தேசியப்பட்டியல்; சஜித் கூட்டணி பிளவுபடுகிறதா?
பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட கூட்டணி அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திர ஜனதா சபை, தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சிகளாக செயற்படுகின்றன.
கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு பாராளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை.
அதற்குக் காரணம், கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் வாக்குறுதி அளித்தபடி அந்த ஆசனங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், அந்தக் கட்சியின் தோற்கடிக்கப்பட்ட உறுப்பினர்களை தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும்தான்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் மூன்றாவது முதல் ஐந்தாம் இடங்கள் வரை அக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட சுதந்திர ஜனதா சபையின் டலஸ் அழகப்பெரும, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சங்கரன் விஜயசந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிசாம் காரியப்பர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாகப் போட்டியிட்டதுடன், அப்போது வாக்குறுதியளித்தபடி தேசியப் பட்டியல் எம்.பி பதவிகள் வேறு கட்சிகளுக்கு வழங்கப்படாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.