13 ஆண்டுகளின் பின் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வன்முறை; கனேடிய பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் ஏற்பட்டுள்ள வனமுறைச் சம்பவங்களை தொடர்ந்து, கனடா தனது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, பிரித்தானியாவிற்கு பயணிக்கும் கனடிய குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடிய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
வடமேற்கு இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் (Southport) கத்திக்குத்து தாக்குதலில் ஒன்பது, ஏழு மற்றும் ஆறு வயதுடைய மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐந்து குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர் முஸ்லீம் புகலிடக் கோரிக்கையாளர் என்று சமூக ஊடகங்களில் முதலில் தவறான வதந்திகள் பரவின.
இதனையடுத்து சவுத்போர்ட்டில் உள்ளூர் மசூதியை மையமாகக் கொண்டு ஆரம்பமான வன்முறைகள், இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து வரை பரவியுள்ளது.
இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவங்களும் பதவாகியிருந்தன.
இந்நிலையில், தொடரும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடந்து வரும் வன்முறை மோதல்கள் காரணமாக இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கூட எந்த நேரத்திலும் வன்முறையாக மாறலாம் என கனடிய அரசாங்கம் எச்சரித்தது.
எவ்வாறாயினும், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடந்த காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளை கனடிய அரசாங்கம் சுட்டி காட்டியுள்ளது.
2011 லண்டன் கலவரத்திற்குப் பிறகு பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான வன்முறை இதுவாகும். இதனால் பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.