ரணிலின் வேட்பாளர் வாக்குறுதியும் சுமந்திரனின் தனிநபர் பிரேரணையும்: கூட்டுரிமைச் செயற்பாட்டை மீறும் நடைமுறைகள்
ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் தரப்பினர் சிலரிடம் ரணில் கையளித்த கையொப்பம் எதுவுமற்ற இரண்டு பக்க ஏழு அம்ச ஆவணம் சில வட்டாரங்களுக்குள் கசிந்துள்ளது.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தனித்துவமான இறைமையையும் முழுமையாகப் புறக்கணித்து அவர்கள் எந்தவொரு வகையிலும் தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்க இயலாதவாறு ஒற்றையாட்சிக்குள் முடக்கப்படுவதற்கு இடமளித்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் தொடர்ச்சிதான் உப்புச்சப்பு எதுவுமற்ற பதின்மூன்றாம் திருத்தம்.
அதைக்கூட முழுமையாகச் செயற்படுத்த இடமளிக்காமல் இதுவரை முடக்கியுள்ள இலங்கை ஒற்றையாட்சியில் மாறிமாறி அரசபீடம் ஏறும் ஆட்சியாளர்கள் தமிழர் வாக்குகளைப் பெறுவதற்காகப் பிச்சாபாத்திரம் ஏந்தும் போது மட்டும் அதை அமுலாக்குவது போலச் சில வாக்குறுதிகளைத் தருவது வழக்கம்.
அந்த நாடகம் கூட கால ஓட்டத்தில் அகால மரணமடைந்து கேவலமாகிக் குட்டிச் சுவராகியுள்ளது.
இதை மீண்டும் எடுத்துக்காட்டுவதாக ரணில் வழங்கியுள்ள இருபக்க ஆவணம் அமைந்துள்ளது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான தனிநபர் பிரேரணை இலங்கைப் நாடாளுமன்றில் மூன்றாம் வாசிப்புக்குச் செல்ல முன்னரே, முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என்ற மாயையைச் சில ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ளன.
இன்னொருபுறம், பொதுவேட்பாளரா புறக்கணிப்பா என்ற விவாதம் முன்னெடுக்கப்படுகிறது.
ஒற்றையாட்சி சட்டங்கள்
தேர்தல் அரசியல்வாதிகளுக்கு அப்பால், ஊடகவியலாளர்கள், கருத்துருவாக்கிகள், சட்டத்தரணிகள், கல்விமான்கள், இவர்கள் போதாதென்று சில வைத்தியர்களுமாக, பலவித வகையறாக்களுக்குள் செயற்படும் சிலர், 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி சட்டங்கள் மூலமாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்குத் தீர்வு காணலாம் என்ற போலி நம்பிக்கையை அவ்வப்போது கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.
இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டங்கள் எந்த வகையிலும் ஈழத்தமிழர்களின் “அரசியல் விடுதலை” தொடர்பில் எதற்கும் பொருத்தமாக ஒருபோதும் அமைந்ததில்லை.
பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைவதற்குக் காரணம் என்று கூறப்படும் சோல்பரி அரசியல் யாப்பு முதல், இலங்கை இறைமை அடைந்ததாக மார்தட்டும் 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்பும், 1978 ஆம் உருவாக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் ஈழத்தமிழர்களை ஓரம் கட்டின.
குறிப்பாக, ஈழத் தமிழர்களின் ஆலோசனைகள், விருப்பங்கள் பற்றி ஏற்புடைய எந்த ஆய்வுக்கும் இடமளியாது, அவர்களின் ஜனநாயக ஆணையின்றி மட்டுமல்ல, அவர்களின் முழு எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த மூன்று தருணங்களிலும் அரசியல் யாப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
13 ஆவது திருத்தம்
1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தமும் இவற்றைப் போன்றதே.
இந்தப் 13 ஆவது திருத்தத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த இயலாமைக்கு போர் காரணம் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த அரசியற் தீர்வு தொடர்பான வழிவரைபடம் அதற்கு இடமளிக்கவில்லை என்றும் சாட்டுச் சொல்லிவந்த இலங்கை அரசும் அதன் பிராந்திய, சர்வதேச பங்காளிகளும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான பதினைந்து ஆண்டுகளில் எதையும் சாதித்துக்காட்டவில்லை.
மாகாணசபைத் தேர்தலை செப்ரம்பர் 2012 இல் கிழக்கிலும் செப்ரம்பர் 2013 இல் வடக்கிலும் நடாத்தி, அவற்றின் காலம் முடிந்தபின்னர் தேர்தலற்று ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட அரசியல் விடுதலைக்கான பாதையை மடைமாற்றம் செய்யும் நோக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிடப்பட்டவையும் திட்டமிடப்படாதவையுமான சதிகள் ஒற்றையாட்சித் தேர்தல் அரசியலுக்குள் பல்வேறு முனைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. சாதாரண மக்கள் இவற்றை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
தமிழ்த்தேசியக் கட்சிகள்
தேர்தல் அரசியலுக்குள் தமிழ்த்தேசியக் கட்சிகள் ழுழ்கியுள்ளதாலும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் இயக்கம் ஒன்று தெளிவாக இயங்கவியலாத அளவு ஈழத்தமிழர்களுக்கு “அரசியல் மொட்டை” அடிக்கப்பட்டுள்ளதாலும் இந்தச் சதி நாடகங்கள் ஏதோவொரு வழியில் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற இடமளிக்கப்படுகிறது.
தற்போது ஜனாதிபதி வேட்பாளராக ரணில் தனது கையொப்பமிடாது வழங்கியுள்ள ஏழு அம்ச வாக்குறுதிகளும் ஈழத்தமிழர்களுக்குத் தேவையான எந்தவித மிகக்குறைந்த அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்காமல் எவ்வாறு மாகாணசபைகளை ஒற்றையாட்சியோடு ஒத்துப் போகும் உப அலகுகளாக மாற்றிவிடலாம் என்பதற்கான வழிவரைபடத்துக்குரிய ஏழு படிகளாகவே அமைந்துள்ளன.
“நல்லிணக்க அரசியல்” என்ற போர்வையில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய உரிமைக்கும் நீதிக்குமான பயணம் மொட்டையடிக்கப்பட்டு இலங்கைக்குள் முன்னெடுக்கப்படுவதான நாடகம் மீண்டும் அரங்கேறவுள்ளதை இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள ரணிலின் வரிகளுக்கு இடையே வாசிக்க முடிகிறது.
இவை ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்வதற்கான தேவை எழும் போது அவற்றை விரிவாகப் பார்ப்போம். இருப்பினும், குறிப்பான சில அவதானிப்புகளை சுருக்கமாக நோக்குவோம்.
அதிகாரங்கள்
மத்தியினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு மீளக் கையளிப்பதாக முதலாம் அம்சத்தின் முதலாம் உப அம்சம் குறிப்பிடுகிறது.
ஆனால், தொடர்ந்து வரும் உப அம்சங்களில், நாடளாவிய கொள்கைக் கட்டமைப்புக்குள் கல்வி, விவசாயம், சுற்றுலா போன்றவற்றை செயற்படுத்தும் பொறுப்பையே மாகாண சபைகள் கொண்டிருக்கும் (தனது மாகாணத்துக்கு ஏற்ற திட்டமிடலை வடக்கோ கிழக்கோ மேற்கொள்ள இயலாது என்பது இதன் பொருள்) என்று ஒரு உப அம்சம் இயம்புகிறது.
தென்னிலங்கை மாகாண சபை முதல்வர்களின் விதந்துரைகளை விவாதித்தல் என்று இன்னொரு உப அம்சமும், பதின்மூன்றாம் திருத்தத்தால் ஏற்பட்டுள்ள இரண்டு சமாந்தர நிர்வாகத் தன்மையை மாவட்ட மட்டத்தில் இல்லாது செய்தல் என்று பிறிதொரு உப அம்சமும் அமைந்துள்ளன.
பிரதானமான ஏழு அம்சங்களில் ஒரு அம்சம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமாந்தரமாக மாகாணசபைத் தேர்தல்களில் பங்கேற்றுப் பதவி வகிக்கலாம் என்று குறிப்பிடுகிறது.
அதைப் போல நாடளாவிய காணி ஆணையம் என்று ஒரு பொறி முறையும் காணிக் கொள்கைச் சட்டம் என்று ஒரு சட்டமும் அமுலாக்கப்படும் என்று இன்னொரு அம்சம் குறிப்பிடுகிறது.
மாகாணசபைகளிடம் பெயரளவில் இருக்கும் அதிகாரங்களைக் கூட நாடளாவிய பொறிமுறைகளும் சட்டங்களும் நடைமுறையில் எவ்வாறு மொட்டையடிக்கும் என்பதை விலாவாரியாக விவரிக்கவேண்டிய தேவை இங்கில்லை.
சுமந்திரனின் தனிநபர் பிரேரணை
பதின்மூன்றையே மொட்டையடிக்கும் “மொட்டைக் கடதாசி வாக்குறுதி” ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களை பழைய முறைப்படி நடத்துமாறு வலியுறுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தனிநபர் பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாம் வாசிப்பைக் கண்டுள்ளது.
மூன்றாம் வாசிப்பு ஊடாக அது நிறைவேற முன்னதாக, தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் முறையில் குறித்த தனிநபர் பிரேரணையின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மின் இதழ் நாளிதழ் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலைப் பதிப்பில் செய்தி வெளியிட்டது.
இலங்கை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தனிநபர் பிரேரணையின் இரண்டாம் வாசிப்புக்கு, வாக்கெடுப்போ விவாதமோ தேவையில்லை. எந்த ஒரு சட்டமூலத்துக்கும் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதம் அல்லது வாக்கெடுப்பு என்று எவரேனும் கேட்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு அனுமதிக்கப்படலாம்.
முக்கியமான அரசியலமைப்புச் சட்டமூலங்களுக்கு விவாதமும் வாக்கெடுப்பும் நிச்சயமாக அவசியமானது. ஆனால் தனிநபர் பிரேரணையின் இரண்டாம் வாசிப்புக்கு விவாதம் வாக்கெடுப்பு கோரப்படுவதில்லை.
ஆகவே, விவாதம் இன்றி வாக்கெடுப்பும் இல்லாமல் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம் என்று தலைப்பிட்டு வெற்றி என்ற தொனியில் செய்தி எழுதப்பட்டமை வேடிக்கையானது.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் பிரகாரம் சட்ட மூலம் அல்லது தனிநபர் பிரேரணை ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாம் வாசிப்புக்கு அனுமதிப்பது வழமை.
செய்தி மொழியில் இரண்டாம் வாசிப்பு முடிவுற்றது, சமர்ப்பிக்கப்ட்டுள்ளது அல்லது கடந்துள்ளது என்று தான் அதை எழுத வேண்டும்.
தனிநபர் பிரேரணைக்கான நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 52 – 53 பகுதிகளின் 10 ஆவது சரத்தில், இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாவது வாசிப்பின் பின்னர் 72 ஆம் பிரிவுக்கு அமைவாக நிறைவேற்றப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விதி, சட்டவாக்கக் குழு சமர்ப்பிக்கும் இரண்டாம் வாசிப்புக்கும் பொருந்தும்.
அதன் ஆங்கிலப் பதம் இப்படித்தான் வருகின்றது: After the Bill has been reported to Parliament, the Bill shall be read a Third time and passed in terms of Standing Order 72.
ஆகவே , சுமந்திரன் சமர்ப்பித்த இரண்டாம் வாசிப்பு மூன்றாவது வாசிப்பாக மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும். இதுதான் உண்மை.
“நிறைவேற்றம்” என்று தலைப்புச் செய்தி
அதற்கிடையில் “நிறைவேற்றம்” என்று தலைப்புச் செய்தி எழுதியமைக்குப் பின்னால் சமாந்தரமான அரசியல் நோக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது.
அதாவது, 2025ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடைபெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் விதைக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்கப்படவேண்டிய மூன்றாம் வாசிப்பு சுமந்திரனின் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்படமாட்டாது. அது சட்டவாக்கக் குழுவின் சட்டமூலமாகவே கருதப்படும்.
ஆகவே, அது சம்பந்தப்பட்ட அமைச்சரே மூன்றாவது வாசிப்பை சபையில் சமர்ப்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார் என்பதையும் மக்களுக்கு செய்திகளை வழங்குவோர் ஒரு சேரத் தெரிவிப்பது தான் நியாயமான ஊடக நடைமுறை.
சுமந்திரனின் குறித்த தனிநபர் பிரேரணை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது.
நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் எந்த ஒரு சட்டமூலத்துக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் அந்த வழக்கு பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும்.
ஆறு மாதங்கள் கடந்தும் வழக்கு பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லையானால் குறித்த சட்டமூலத்தை மீண்டும் இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.
இதன் ஆங்கில வாசகம் இப்படி அமைந்துள்ளது: If the Report of the Minister is not received within six months, the Bill is placed in the Order Paper for Second Reading upon such a day as the Member in charge of it desires in terms of Standing Order 52 (7).
இந்த விதியின் பிரகாரமே குறித்த தனிநபர் பிரேரணையின் இரண்டாம் வாசிப்பை சுமந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்திருக்கிறார். சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது பற்றி அவர் பேசியிருக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் இதற்கு இருந்துள்ளது.
ரணிலின் உறுதிகள்
சில வாரங்களுக்கு முன்னர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு சென்றபோது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில பகுதிகள் அமுல்படுத்தப்படும் என்று உறுதியளித்ததாக சுமந்திரன் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே சுமந்திரனிடமும் மாவை சேனாதிராஜாவிடமும் ரணில் விக்கிரமசிங்க 13 ஐ நடைமுறைப்படுத்துவது பற்றிய தனது உத்தரவாத்தை ஆங்கிலத்தில் இரண்டு பக்கத்தில் கையளித்திருக்கிறார்.
இது பற்றிய உள்ளகத் தகவல்கள் கொழும்பில் கசிந்துள்ளன. அதுவும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அவசரம் ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இங்கே 13 ஐ நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை இல்லை. 2012 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரையான ஜெனிவா மனித உரிமைச் சபையின் இலங்கை பற்றிய தீர்மானங்களில் 13 அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
ஏற்கனவே ஒற்றையாட்சி சட்டத்தில் உள்ள ஒரு விடயமான 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பிரதான கடமை.
ஒவ்வொரு சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. இதனை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்புக்கான அவசியம் தேவையில்லை.
சுமந்திரனின் செயற்பாடு
கூட்டுரிமைச் செயற்பாட்டை சுமந்திரன் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதியேற்ற நாளில் இருந்தே வெட்டியோட ஆரம்பித்துவிட்டார். அதன் உச்சக் கட்டமே தமிழரசுக் கட்சியின் தற்போதைய அவல நிலை ஆக உருவெடுத்துள்ளது.
ஆனால் அதனை தனி ஒருவராக ரணில் விக்கிரமசிங்கவுடன் மாத்திரம் பேசிக் கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்கம் பற்றியே கேள்விகள் எழுகின்றன.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளைக் கடந்து தனியொருவராக தமிழ்ச் சமூகத்தின் அரசியல் உரிமைகள் பற்றிப் பேசுவதானது, எண்பது வருடகால இனப்பிரச்சினையின் தரத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைகின்றது.
உரிமை பற்றிய பேச்சு என்பது அதுவும் ஜனநாயகச் சூழலில் ஒரு கூட்டுச் செயற்பாடாக இருக்கவேண்டும். கட்சி அரசியலையும் தாண்டிய கட்டுப்பாட்டுக்குள் அது இருக்கவேண்டும்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டம் பற்றிய விளக்கம் சாதாரண பொது மக்களுக்கும், ஏன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் மற்றும் செய்தியாளர்கள் பலருக்கும் தெரிவதில்லை.
நாடாளுமன்ற விதிகளில் சட்டமூலங்கள் நிறைவேற்றம் என்பதற்கு ஆங்கிலப் பதம் (Executed) என்றுதான் உண்டு. அதாவது மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டு சபாநாயகரும் கையெழுத்திட்ட பின்னரே குறித்த சட்டமூலம் நிறைவேற்றம் என்று செய்தி மொழியில் எழுத வேண்டும்.
மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டாலும் அதனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றுதான் தமிழில் செய்தி எழுத வேண்டும்.
சபாநாயகர் கையொப்பமிட்ட பின்னரே எந்த ஒரு சட்டமூலமும் சட்டமாக நிறைவேற்றம் (Executed) என்று அர்த்தப்படும்.
அ. நிக்ஸன்