தமிழக கடற்கரையை நோக்கி நகரும் புயல் 2 நாட்களின் பின் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்
சென்னையில் புயலை எதிர்கொள்ள பொலிஸார் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மாநகரம் முழு வதும் 12 பேரிடர் மீட்பு படையினர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 12 பொலிஸ் துணை அத்தியட்சகர் அலுவலகங்களுக்கும் ஒரு பேரிடர் மீட்பு படையினர் செயலாற்றும் வகையில் 12 மீட்பு குழுவினர் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மீட்பு குழுவில் புயல் பாதிப்பை முழுமையாக எதிர்கொள்ளும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற பொலிஸார் இடம் பெற்றுள்ளனர்.
புயல் பாதிப்பின்போது மரங்கள் சாய்ந்து விழுந்தால் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தும் வகையில் இந்த குழுவினரிடம் மரம் அகற்றும் எந்திரங்களும் உள்ளன. பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு உடனடியாக சென்று இந்த மீட்பு படையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சென்னை முழுவதும் 18 ஆயிரம் பொலிஸாரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.
சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் பொலிஸார் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர 800 தீயணைப்பு படை வீரர்களும் சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று இரவு புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
அதன்பிறகு, தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.