பலதும் பத்தும்

காலத்தால் அழியாத பல திரைக் காவியங்களை தந்த வைஜெயந்திமாலா

சென்னையில், அப்போதைய மெட்ராஸில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த M.D. ராமன் – வசுந்தராதேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் வைஜெயந்திமாலா. தாயார் வசுந்தராதேவியோ, பிரபலமான நடிகை. தலைசிறந்த நாட்டியத் தாரகை.

1933-ம் ஆண்டு பிறந்த வைஜெயந்தி மாலா சிறு வயது முதலே, நடனத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட வைஜெயந்திமாலா, வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நடனம் பயின்றார்.
சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோ அமைந்தவுடன் செட்டியார் எடுத்த முதல்படம் ‘வாழ்க்கை’. திரு. ப. நீலகண்டன் இப்படத்திற்கான கதையை எழுதியிருந்தார்.

வாழ்க்கை கதாபாத்திரத்திற்கு வைஜெயந்திமாலாதான் சிறந்த தேர்வு எனக் கணித்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், அவரைத் தொடர்புகொள்ளும் பணியை படத் தயாரிப்பு நிர்வாகிகளுக்கு அளித்தார். மாதம் 2 ஆயிரத்து 350 ரூபாய் சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டார் வைஜெயந்திமாலா.

‘வாழ்க்கை’ படத்தின் மூலமாகத்தான் வைஜெயந்திமாலாவின் கலையுலக வாழ்க்கை தொடங்கியது. படத்தில் இடம்பெற்றிருந்த ‘உன் கண் உன்னை ஏமாற்றினால்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. படமும் அமோக வெற்றிபெற்றது. ‘வாழ்க்கை’ கலையுலகைச் சேர்ந்த பலரது வாழ்க்கையை வளமாக்கியது.

வாழ்க்கையைத் தொடர்ந்து வைஜெயந்தி மாலாவின் கலையுலக வாழ்க்கை களைகட்டத் தொடங்கியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவரது புகழ் வளர்ந்தது. 1958-ம் ஆண்டு திரையுலக தீர்க்கதரிசி எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளிவந்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, வைஜெயந்தி மாலாவின் நடிப்பாற்றலையும், நடன ஆற்றலையும் நாடெங்கும் பறைசாற்றியது. இளவரசி மந்தாகினி கதாபாத்திரத்தில் வந்த வைஜெயந்தி மாலா, ரசிகர்களின் இதயங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டார்.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதை அம்சத்தோடு கைகுலுக்கிய பாடல்கள், நாட்டியப் பேரொளி பத்மினி, நடன அழகி வைஜெயந்திமாலாவுடன் இணைந்து நடத்திய நாட்டியாஞ்சலி, ஆகியவை அந்தக்காலந்தொட்டு இந்தக் காலம் வரை ரசிகர்களை வியந்து பார்க்கவைத்துக் கொண்டிருக்கிறது.

வைஜெயந்தி மாலா சிறந்த பரதநாட்டியக் கலைஞர் என்பதால், அவரது நடிப்பில் நடனத்தின் நளினங்கள் நடனமாடும். உணர்ச்சிகளின் அந்த ஊர்வலம் ரசிகர்களின் இதயங்களில் நிறைவடையும்போது, எல்லையற்ற இன்பம் இதயங்களில் ஒட்டிக்கொள்ளும், தரையில் கொட்டிவிட்ட கண்ணாடி துகள்களை, தண்ணீரில் நனைத்த துணியால் ஒற்றி எடுப்பது போல.
1960-ம் ஆண்டு வாசன் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த ‘இரும்புத்திரை’ படம், வைஜெயந்திமாலாவின் திரையுலக வாழ்வை தீர்மானிக்கும் படமாக அமைந்தது. நிஜ வாழ்வில், தாயும், மகளுமாக இருந்த வசுந்தராதேவி – வைஜெயந்திமாலா, இந்தப்படத்தில் தாயும், மகளுமாக நடித்தனர்.

குடகில் பிறந்தாலும், தமிழகத்தில் குடியேறிய காவிரி போல, தமிழகத்தில் பிறந்த வைஜெயந்திமாலா, இந்தி திரையுலகில், தனது வலதுகாலை எடுத்து வைத்தார். 1954-ம் ஆண்டு, பிரதீப் குமாருடன் இணைந்து, ‘நாகின்’ படத்தில், தனது இந்தி திரையுலகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1955-ம் ஆண்டுமுதல், இந்தி திரையுலகம், வைஜெயந்திமாலாவைத் தனதாக்கிக் கொண்டது.

‘மதுமதி’, ‘தேவதாஸ்’, ‘Naya Daur’, ‘சங்கம்’, ‘சூரஜ்’, ‘கங்கா ஜமுனா’ ‘Jewel Thief’, ‘Zindagi’, ‘Bahar’ ஆகிய திரைப்படங்கள் வைஜெயந்திமாலாவின் புகழை, வானம்வரை கொண்டு சென்றன.
வைஜெயந்திமாலா, ராஜ்கபூர் மற்றும் ராஜேந்திர கபூருடன் இணைந்து நடித்த ‘சங்கம்’ திரைப்படம், அவருக்கு பெரும் புகழ் தந்தது. முக்கோணக் காதல் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடித்து, வைஜெயந்திமாலா தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.

இந்தி படங்களில், கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தபோது, தமிழிலும் தனது வெற்றிக்கொடியை தக்க வைத்துக் கொண்டார் வைஜெயந்திமாலா. பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’ புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 1960-ம் ஆண்டு, யோகநாத் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
வேதாவின் இசையில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும், ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு பக்கபலம்.

1961-ம் ஆண்டு, இளமை இயக்குநர் ஸ்ரீதரின் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்த ‘தேன்நிலவு’ திரைப்படம், ரசிர்களுக்குத் தேன்நிலவாய் இனித்தது. துப்பாக்கிச் சூடுகளாலும், கண்ணீர் சிந்த வைக்கும் கலவரங்களாலும் தற்போது சிதைந்து போயிருக்கும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான காஷ்மீரில் தான் படப்படிப்பு முழுவதும் நடைபெற்றது. காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் வைஜெயந்திமாலா இணைந்து நடித்த இந்தப்படம் பெரும் வெற்றிபெற்றது.

திரையுலகப் புகழ் வைஜெயந்திமாலாவை, அரசியல் அரங்கைத் தொட்டுப் பார்க்க எத்தனித்தது. காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1984-ம் ஆண்டு, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என போற்றப்படும் இரா.செழியன், வைஜெயந்திமாலவிடம் தோற்றுப்போனார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொடூர மரணத்திற்குப் பிறகு, காங்கிரஸிலிருந்து வைஜெயந்திமாலா விலகினார்.

இந்தியத் திரையுலகில் வைஜெயந்தி மாலா, வானவில்லா? வண்ணத்துப் பூச்சியா? – இரண்டும்தான். மறையாத வானவில், உயிர்த் துடிப்போடு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாய் திகழ்தார்.புகழின் உச்சியில் இருந்தபோதே, தனது திரையுலக வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிட்ட வைஜெயந்திமாலா, தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத அங்கம். தமிழ்த்திரை ரசிகர்களின் மனங்களில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வரும் தங்கம்.

காலத்தால் அழியாத பல திரைக் காவியங்களை
தந்த திருமதி வைஜெயந்திமாலா அவர்களின் 91 பிறந்தநாள் இன்று
இனிய நல்வாழ்த்துக்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.