30 லட்சம் சம்பளம் வாங்கினாலும் ரயிலில் மட்டுமே பயணிக்கும் நபர்.. காரணம் என்ன தெரியுமா?
ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் எப்பொழுதும் ரயில்களில் மட்டுமே பயணம் செய்வது குறித்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. பொதுவாக ஊதியம் அதிகரிக்க அதிகரிக்க நமது வாழ்க்கை முறையும் மாற்றம் காணும், நமது செலவு முறைகளும் மாற்றம் காணும்.
அந்த வகையில் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் வெளியூர் பயணங்கள் என்றால் கண்டிப்பாக விமான பயணத்தை தான் விரும்புவார்கள். ஆனால் ஒரு நபர் விமானங்களை தவிர்த்து எப்பொழுதுமே ரயில்களில் மட்டுமே பயணம் செய்வதாக தெரிவித்திருக்கிறார். அதற்கான காரணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
அண்மையில் சிராக் தேஷ்முக் என்ற எக்ஸ் தள பயனாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவருடன் பயணித்த நபரிடம் பேச்சு கொடுத்துள்ளார் . அந்த நபர் ஒரு மென்பொருள் பொறியாளர் என்றும் மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்றும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக அவருடைய ஆண்டு சம்பளம் 30 லட்சம் ரூபாய் என கூறினாராம். ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வாங்கக்கூடிய ஒரு நபர் விமானத்தில் செல்லாமல் ஏன் ரயிலில் பயணம் செய்கிறார் என்ற கேள்வி எழவே சிராக் தேஷ்முக் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகு எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
வேலை கிடைக்காமல் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் ஒருநாள் நான் ரயிலில் பயணம் செய்த போது ஒரு நபரை சந்தித்தேன். அவர் மூலமாகவே எனக்கு முதல் வேலை கிடைத்தது, அன்று முதல் நான் எங்கு செல்வதாக இருந்தாலும் ரயிலில் மட்டுமே செல்வேன். மிக மிக அவசரம் என்றால் மட்டுமே விமானத்தில் பயணம் செய்வேன் எனக் கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு பலரும் பின்னூட்டகளை பதிவு செய்துள்ளனர். விமான பயணங்களில் பொதுவாக அருகில் அமர்பவர்கள் ஒருவருக்கொருவர் பேச மாட்டார்கள். ஆனால் ரயில் பயணங்கள் நமக்கு பல நட்புகளை ஏற்படுத்தி தரும். சிறந்த அனுபவங்களை நமக்கு தரும். எனவே ரயில் பயணம் தான் சிறந்தது என ஒருவர் கூறுகிறார்.
மற்றொருவர் இப்படி தான் எனக்கும் என்னுடைய முதல் வேலை ரயில் சிநேகம் மூலமே கிடைத்தது என நினைவு கூர்ந்துள்ளார். இப்படி பலரும் ரயில் பயணங்கள் மூலம் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.