பிராண சக்தி சிகிச்சையும் அனுபவங்களும்… பாகம் 2…. சு.ஸ்ரீநந்தகுமார்
நான் முதன்முதலில் ரேக்கியில் அதாவது உயிர் சக்தி பிராணா சிகிச்சை முறையில் நாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டது சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரே. அதன் முன்னர், பிராணா, யோகா நிவாரணத்தின் ரகசியங்கள், அதன் செயல் முறை பற்றிய இந்திய ‘ரெக்கி’ அல்லது ‘பிராணா’ சிகிச்சை குருமார்கள் (masters) எழுதிய புத்தகங்களை படித்துள்ளேன். ஆனால் அவற்றின் கொள்கை (theory) சம்பந்தமான அறிவைப் பெற்றுக்கொண்டேனே தவிர அதன் செயல் முறை பயிற்சிகளையோ, அதன் அனுபவத்தையோ பெறும் வாய்ப்பு அன்று கிடைக்கவில்லை.
முதன் முதலாக இதன் செயல் முறை பலனை ஒரு ஆங்கிலேய குருவிடம் தான் கற்றேன். அவர் பல வருடங்களாக பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தனது குருவிடமிருந்து இந்த நோய் தீர்க்கும் அற்புத பயிற்சியினை பெற்று இதனைக் கற்பிப்பதற்கும், நடை முறையில் சேவையாக இதனைப் பயன் படுத்துவதற்கும் அவரின் குருவால் அனுக்கிரகிக்கப்பட்டவர் ஆவர்| அங்கீகரிக்கப்பட்டவராவர்.
இவரின் வீட்டில் வார விடுமுறைகளில் பத்துப் பதினைந்து பேர் கூடி இச்சிகிச்சையின் தன்மைகளையும் இதில் பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வோம். இதில் பலர் பிற நாடுகளிலிருந்து இங்கு சமீபத்தில் குடியேறியவர்கள். அவர்கள் நாட்டில் இதன் பிரயோக முறை சற்று வேறுபட்டதாக இருந்தாலும் அவர்கள் எல்லோருடையதும் பொது அனுபவம் அல்லது அடைந்த பலன் ஒன்றாகவே இருந்தது. இந்த சிகிச்சை ஓர் அகில உலக ரீதியான சக்தி முறையாகவே எனக்குத் தோன்றியது.
சிறு வயதிலிருந்தே எமக்கு மேலே ஒரு சக்தி உள்ளதென்று திடமான நம்பிக்கையும், பின் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடும் இருந்ததால் என்னை இந்த சிகிச்சை முறை, இது ஒரு சேவையாக உபயோகப்படுவதாலும், அதே நேரத்தில் எம்மை நாமே ஆன்மீகத்தில் உயர்த்திக்கொள்ள ஒரு சாதனமாகவும் பயன்பட்டதால்,
தொடர்ந்து இதற்குரிய முறையான பயிற்சியை அக்குருவின் கீழும் (பரனையnஉந)இ ஒத்த மாணவர்களின் அனுபவத்தை பகிர்வதாலும் நிறைவாகப் பெற்றோம். குருவினால் இதனைப் பயன்படுத்தும் அனுக்கிரகத்தையும், அங்கீகாரத்தையும் பெற்ற சீடர்களாகிய நாம், எம்மிடையே இதன் சக்தியைப் பரீட்சித்து, அதனால் எம்மில் நாமே ஒரு தன்னம்பிக்கையை வளர்த்து, முயன்றால் எம்மால் இதில் பூரண தகுதி அடைய முடியுமென்ற ஒரு திட சங்கல்பத்தையும் (சிலர்) எடுத்து இச்செயல் முறையை முதலில் எம்மிடையே பகிர்ந்து, அதன் பலன்களின் தரத்தை அறிந்து, அதன்படி முன்னோக்கி அடியெடுத்து வைத்தோம்.
பல தடவை இச்சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் இடங்களுக்கு இருவராகவோ அல்லது ஒரு குழுவாகவோ சென்று, ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட நிவாரணம் தேவைப்பட்ட ஒருவரின் வெவ்வேறு உடற் கூறுகளுக்கு, ஒரே சமயத்தில் சக்தியூட்டி தற்காலிக அல்லது நிரந்தரமான உடல் வேதனைகள், பிரச்சனைகள், மற்றும் நோய்களைத் தீர்க்க உதவினோம். எம்மில் சிலர் தாம் தனியே இந்த சிகிச்சை செய்வதற்கு போதிய தன்னம்பிக்கையும் (confidence) இறை அருளும் (God’s grace), பயிற்சியும் (training) போதாததால், இதில் வல்லமை உள்ளவர்களுடன் சேர்ந்து, இச்சிகிச்சையில் உதவுவார்கள். பொதுவாக உப சக்கரங்களில் (கால், கை, காது) ஏற்படும் சாதாரண நோவுகளையும், பிடிப்புக்களையும், சிறு காயங்களையும் இவர்களின் சிகிச்சையினால் போக்கிவிடக் கூடியதாக இருக்கும்.
ஆனால் சற்று பெரிய வியாதிகளான, இடுப்பு வலிகள் (disk pain), தலைக் குத்தல்கள்(head ache), குடல் உபாதை (ulcer), நெஞ்சு எரிச்சல்(heart burn), தோல் வியாதிகள், கால் வீக்கங்கள் போன்றவை இச்சிகிச்சையில் மிக அனுபவப்பட்டவர்களாலும், குருவின் பூரண அங்கீகாரமும் அனுக்கிரகமும் பெற்றவர்களாலேயே முற்றாக குணப்படுத்த முடியும். இவர்கள் இதனைத் தொடர்ந்து செய்யும் முறையான பயிற்சியினாலும், பிரணாயாம யோக சித்திகளாலும், இறை அருளாலும் (God’s grace) ஆற்றல் பெற்று குணப்படுத்தலில் வெற்றி கண்டுள்ளார்கள். மிகவும் கொடிய வியாதிகளான புற்று நோய், எயிட்ஸ், இருதயக் கோளாறுகள், ஆர்திரெட்டிஸ், மூளை வருத்தம் (mental illness) போன்றவைகூட இதனால் எளிதில் பாதிக்கப்பட்டவரைவிட்டு, முற்றாக மறைந்து போன அனுபவங்களை பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.
இதில் சில சம்பவங்களை என் அனுபவத்திலும் நான் கண்டதுண்டு.
இந்த அனுபவங்களையும், இதனால் விளைந்த மன மகிழ்ச்சியையும், சில மனத்தளர்வுகளையும், இந்த பயிற்சியினை, சேவையை சரியாக கையாளாவிட்டால் செய்பவருக்கு வரும் விளைவுகளையும், இங்கு கூறினால் மட்டுமே, சிலரது இந்த சக்தி சிகிச்சை முறை பற்றிய பிழையான அறிவை, அல்லது பிழையான பிரச்சாரத்தை நாம் புரிந்து, இதன் உயரிய நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
இச்சிகிச்சையளிக்குமுன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல் சிகிச்சையின்போது தெரிவித்தல் வேண்டும். இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும். சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன. இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தால் மட்டுமே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும். அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.
முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும். இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும். அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும் பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின்உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும், பிராணா கூடிய பகுதிக்கு தேவையற்ற பிராணாவை நீக்குவதன் மூலமும், ஒரு சம நிலையை உருவாக்கி, நோய்களை அந்தப் பகுதிகளில் குணப்படுத்துகின்றது.