ஓநாய் மனிதன் மோக்லி….
1873ம் வருடம் உத்திரப்பிரதேசத்தில் புலன்சாகர் மாவட்டம்.. காட்டுப்பகுதியில் வேட்டையாடச் சென்ற ஒரு குழு .. வித்தியாசமான ஒரு காட்சியைக் கண்டு தங்களது வாகனத்தை நிறுத்தியது..
அவர்கள் கண்ட காட்சி இதுதான். ஒரு ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் தன் நான்கு கால்களால் (இருகைகளும் கால்களாய் ) ஊர்ந்து ஓநாய்கள் கூட்டத்துடன் சென்று கொண்டிருந்தான்.
இவர்களைக் கண்டதும் அவை ஒரு குகைக்குள் வேகமாக ஓடி மறைந்தன.. குழந்தையை மீட்க நினைத்தவர்கள் அந்த குகை வாசலில் நெருப்பை மூட்டவே, குகைக்குள் இருந்து ஓநாய் கூட்டங்கள் வெளியே வர ஆரம்பித்தன. ..அச்சிறுவனை வளர்த்த தாய் ஓநாய் முதலிலும், மற்றவை அடுத்தடுத்தும் சுட்டுக் கொல்லப்பட்டன. கைப்பற்றப்பட்ட அச்சிறுவன் உடனடியாக ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்கப் பட்டான். சனிக்கிழமை வந்து சேர்ந்ததால் அவனுக்கு தினா சனிச்சார் என்று பெயரிடப்பட்டது.
எவ்வளவு முயற்சி செய்தாலும் அவன் பேசவோ, படிக்கவோ , இரண்டு கால்களால் நடக்கவோ கற்றுக் கொள்ளவில்லை. சமைத்த உணவை உண்ண மறுத்து பச்சை மாமிசத்தை உண்டு கொண்டிருந்தான். விலங்குகளின் பல்வேறு ஒலிகளை எழுப்பி, அந்த பகுதியை அலறவிட்டுக் கொண்டிருந்த அச்சிறுவன் வேறு வழியில்லாமல் உடைகளை அணிந்து கொண்டாலும், பெரும்பாலும் நிர்வாணமாக இருப்பதையே விரும்பினான்.
தனது பற்களை எலும்புகளால் தூய்மையாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தான். குளிரோ வெப்பமோ அவனை ஏதும் செய்யவில்லை. பத்து வருடங்கள் ஆகியும்.. மன அமைதியின்றி ஒரு வித பயத்துடனேயே வாழ்ந்தான்.
மற்றவர்களோடு சேர்ந்து வாழ மறுத்தான். தனது குடும்பத்தை விட்டு முன் பின் அறிமுகமில்லாத வேற்றுலகமாகவே அந்த இடம் அவனுக்கு அது தோன்றியது. அதே மாநிலத்தில் மணிப்பூர் பகுதியில் இது போன்று மீட்கப்பட்ட அவனைவிட மூத்த ஒரு சிறுவனை அவனுடன் பழக விட்டனர். ( அக்கால கட்டத்தில் சுமார் நான்கு சிறுவர்கள் இது போல மீட்கப்பட்டிருந்தனர்.) விரைவிலேயே அவன் மூலம் நடக்க பழகிக் கொண்டான்.
அவன் மனிதர்களைப் போல் எளிதாக ஏற்றுக் கொண்ட ஒன்று புகைபிடித்தல்.. கடைசியில் தொடர் புகைப் பழக்கம் அவனுக்கு காச நோய்க்கு வழிவகுத்தது.
மனிதர்களுக்கேயுரிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இயலாமல் போன அந்த அப்பாவி 1895ல் கடுமையான காச நோயால் உயிரிழந்தான். இந்த சிறுவனின் வாழ்க்கை பற்றி அறிந்த ருட்யார்ட் கிப்ளிங் தி ஜங்கிள் புக் என்ற நாவலை எழுதினார். ஆனால் அதில் கூறப்பட்டது போல் அச்சிறுவனின் வாழ்க்கை அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. விலங்குகளோடு விலங்காக போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்தான்.
சூழ்நிலை ஒருவரை எந்த அளவு பாதிக்கும் என்பதை இச்சிறுவனின் கதை காலத்துக்கும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கும். மனிதனுக்குள் மிருகத்தையும் மிருகத்துள் மனிதத்தை யும் விதைக்கும் சூழல்.