பங்களாதேஷில் இராணுவ ஆட்சி; தளபதி வாக்கர் உஸ்-ஜமான் சற்றுமுன்னர் அறிவிப்பு
பங்களாதேசில் இராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக இராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இங்கு இராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பங்களாதேஷில் அனைத்து பாடசாலை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அந்நாட்டில் இடைக்கால அரசை இராணுவம் அமைப்பதாக இராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவோம். கடினமான சூழலில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது தொடர்பில் அந்நாட்டு மத்திய அரசு எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியவர். வங்கதேச விடுதலைக்கு காரணமான தேசத் தந்தை எனப் போற்றப்பட்டவர். ஆனால், வங்கதேசம் விடுதலையான சில ஆண்டுகளிலேயே முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் சொந்த நாட்டு இராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர்.
தற்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் சொந்த நாட்டு மக்களின் புரட்சியால் நாட்டை விட்டே தப்பி ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது கிட்டதட்ட இலங்கை அரசு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை ஒத்ததாக கருதப்படுகின்றது. கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் வெடித்த அரகலய எனப்படும் மக்கள் புரட்சியால் இந்த நாட்டின் வெற்றி நாயகர்களாக கருதப்பட்ட ராஜபக்சர் சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதியாக இருந்து கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவு ஊடாக சிங்கப்பூருக்கும், அவரது சகோதரரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கும் தம்பிச் சென்றனர்.
ஜனாதியாக தெரிவான ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்துக்கும் பலத்த இராணுவப் பாதுகாப்பை வழங்கினார்.
பங்களாதேஷில் ஏற்பட்ட வேலையின்மை அதிகரிப்பு, இராணுவ குடும்பங்களுக்கு மாத்திரம் 90 சதவீதமான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட காரணமாக மாணவர்கள் மற்றும் படித்த பட்டதாரிகளால் போராட்டம் வெடித்தது.
இலங்கையிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, முறையற்ற நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே இலங்கையில் போராட்டம் வெடித்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.