பரிஸ் ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலமாக நிறைவு பெறுகிறது
33ஆவது ஒலிம்பிக் திருவிழா பரிஸில் கடந்த ஜூலை 26அம் திகதி கோலாகலமாக தொடங்கியது. இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் பரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
பரிஸ் ஒலிம்பிக் திருவிழாவில் 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இம்முறை ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது. நிறைவு நாளான இன்று 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது.
தில் மகளிருக்கான மராத்தான், ஆடவருக்கான வாலிபால், மகளிர் கூடைப்பந்து, மகளிர் வாலிபால், மகளிர் நவீன பென்டத்லான் மற்றும் ஆடவர், மகளிர் மல்யுத்த போட்டிகள் நடைபெறுகின்றன.
பதக்கங்களுக்கான அனைத்து போட்டிகளும் முடிவடைந்த பின்னர் இரவு 12.30 மணி அளவில் பிரம்மாண்டான நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய தி ஸ்டேட் டி பிரான்ஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறுகிறது.
நிறைவு விழாவின் இறுதியில் ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக் (2028) நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
நிறைவு விழாவில் ஹாலிவுட் நட்சத்திரமான டாம் க்ரூஸ் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விழாவில் 5 முறை கிராமிய விருது வென்ற அமெரிக்க பாடகியான கேப்ரியெல்லா சர்மியெண்டோ வில்சன் தனது நாட்டின் தேசிய கீதத்தை பாட உள்ளார்.
கோலாகலமாக நடைபெறும் நிறைவு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து நடனமான உள்ளனர். அக்ரோபாட்ஸ் மற்றும் சர்க்கஸும் இடம் பெறுகிறது. இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.