முச்சந்தி
ஈழத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது! உண்மையை உரக்கக் கூறிய விக்கிரமபாகு கருணாரத்ன!! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(உண்மையை எப்போதும் உரக்கக் கூறிய நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார்.
விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
வந்தேறிகளான தமிழர்கள் வடக்குக்கு எப்படி உரிமை கோருவது என எல்லாவல மேத்தானந்த தேரோ 2012ஆம் ஆண்டு கடும் இனவாதத்தோடு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தேரருக்கு சவால் விடுத்தார். அதாவது ”இலங்கைத் தீவு தமிழர்களுக்குரிய தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். முதுகெலும்பிருந்தால் தேரர் விவாதத்துக்கு வரத் தயாரா?” என வெளிப்படையாகவே அவர் சவால் விடுத்திருந்தார்.
ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஒலித்த குரல் இன்று மறைந்தது. சிங்கள பேரினவாத தலைமைகளுக்கு மத்தியில், ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன பிரச்சினைக்களுக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் தனித்து நின்று குரல் கொடுத்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
சிங்கள இனத்தவராக இருந்தாலும் அவருடைய மறைவு தமிழ் மக்களுக்கு ஓர் பேரிழப்பாகவே அமையும். ஈழத் தமிழரின் விடுதலையையும், உரிமைகளையும் சிங்கள மக்கள் அறியும்படி செய்த பெரும் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களாவார்.
தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நோக்கம் தொல்பொருட்களை பாதுகாப்பதே தவிர முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல எனவும், இது தொடர்பில் செயலணியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் அவர் முறையிட்டிருந்தார்.
ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும். தெற்கில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்றமையினால் அம்மாகாணம் பெரும்பான்மை இனத்தவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள் அதேபோல தான் வடக்கு மற்றும் கிழக்கிலும்.
வடக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத தலங்களின் ஊடாகவும், மத வழிப்பாடுகளுடனும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறான தன்மையே கிழக்கிலும் காணப்படுகிறது.
இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீகம் வடக்கு மற்றும் கிழக்கு என்பது அனைவரும் அறிந்த விடயமே என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருந்தார்.
நீண்டகாலமக சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் பல தவறான செயற்பாடுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியதுடன் அவற்றிற்கு எதிராகவும் போராடினார். அத்துடன் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளை உலகறிய செய்ததில் இவருக்கும் ஒரு பாரிய பங்குண்டு.
ஈழப்போர் மௌனிக்கப்பட்ட 2009 இன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்தை சிங்கள அரசும் பறைசாற்றி வந்தது. இது
முற்றிலும் தவறானது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருந்தார்.
அவரின் மறைவின் பின்னரும் இலங்கையின் யதார்த்த அரசியலையும் ஆளுமையையும் அவர் வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.