நடித்தனர்.பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ்கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். கண்டசாலா இசையமைத்த இந்த படத்துக்குப் பாடல்களை, தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார். ‘நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்’, ‘கனிவுடன் பாராயோ’, ‘கிருஷ்ணா உனக்கும் பயம்தானா?’, ‘போனா வராது’, ‘கொச்சி மலை குடகு மலை எங்களது நாடு’ என்பது உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
பாதாள பைரவி, மாயா பஜார் போன்ற பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் கே.வி.ரெட்டி இயக்கினார். ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, டாம் எவல் நடித்த ‘தி செவன் இயர் இட்ச்’ (The Seven Year Itch -1955) என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் இதை உருவாக்க நினைத்தார் கே.வி.ரெட்டி. அன்னபூர்ணா ஸ்டூடியோவின் முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரிக்க நினைத்தார். ஆனால், தயாரிப்பாளர் டி.மதுசூதன ராவுக்கு இந்தக் கதையின் மேல் நம்பிக்கை வரவில்லை.
இதனால், இயக்குநர் கே.வி.ரெட்டி, தனது நண்பர்கள் பி.எஸ்.ரெட்டி, பட்டாபிராம ரெட்டி ஆகியோருடன் இணைந்து ஜயந்தி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் முதல் தயாரிப்பாக உருவான படம் இது.ஹாலிவுட் படத்தின் மையக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, அப்படியே நம்ஊருக்கு ஏற்ப மாற்றி உருவாக்கினார்கள். தெலுங்கில் ‘பெல்லினாட்டி பிரமாணலு’ என்றபெயரிலும் தமிழில் ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்றும் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவானது. தமிழுக்காக சில கேரக்டர்களை மட்டும் மாற்றினார்கள்.
மிராசுதாருக்கு பிரதாப் என்ற மகனும், ருக்மணி என்ற மகளும் இருக்கிறார்கள். பிரதாப்பின் கல்லூரித் தோழர் கிருஷ்ணனுக்கும் ருக்மணிக்கும் காதல் மலர்கிறது. அவர்களுக்கு சோஷலிஸ்ட் தலைவர் ஒருவரால் சீர்திருத்தத் திருமணம் நடைபெறுகிறது. இந்தத் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகு கிருஷ்ணன் அலுவலகத்துக்கு வேலைக்கு வரும் ராதாவால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட, அது எப்படி முடிவடைகிறது என்பது படம். இந்தப் படத்தில் சீர்திருத்த திருமணம் பற்றிப் பேசியதை அந்த காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசினார்கள்.