ரணிலை பிரதிவாதியாக குறிப்பிட உயர் நீதிமன்றம் அனுமதி
வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான மனு ஜனாதிபதியின் சட்டத்தரணி சேனக வல்கம்பயவினால் சமர்பிக்கப்பட்டதுடன், அது உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த மனுவில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பெயரிடும் பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மனுவை மார்ச் 10ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.