செங்கடலில் தொடரும் பதற்றம்; பற்றி எரியும் எண்ணெய் கப்பல்
செங்கடலில் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடந்த வாரம் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல் இன்னும் தீப்பிடித்து எரிவதாகவும் இதனால் எண்ணெய்க் கசிவு அதிகமாக ஏற்பட்டிருக்கலாம் என பென்டகன் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் யேமனின் துறைமுக நகரமான ஹொடைடாவில் இருந்து பல எறிகணைகளுடன் பயணித்த கிரேக்கத்திற்குச் சொந்தமான MV Sounion என்ற குறித்த கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் விமானப்படை மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் இது தொடர்பில் கூறுகையில்,
”கப்பலை மீட்பதற்கு ஒரு மூன்றாம் தரப்பினர் இரண்டு இழுவை படகுகளை அனுப்ப முயன்றனர். ஆனால் ஹவுதிகள் அவர்களைத் தாக்குவதாக அச்சுறுத்தினர்.
இவை பொறுப்பற்ற பயங்கரவாத செயல்களாகும். இது உலகளாவிய மற்றும் பிராந்திய வர்த்தகத்தை தொடர்ந்து சீர்குலைக்கும். அப்பாவி பொதுமக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதிக்கிறது.
கப்பல் சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பயணித்தது.
கப்பலை மீட்க எவ்வாறு உதவுவது மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தணிப்பது எப்படி என்பதை தீர்மானிக்க அமெரிக்க இராணுவம் பிராந்தியத்தில் உள்ள ஏனைய பங்காளிகளுடன் இணைந்து செயல்படுகிறது.” என அவர் கூறினார்.
காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் போரில் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக 10 மாதங்களாக செங்கடலில் கப்பல்களைத் தாக்கி வருவதாக யேமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள் கூறுகின்றனர்.