ஜப்பானை தாக்கிய ஷான்ஷான் சூறாவளி: மூவர் உயிரிழப்பு
மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி ஷான்ஷன் (Shanshan) ஜப்பான் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் ககோஷிமா மாகாணத்தின் சத்சுமசெண்டாய் நகருக்கு அருகில் கரையைக் கடந்தது.
மிகக் கடுமையான புயல்கள், நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் பெரிய அளவிலான சேதங்கள் பற்றிய எச்சரிக்கையையும் ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டிருந்தது.
மணிக்கு 252 km/h (157mph) வேகத்தில் அதிக காற்று வீசுயதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புயல் தாக்கத்தினால் 70 வயதுடைய ஒரு தம்பதியினரும், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மத்திய ஜப்பானில் உள்ள கமகோரியில் அமைந்துள்ள இவர்களது வீடு செவ்வாய்க்கிழமை தாமதமாக, சூறாவளியினால் அடித்துச் செல்லப்பட்டது.
வீட்டிலிருந்த மற்ற இரண்டு குடும்ப உறுப்பினர்களும் இரவு முழுவதும் மீட்பு முயற்சிகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு செய்திச் சேவையான NHK கூறியுள்ளது.
புயல் தாக்கத்தால் 12.5 மில்லியன் மக்கள் வசிக்கும் கியூஷுவின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 600 மி.மீ மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 255,00 வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ககோஷிமா மற்றும் மியாசாகி மாகாணங்களில் குறைந்தது 39 பேர் காயமடைந்துள்ளதாக NHK தெரிவித்துள்ளது.
டொயோட்டா மற்றும் நிசான் போன்ற முக்கிய கார் தயாரிப்பாளர்கள் இன்று ஊழியர்களின் பாதுகாப்புக்காக தங்கள் ஆலைகளை மூடிவிட்டனர்.
தெற்கு ஜப்பான் மற்றும் அங்கிருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சில அதிவேக ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வார தொடக்கத்தில், ஜப்பானின் முக்கிய தீவான ஹொன்ஷுவில் உள்ள மத்திய ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள 810,000 மக்களை வெளியேற்றுவதற்கான ஆலோசனைகளை உள்ளூர் அரசாங்கங்கள் வழங்கின.
மேலும் 56,000 பேர் ககோஷிமாவில் உள்ள கியூஷுவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோ உட்பட மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை வார இறுதியில் புயல் நெருங்கும் என்றும் எதிர்பார்க்கிறது.