தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்யகள் தாக்குதல்; நால்வர் வைத்தியசாலையில்
தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆறுகாட்டுதுறையை சேர்ந்த மீனவர்கள் நேற்று சனிக்கிழமை மாலை பைபர் படகு மூலம் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இதன்போது 04 படகுகளில் வருகைத்தந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை வழிமறித்து கூறிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கை கடற்கொள்ளையர்களால் 700 கிலோ கிராம் நிறையுடைய வலை, ஜிபிஎஸ் கருவி,கையடக்கதொலைபேசிகள், அணிந்திருந்த தங்க நகைகள், மோதிரம் உள்ளிட்ட பொருட்களையும் பறித்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் காயமடைந்த இந்திய மீனவர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வேதாரண்யம் கடலோர காவற்படை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.