தமிழ் மக்களுக்கு காலம் இட்ட கட்டளையே பொது வேட்பாளர்
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவு வரைக்கும் தமிழ்த் தேசிய உணர்வோடு தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் யுத்தத்தின் பின்னர் சிதறடிக்கப்பட்டார்கள். அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பிரதேசம், சாதியம், சமயமாக தமிழ்த் தேசியம் துண்டாடப்பட்டு வருகிறது. இவற்றால் அரசியல் ரீதியாகத் தமிழினம் மிகவும் பலவீனமாகத் பின்தள்ளப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.
இதனைக் கருத்திற்கொண்டே தமிழ் மக்களைத் தேசமாக மீண்டும் திரளச் செய்து அரசியல் அபிலாசைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த முடிவு காலம் இட்ட கட்டளை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா. அரியநேத்திரனுக்கும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதானிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை (24) நல்லூர் திவ்ய ஜீவன மண்டபத்தில் நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு கோட்பாட்டு ரீதியான முடிவு. இதனைப் புரிந்துகொள்ள விரும்பாதவர்கள் வெல்ல முடியாத தேர்தலில் எதற்காக போட்டி என்று விதண்டாவாதம் புரிகிறார்கள். எண்ணிக்கையில் மிகப் பெரும்பான்மையாக சிங்கள மக்களைக் கொண்ட இலங்கை தீவில் தமிழன் ஒருபோதும் ஜனாதிபதியாக வர முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெற முடியாது. ஆனால், தமிழ் மக்களை மீளவும் தேசமாகத் திரளச் செய்வதில் அவர் வெற்றி பெறுவார்.
தென்னிலங்கை வேட்பாளர்களிடையே நான்குமுனைப் போட்டி நிகழும் நிலையில் பொதுவேட்பாளர் தங்களின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ள தரப்புகளுடன் பேச வருமாறு அழைப்புக்கு மேல் அழைப்பு விடுக்கிறார்கள்.
அதே சமயம் அவர்களுடன் நேரடியாகவும் பின்கதவாலும் தொடர்புகளைப் பேணிவருகின்ற தமிழ் அரசியல்வாதிகளின் மூலம் பொதுவேட்பாளருக்கு எதிரான மூர்க்கத்தனமான கருத்துகளும் பரப்பப்பட்டு வருகின்றன. பொதுவேட்பாளர் துரோகியாகக் கூடச் சித்திரிக்கப்படுகிறார்.
பொது வேட்பாளர் பற்றித் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்த பின்பே முடிவெடுக்கலாம் என்றும் அவர்களுடன் பேரம் பேசலாம் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறிவருகின்றார்கள்.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வையேனும் ஆட்சி அதிகாரங்களில் இருந்த போது கூடச் செய்ய விரும்பாத தென்னிலங்கை தலைமைகளுடன் தேர்தல் நேரத்தில் பேச முற்படுவது அவர்களின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதற்கான ஒரு உத்தியே ஆகும். பொது வேட்பாளருக்கு எதிரான பரப்புரைகளின் பின்னால் உள்ள கபடத்தனங்களை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.