பொன்சேகா, விஜயதாச களமிறங்குவதன் நோக்கம் என்ன?
இலங்கைத் தீவின் அரசியல் களம் மிகவும் தீர்மானமிக்க ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது முதல் அரசியல் பேரம் பேசல்கள் தீவிரமடைந்துள்ளன.
பலர் கட்சித் தாவல்களுக்கு தயாராகிவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேடையில் ஏறவுள்ளனர்.
முதல் வேட்பாளராக கட்டுப்பணத்தை செலுத்திய ரணில்
ஆளுங்கட்சியில் இருந்து ஒருசிலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பக்கம் தாவவும் உள்ளனர். இதற்கு மத்தியில் பிரதான ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஆதரவு யாருக்கு என்பதை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்க உள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு ஆதரவாக பரந்தப்பட்ட கூட்டணியொன்று உருவாக வேண்டும் என்பதற்காகவுமு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் முதல் வேட்பாளராக ரணில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
பொது வேட்பாளர் என்ற விம்பத்தை பயன்படுத்தியே தென்னிலங்கையில் போர் வெற்றி நாயகனமாகவும் எவராலும் வீழ்த்த முடியாத பலம்பொருந்திய தலைவராக வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை ரணில் விக்ரமசிங்க வீழ்த்தியிருந்தனர்.
உருவாகும் அரசியல் கூட்டணி
அதே நிலைப்பாட்டை சற்று மாறுதலாக இம்முறை ரணில் கையில் எடுத்துள்ளார். அவரை அவரே பொது வேட்பாளராக அறிவித்துக்கொண்டு அவருக்கு ஆதரவான ஒரு வட்டாரத்தை உருவாக்கி வருகிறார்.
அமைச்சரவையில் உள்ள பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுடன் கைகோர்த்துவிட்டனர். கட்சியில் எஞ்சியுள்ளவர்களை மாத்திரமே அவர் தமது கூட்டணியில் இணைக்க வேண்டியுள்ளது.
பொதுஜன பெரமுனவை கட்டாயப்படுத்தி தம்மை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு ரணில் ஈட்டுவந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தேர்தலில் உருவாகும் அரசியல் கூட்டணி வெற்றிபெற்றால் அதே கூட்டணியே மீண்டும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடும்.
தமிழ் பொது வேட்பாளரின் பின்புலம்
அதனால் பொதுஜன பெரமுன என்ற கட்சி காணாமல்போய்விடும் என பசில், மகிந்த, நாமல் உள்ளிட்டவர்கள் அச்சமடைந்துள்ளமையாலேயே ரணிலுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்த தயங்கி வருகின்றனர்.
ரணில் தமது வெற்றியை உறுதி செய்தவற்கான வேலைத்திட்டத்தை கடந்த பல மாதங்களுக்கு முன்னதாகவே தயாரித்துவிட்டதாக கூறும் அரசியல் ஆய்வாளர்கள், அவரின் நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் விஜேதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா போன்றோரும் தமிழ் பொது வேட்பாளரும் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
அதேநேரம் தமிழ்ப் பொதுவேட்பாளர் பின்னணியில் இந்தியா என்ற கதைகளும் இல்லாமலில்லை.
தென்னிலங்கை கடும்போக்குவாத வாக்குகளை இதுவரை ரணில் விக்ரமசிங்க பெற்றதில்லை. அதுதான் அவர் 1994ஆம் ஆண்டுமுதல் 22 தேர்தல்களில் தோல்வியடைய பிரதான காரணமாகவும் இருந்துள்ளனது.
பல்வேறு ரகசிய பேச்சுகள்
இம்முறை விமல் வீரவங்ச, உதய கம்மன்பில போன்ற பேரினவாத கடும்போக்குவாதிகள் கடும்போக்குவாத வாக்குகளை சிதறடிக்க கூடும் என்பதாலேயே அவர்களை இணைத்துக்கொள்வதில் ரணில் ஆர்வம் காட்டவில்லை.
ராஜபக்சர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள தமிழ் மக்கள் மாற்று வேட்பாளர்களில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் உருவானால் சஜித்துக்கு செல்லும் குறிப்பிடத்தக்களவான வாக்குகளை சிதறடிக்க முடியும் என்பது ரணிலின் கணிப்பு.
சி.வி.விக்னேஸ்வரன் போன்றோர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டுவந்த பின்புலத்தில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு வர பல்வேறு ரகசிய பேச்சுகள் இடம்பெற்றிருக்க கூடும் என்பது அரசியல் ஆய்வாளர்களது கருத்து.
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
அண்மையில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட செல்வராசா கஜேந்திரன் எம்.பி, தமிழ் பொது வேட்பாளர் பின்புலத்தில் அரசாங்கமே இருப்பதாகவும் அரசாங்கத்துடன் உறவாடியவர்களை இந்த விடயத்தை முன்னெடுப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததுடன், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதேபோன்று அமைச்சரவைக்குள் இருந்து கொண்டு வேட்பாளராக போட்டியிட போவதாக கூறும் விஜேதாச ராஜபக்ச மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது அல்லது அவருக்கு எதிராக எவ்வித கருத்துகளையும் முன்வைக்காதிருக்க காரணமமும் அவரது பின்புலத்தில் ரணில் விக்ரமசிங்க இருக்க கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த மதப்பீடங்கள் மத்தியில் விஜேதாச ராஜபக்சவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதனால் பௌத்த சித்தாந்தகளை அதிகமாக பேசும் தரப்பினர் விஜேதாசவை ஆதரிக்க கூடும்.
சஜித் பிரேமதாசவும் பௌத்த சித்தாந்தங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் என்பதுடன், தன்னை ஒரு பௌத்தராகவும் கடும்போக்கற்றவராகவும் காட்டிக்கொள்கிறார். விஜேதாசவின் நகர்வுகள் சஜித்துக்கு செல்லும் இந்த வாக்குளை சிதறடிக்க கூடும்.
சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் வீழ்ச்சியடையும்
பல வேட்பாளர்களை போட்டியிட வைப்பதன் மூலம் இந்த நாட்டின் செல்வந்த வர்கத்தின் 20 சதவீதமான வாக்குகளையும் முதலாளித்துவ சித்தாந்தங்களை பேசுபவர்களினதும் ஏனைய சில பொதுவான நிலைப்பாட்டை கொண்டுள்ள தரப்பினரது ஆதரவையும் பெற்று 30 முதல் 35 சதவீதமான வாக்குளை பெறுவது ரணில் விக்ரமசிங்கவின் இலக்காக இருக்க கூடும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரணில் – சஜித் தரப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைப்பது கடினமான ஒரு விடயமாக இருப்பதால் அவர்கள் குறிப்பிடத்தக்களவான வாக்குகளை பெற்றால் ரணிலின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நாட்டின் பிரதான வேட்பாளராக உள்ள சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் கடுமையாக வீழ்ச்சியடையும் என்பது ரணில் மற்றும் அரசாங்கத்தின் கணிப்பு.
அந்தப் பின்புலத்தில்தான் கடந்த பல மாதங்களாக அரசியல் காய் நகர்வுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
சுப்ரமணியம் நிஷாந்தன்