முச்சந்தி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை; நாடாளுமன்றத்தில் கோரிக்கை

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

41 வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் அரசாங்க ஆதரவுடன் இடம்பெற்ற, கறுப்பு ஜூலை கலவரத்தில், 53 தமிழர்கள் கொல்லப்பட்ட வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளின் நலன்களை விசாரித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பொது மன்னிப்பில் அல்லது பிணையில் தாம் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் ஒரே எதிர்பார்ப்பு என, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 11 பேர் 15 தொடக்கம் 29 வருடங்கள் சிறையில் வாடுகின்றனர். அவர்களிலே சண்முகலிங்கம் சூரியகுமார், ஆனந்த சுதாகரன், தங்கவேல் நிமலன், உமர் கதாப், இராமசந்திரன், கெலன் வெலண்டினோ ஆகியோர் தண்டனை கைதிகளாக இருக்கின்றனர்.

சிவகுமார் மற்றும் பார்தீபன் ஆகியோர் 29 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். அதேபோன்று விளக்கமறியல் கைதிகளாக நடேசன் குகதாசன், தம்பியையா பிரகாஷ், செல்வராசா கிருபாகரண் ஆகியோர் 15 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பொது மன்னிப்பில் அல்லது பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆகவே இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளினால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டதை நினைவு கூர்ந்த எம்.பி, கஜேந்திரன், இதுவரையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பிராயச்சித்தம் அவசியம் எனவும் தெரிவித்தார்.

“இந்த அரசினுடைய திட்டமிட்ட செயற்பாடுகளால்தான் நாங்கள் ஆயுத போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது. ஆகவே இந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். இதுவரை இடம்பெற்றவற்றுக்கு பிராயச்சித்தம் வேண்டும், அது தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.”

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி தமிழ் மக்களின் சுயாட்சி உரிமையை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

“அதனைவிட நாங்கள் இந்த நாட்டில் ஒரு தேசத்திற்கு உரியவர்கள், நாங்கள் எங்களை ஆட்சி செய்திருக்கின்றோம். எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். எங்களுடைய சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட வேண்டும். எங்களது அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். சமஷ்டி அரசியல் அமைப்பை கொண்டுவர வேண்டும். ஆகவே இந்த அரசு செய்த தவறு காரணமாக நாங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. அதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்தீர்கள். அந்த சட்டம் எமது சமூகத்தை அழித்துள்ளது. ஆகவே தவறுகளை ஏற்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, எங்களது அரசியல் உரிமைகளை அங்கீகரித்து தவறுகளுக்கு தண்டனை வழங்க முன்வர வேண்டும்.”

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனுடன், ஜுலை 23ஆம் திகதி கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர், அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், கறுப்பு ஜூலையின் 41ஆவது ஆண்டு நினைவாக பொரளை மயானத்திற்கு முன்பாக “வடக்கு-தெற்கு சகோதரத்துவம்” நடத்திய நினைவேந்தலில் கலந்துகொண்டு, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை தொடர்ந்து ஒத்திவைப்பது அவர்களையும் மனதளவில் கொலை செய்வதற்கு ஒப்பான செயல் எனக் குறிப்பிட்டார்.

“இன்று நாங்கள் சிறையில் உள்ள அரசியல் கைதிகளைப் பார்க்கச் சென்றோம், அவர்கள் 29 வருடங்களாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஏன் நீதி வழங்கப்படவில்லை. ஞானசாரவுக்கு பிணை வழங்கப்பட்டது. ஹிருணிகாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்த இளைஞர்களுக்கு கொடுக்க முடியாமல் இருப்பது ஏன்? ஆகவே இதுவும் கொலைதான்.

58 பேர் கொல்லப்பட்டுபோன்று, இன்று அரசியல் கைதிகளும் கொல்லப்படுகின்றனர்.

வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதில்லை. ஒத்திவைக்கின்றனர், ஒத்திவைப்பது என்பது மனதளவில் கொலை செய்வதே.”

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்வதற்கான முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த சட்ட ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போது அதனை நிறைவேற்றித்தருமாறு அமைச்சர், எம்.பி கஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

“நாங்கள் அந்த நீண்ட விதிமுறைகள் மற்றும் சட்டத்தை உருவாக்கி அவற்றை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அந்த சட்டம் நிறைவேறிய பின்னர் நீங்கள் குறிப்பிட்ட பலரின் பிரச்சினைகள் தீரும். இது பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றியது மாத்திரமல்ல.

நாடு முழுவதும் சிங்களவர்களையும் தமிழர்களையும் பிரித்து தெரிவு செய்து விடுதலை செய்யும் முறை எங்களிடம் இல்லை. இது யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையல்ல. பொதுவான, நியாயமான நடைமுறையை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம். நீங்கள் அதனை நிறைவேற்றித் தாருங்கள்.”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.