Advertisementsசங்கதிகள்தேர்தல் களம்முச்சந்தி

பல்லாயிரம் பள்ளி மாணவர்களுக்கு அன்னமிட்டு அறிவூட்டும் ‘ஐயமிட்டுண்’ 100ஆவது நிறைவு வாரம்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

தாயகத்தில் சமூக மாற்றத்திற்கான ஊக்கியாக செயற்படும் ‘ஐயமிட்டுண்’ நிறுவனம், வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் பல்லாயிரம் பள்ளி மாணவர்களுக்கு அன்னமிட்டு அறிவூட்டி நவம்பர் மாதத்தில் 100ஆவது நிறைவு வாரத்தினை நிறைவு செய்துள்ளது.
100ஆவது நிறைவு வாரம்:
கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கடந்த நவம்பர் ஐந்தாம் திகதி ‘ஐயமிட்டுண்’ அமைப்பின் 100 ஆவது நிறைவு வாரத்தினை முன்னிட்டான நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.
பாடசாலையின் முதல்வர் தலைமையில் நிகழ்வு நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு முரளிதரன் மற்றும் ஐயமிட்டுண் அமைப்பின் நிறுவுனர் திரு முரளிதரன் மற்றும் கலாநிதி. சுகன்யா முரளிதரன் மற்றும் கிளிநொச்சி கரைச்சி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு தர்மரட்ணம் ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திரு கிருஸ்ணமூர்த்தி மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஐயமிட்டுண் நிறுவனம் பல சாதனைகள் படைத்து மூன்றாவது ஆண்டினில் காற்தடம் பதித்துள்ளது. இந் நிகழ்வின் போது கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றிருந்தது.
இல்லை என்று வந்த ஏழைகளுக்கு தானம் இட்டு தானும் உண்ண வேண்டும் என்பதே ஐயமிட்டுண் என்பதன் கருப்பொருளாகும். இல்லாதவர்க்கு தானம் இடுவது தருமங்களுள் சிறந்த தானமாகும்.
“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி சான்றோர் கூறி இருக்கின்றார்கள். தரும சிந்தனையை சமூகத்தில் வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம் வேண்டும்.
இலங்கை பிரதமருடன் சந்திப்பு:
ஐயமிட்டுண் திட்டத்தின் நிறுவனரும்
மூலகர்த்தாவான திரு. முரளிதரன் அவர்கள் கல்வி அமைச்சரான பிரதமரையும், பிரதிக் கல்வி அமைச்சரையும், அவுஸ்த்திரேலியத் தூதுவரையும் சந்தித்து இந்தத் திட்டத்தின் விளைவுகளைப் பற்றி அண்மையில் விபரித்திருந்தார்.
ஐயமிட்டுண் கடந்த பல வருடங்களாக தாயகத்தில் பின்தங்கிய பாடசாலைகளில் சமூகப்பங்களிப்புடன் நடைபெறும் ஒரு மாணவ சமூக வலுவூட்டல் திட்டமாகும். இதன் நோக்கம் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் மாணவர்களின் பசி மற்றும் போசாக்கின்மையை நீக்குவதனூடாகப் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவினை அதிகரித்து அவர்களின் கல்வி மட்டங்களை அதிகரிக்கச் செய்வதாகும்.
இந்தத் திட்டத்தில் பாடசாலை அட்சய பாத்திரம், சமூகச் சமையல், பாடசாலைத் தோட்டம் ஆகிய செயற்பாடுகள் உள்ளன. அட்சய பாத்திரத்தில் பாடசாலைச் சமூகம் தங்கள் பிள்ளைகளின் உணவிற்காத் தாங்கள் விரும்பும் பங்களிக்கக் கூடிய உணவுப் பொருட்களை பங்களித்து உணவூட்டலாம்.
சமூகச்சமையலில் சமூகம் தங்கள் பிள்ளைகளுக்கான உணவினைத் தயாரிப்பதுடன், பாடசாலைக் தோட்டத்தில் பாடசாலை தமக்கும் சமூகத்திற்கும் தேவையானதை விளைவித்துக் கொள்ளவும் ஊக்குவிக்கின்றனர்.
இதுவரை இந்தத் திட்டத்தில் 40,000 மாணவர்கள் உணவூட்டி ஊட்டமளிக்கப்படுகிறார்கள். இதனில் சமூகத்தின் பங்களிப்பு உச்சமாக இருக்கிறது. அதேவேளை மாணவர்களின் கல்விச் செயற்பாடும் அதிகரித்துள்ளது.
ஔவையாரின் ஆத்திச்சூடி வரிகளுக்கு ஏற்ப இலங்கையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றுவதை நோக்கமாக ஐயமிட்டுண் அமைப்பு கொண்டுள்ளது. 2022 ஜூலை ஆரம்பமாகி, அன்னமிட்டு அறிவூட்டிய ஐயமிட்டுண் அமைப்பின் சாதனைகள் பல.
மூன்றாவது ஆண்டினில் ஐயமிட்டுண்:
மூன்றாவது ஆண்டினில் தடம் பதிக்கும் ஐயமிட்டுண் அமைப்பு, “உண்பதற்கு முன் ஏழைகளுக்கு உணவைப் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று போதிக்கும் ஆழமான கொள்கையின் அடித்தளத்தினை பின்பற்றுகிறது.
வடக்கு கிழக்கு மலையகம் என எவ்வித பேதமின்றி பின்தங்கிய எல்லைக் கிராமங்களில் அனைவருக்கும் தமிழ் மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதற்கு,
புலம்பெயர்ந்த உறவுகள் பங்களிப்புடன் பல நலத்திட்டங்களை ஐயமிட்டுண் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
கல்வி என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதால், குடும்பத்தில் ஒருவருக்காவது கல்வியை போதித்தால் அதன்மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும். தாயகத்தில் மாணவர்கள் கல்வியை பெற பல தடைகள் காரணமாக உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்வதே ஐயமிட்டுன் அமைப்பின் பிரதான நோக்கமாகும்.
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேளை உணவளிக்கும் வகையில்
ஐயமிட்டுண் திட்டம் வடக்கு , கிழக்கு, மலையகம் என பல பின்தங்கிய பாடசாலைகளில் நடைமுறையில் உள்ளது.
இதன்மூலம் தங்களால் இயன்ற பொருட்களை பாடசாலை மாணவர்கள் கொண்டு வந்து பெற்றார் இணைந்து உணவை தயாரித்து பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்து உண்கின்றனர்.
மாற்றத்திற்கான ஊக்கியாக ஐயமிட்டுண்:
தாயகத்தில் பின்தங்கிய குழந்தைகள் எதிர்கொள்ளும் பட்டினி மற்றும் கல்வி சமத்துவமின்மையின் தடைகளை அகற்றுவதே ஐயமிட்டுண் அமைப்பின் நோக்கமாகும்.
சத்தான உணவு மற்றும் தரமான கல்வி வளங்களுக்கான நிலையான அணுகலை வழங்குவதன் மூலம், அடுத்த தலைமுறையினருக்கு பிரகாசமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு தேவையான கருவிகளை மேம்படுத்துவதை ஐயமிட்டுண் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக ஈடுபாடு மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் சமூகப் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் கற்கவும், வளரவும், செழிக்கவும் வாய்ப்புள்ள சூழலை வளர்க்க ஐயமிட்டுண் அமைப்பு செயற்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.