அமெரிக்கா-தென்கொரியா கூட்டு விமானப் பயிற்சி; வடகொரியா கண்டனம்
அமெரிக்க, தென்கொரிய விமானப் படைகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இவ்வாரம் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதாகத் தென்கொரிய விமானப் படை தெரிவித்துள்ளது.
ஐந்து நாள்களுக்கு அவை 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபடும் என்றும் தென்கொரியா அறிவித்துள்ளது.
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்தும் ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்டு’ பயிற்சிகளின் ஓர் அங்கமாக விமானப் பயிற்சி இடம்பெறுவதாகக் கூறப்பட்டது.
தற்காப்புச் சுற்றுக்காவல் விமானங்கள், பாவனைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுவதாகத் தென்கொரிய விமானப் படை கூறியது. எதிரி விமானத்தை இடைமறித்தல், ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ளுதல் போன்ற பாவனைப் பயிற்சிகளில் அவை ஈடுபடும்.
தென்கொரியாவில் உள்ள அமெரிக்கப் போர் விமானப் பிரிவுகள் இரண்டைச் சேர்ந்த விமானங்கள் இப்பயிற்சியில் ஈடுபடும்.
தென்கொரியாவில் கூட்டுத் தற்காப்பு நடவடிக்கைக்காக அமெரிக்கப் படையினர் 28,500 பேர் உள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்டு’ பயிற்சிகள் கொரியத் தீபகற்பத்தில் பதற்றத்தைத் தூண்டுவதாகவும், அணுவாயுதப் போருக்கான ஒத்திகைகள் என்றும் வடகொரியா சாடுவது வழக்கம்.
ஆகஸ்ட் 19ஆம் திகதி தொடங்கிய இந்த ஆண்டின் பயிற்சிகள், ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை நீடிக்கும்.
வடகொரியா அண்மை ஆண்டுகளில் குறுந்தொலைவு ஏவுகணைகள், நெடுந்தொலைவு ஏவுகணைகள், அணுவாயுதத் திட்டங்கள் என அதன் போர்த்திறனை அதிகரித்துள்ளது.
தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து தம்மை அச்சுறுத்தும் வகையில் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும் வடகொரியா கண்டனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.