பங்ளாதேஷில் இந்து, சிறுபான்மையினர் மீதான வன்முறை: கோலாலம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பங்ளாதேஷ் தூதரகத்தின் முன்பாக கிட்டத்தட்ட 250 ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
பங்ளாதேஷில் உள்ள இந்து உள்ளிட்ட பல சிறுபான்மை சமூகத்தினர் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 37 அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டன.
போராட்டக்காரர்கள் பங்ளாதேஷ் தூதரகத்திடம் “பங்ளாதேஷில் உள்ள இந்து உள்ளிட்ட மற்ற சிறுபான்மையினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தில் இருந்தும் வன்முறையில் இருந்தும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டும் விதமாக உதவிகள் வழங்க வேண்டும்” என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
‘இந்துக்கள் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்’, ‘இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்’ போன்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது காண்பித்தனர்.
கடந்த சில வாரங்களாக பங்களாதேஷில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்டது. அவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார்.
நாட்டில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாததால் இந்து உள்ளிட்ட பல சிறுபான்மை சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
சிறுபான்மையினர்கள் வீடுகளும் தொழில் நடத்தும் இடங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் முன்னாள் பிரதமர் ஹசீனாவிற்கு நெருக்கமானவர்கள் என்று கருதி அவர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பங்ளாதேஷில் இருந்து பல்லாயிரக்கணக்கான இந்துகள் பக்கத்து நாடான இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைய தஞ்சம் கேட்டுவருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.