பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த சபாநாயகர் இடமளிக்கக்கூடாது
ஜனாதிபதி தனக்கு தேவையான பொலிஸ்மா அதிபரை வைத்துக்கொண்டு ஏதாவது சதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவே முயற்சிக்கிறார். அதேபோன்று, பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முற்படுகிறார்கள். அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம். இதன் பயங்கரமான நிலையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் பிரதமரின் விசேட உரைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தின் ஒரு பகுதி என்ற கருத்தை பிரதமர் தெரிவிக்கிறார். ஆனால் இந்த சபையில் ஜனாதிபதி இதற்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில், அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று துறையின் ஒரு பகுதி என விவாதிட்டிருந்தார். அதனால் தங்களுக்கு தேவையான முறையில் இதற்கு பொருள்கோடல் தெரிவிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சபாநாயகர், எமது அனைத்து உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்காக நாங்கள் அனைவரும் நியமித்துக்கொண்ட ஒருவர். அதனால் சபாநாயகரை பாதுகாக்கும் பொறுப்பு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.
அரசியலமைப்பு பேரவையின் தலைவராக நீங்கள் எடுத்த தீர்ப்பொன்றை சவாலுக்குட்படுத்தியே குறித்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உங்களது தர்க்கத்தை கருத்திற்கொண்டுதான் உயர் நீதிமன்றம் வேறு ஒரு நபரின் பதவி தொடர்பில் உத்தரவு வழங்கி இருக்கிறது. அது உங்களுக்கு உரியதல்ல. அதனால் இதில் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
உங்களை பழிக்கடாவாக்கிகொண்டு, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தனக்கு தேவையான பொலிஸ்மா அதிபரை வைத்துக்கொண்டு ஏதாவது சதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவே முயற்சிக்கிறார். அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம்.
அதேபோன்று பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம். இதன் பயங்கரமான நிலையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றார்.