வட, கிழக்கில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி; கொட்டும் மழையிலும் விண்ணைப் பிளந்த கதறல்கள் (Photos)

தாயக மண்ணினதும் மக்களதும் விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு, இம்முறை கொட்டும் மழை ,வெள்ளம் ,புயல் என இயற்கை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பெரும் உணர்வெழுச்சியுடன் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

வடக்கு, கிழக்கில் 30 இற்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் கொட்டும் மழை,வெள்ளத்திற்கு மத்தியிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் மக்கள் எதனையும் பொருட்படுத்தாது பங்கேற்று தமது மாவீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் .

வடக்கு,கிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமான நிலையில் எழுச்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு துயிலுமில்லங்கள் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் எழுச்சிக் கோலம் பூண்டிருந்தன. உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று மாலை 6.05 மணியளவில், ஆலயங்களில் மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட அகவணக்கத்தை அடுத்து 6.07 மணியளவில் பொதுச்சுடர்கள் மாவீரர்களின் பெற்றோர்களால் ஏற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் , நண்பர்கள்,பொது மக்கள் ,அரசியல்வாதிகள் மதத்தலைவர்கள் .சிவில் சமூகப்பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த ஏனையவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அந்த அஞ்சலிகளால் மாவீரர் துயிலும் இல்லங்கள் எங்கும் அழுகுரல்களும் கதறல்களும் நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்தன .

தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாவீரரின் இருந்து அவர்களது பெற்றோர்கள் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் அஞ்சலி செலுத்த வருகை தந்து தமது பிள்ளைகளுக்கு, சகோதர, சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை யாழ் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் பங்கேற்று மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி தமது வணக்கத்தை செலுத்தினர்.

வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு உயிர் நீர்த்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு வழங்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *