ராஜபக்சர்களின் செல்வாக்கு சரிகிறது: கொழும்புக்கு அழைக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நாட்டுக்கு அறிவிக்க பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர் இந்த அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் இருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கிடையில், பொதுஜன பெரமுனவில் இருந்து ஒரு வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என அக்கட்சியின் மற்றுமொரு குழு உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதனால் கட்சிக்குள் கருத்து மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் நோக்கில் பிரசன்ன ரணதுங்க, இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் இவ்வாறு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபகச் ஆகியோருக்கு தெரியாது இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ராஜபக்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுஜன பெரமுன தற்போது அவர்களது கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை தக்கவைக்க ராஜபக்சர்கள் ரணில் விக்ரமசிங்கவை விரும்பியோ விரும்பாமலோ ஆதரிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரசன்னவின் இந்த நகர்வு ராஜபக்சர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்டோரும் இன்று கொழும்பில் பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.