‘ஆஸ்திரேலியாவுக்குள் சில நட்பு நாடுகள் உளவு வேலை செய்கின்றன’
ஆஸ்திரேலியாவின் உளவு அமைப்பு தலைவர் மைக் பர்கஸ், தங்கள் நாட்டிற்குள் சில நட்பு நாடுகளின் ஒற்றர்கள் உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒற்றர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டால் அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஈரான் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் உளவு வேலைகளில் ஈடுபட்டதை வெளிப்படையாக கான்பரா வெளியிட்டது.
ஈரானை போல் மற்ற சில நாடுகளும் ஆஸ்திரேலியாவுக்குள் ரகசிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, அவை ஆஸ்திரேலியாவின் அரசியல் கட்டமைப்பு, புலம்பெயர்ந்த சமூகங்களை குறிவைத்து வேலை செய்வதாக திரு மைக் பர்கஸ் தெரிவித்தார்.
“புலம்பெயர்ந்த சமூகங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக மூன்று அல்லது நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டோம். அவர்களில் சிலர் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கமான நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள்”, என்று மைக் பர்கஸ் ‘ஏபிசி’ தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்தபோது கூறினார்.
ஈரானைத் தவிர்த்து மற்ற நாடுகளின் பெயர்களை மைக் பர்கஸ் வெளியிட மறுத்துவிட்டார்.
வெளிநாட்டு தலையீடு, உளவு, அரசியல் நோக்கத்திற்காக கலவரங்களை ஏற்படுத்துவது போன்றவை ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மைக் பர்கஸ் குறிப்பிட்டார்.
“புலம்பெயர்ந்த சமூகங்களில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், அவர்களில் சிலர் ஆஸ்திரேலியாவில் வாழும் ஆஸ்திரேலியர்களுக்கு அச்சுறுத்தல் தர முயற்சி செய்கின்றனர். நாட்டின் அமைதியை கெடுக்க நினைப்பவர்களை அடையாளம் கண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்தார்.
2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தேர்தலில் வெளிநாட்டு தலையீடு இருக்கவிருந்ததை தங்களது உளவு அமைப்பு தடுத்து நிறுத்தியதாக பர்கஸ் தெரிவித்தார். பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து தேர்தல் முடிவுகளை மாற்ற வெளிநாட்டு உளவாளிகள் திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.