முச்சந்தி

காலடி மண் புனிதமானதா.. 122 பேர் உயிரிழக்க காரணம் என்ன?: யார் இந்த போலே பாபா?

உத்தரப்பிரதேச மாநிலம் – ஹத்ராஸ் நகரில் சாமியார் ‘போலே பாபா’ நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 122 பேர் இறந்தனர்.

80 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அனுமதி பெற்றுவிட்டு சுமார் 2.5 லட்சம் பேர் ஆன்மீக நிகழ்ச்சிக்காக அந்த இடத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதனால் சன நெரிசல் ஏற்பட்டதுடன் கடுமையான வெப்பமும் நிலவியுள்ளது. இதனால் சிலர் மூச்சு திணறலால் அவதியுற்றுள்ளனர்.

இந்த விபத்துக்குப் பிறகும் சாமியார் மீது பல பக்தர்களுக்கு நம்பிக்கை குறையவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் கூறுகையில், “பாபாவின் மாலையை கழுத்தில் அணிவதால் நன்மைகள் கிடைக்கும், அமைதி கிடைக்கும், நோய்கள் தீரும், குடும்ப பிரச்சினைகள் தீரும், வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஒரு வருடமாக அவரை வணங்குகிறோம் எங்களுக்கு இதுவரை எந்த அனுபவமும் இல்லை, ஆனால் எங்கள் ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றனர்.

மூடநம்பிக்கையின் உச்சம்

இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் இந்த மூடநம்பிக்கையானது, இந்திய மக்களிடையே சர்வ சாதாரணமாக இருந்து வருகின்றது.

போலி சாமியாரின் காலடி மண்னை எடுக்கச் சென்றுதான் இந்த 122 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் போலி மத நம்பிக்கை, மூடநம்பிக்கை பரவலாக இருந்தாலும், ஒருமத சம்பந்தப்பட்ட விடயமல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எந்தவொரு மதத்திலும் மனிதர்களை தெய்வமாக வழிபாடுமாறு கூறவில்லை.

பல வருட காலமாக ஆபிரிக்க நாடுகளில் கூட்டமாக கூடி வழிபடும் கலாசாரம் தற்போது உலகளாவிய ரீதியில் பரவிவருகின்றது.

பாலியல் குற்றச்சாட்டுடையவர் தெய்வமா?

சாதாரண குடும்ப பின்னணியில் உத்தரபிரதேசத்தில் பிறந்த சுராஜ்பால் (போலே பாபா), ஒரு பொலிஸ் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் காலப்போக்கில் அவரது பெயரை நாராயண் விஸ்வ ஹரி என மாற்றிக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து பொலிஸ் வேலையில் சலிப்புற்ற அவர், இராஜினாமா செய்துவிட்டு சாமியாராக மாறியுள்ளார்.

இவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகள் நடைமுறையில் உள்ளன.

வறுமைகோட்டுக்கு உட்பட்ட மக்களை ஏமாற்றுவது இவரது நோக்கமாக இருந்துள்ளது. இதனால் இவரின் சொற்பொழிவை கேட்டு அதற்கு அடிமையாகி பலர் அவரது ஆசிரமத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

இவரது முகம் பதித்த ஒரு மாலையையும் அறிமுகம் செய்து பொய் பிரச்சாரங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.

இவரது ஆசிரமத்துக்குள் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. தொலைபேசி அனுமதி இல்லை. அவரது சொற்பொழிவுகள் காணொளிகளாக எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கெமராக்கள் கூட அங்கு இல்லை. இதற்கு காரணம் அவருக்கு விளம்பரம் பிடிக்காதாம்.

வாரஇறுதி நாட்களில் நடைபெறும் இவரது சொற்பொழிவுக்கு பொதுமக்கள் முந்தியடிப்பதும் அவரின் காலை கழுவிய நீரை பிரசாதமாக பெற்றுக்கொள்வதும் அங்கு வாடிக்கையாக மாறியுள்ளது.

போலே பாபாவுக்கு தனியாக பாதுகாப்பு படை, அதி சொகுசு கார், உயர் பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சொற்பொழிவு முடிந்து அவர் கிளம்பும்போது, பொதுமக்கள் முண்டியடித்து அவரது கால்பட்ட தரையில் காணப்படும் மண், வாகனம் சென்ற தடயத்தில் இருக்கும் மண் புனிதமானது என கூறி வீட்டிற்கு எடுத்துச்செல்வதும் அந்த மண்னை சேகரிப்பதும் வழக்கமாக மாறியுள்ளது.

இவ்வாறு தான் அன்றும் நடந்துள்ளது. இவ்வாறு மண்ணை எடுப்பதற்கு குணிந்தவர்களால் மீண்டும் நிமிர முடியாமல் ஒருவரோடு ஒருவர் இடிபட்டு கூட்டத்தில் நசுங்கி உயிரிழந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

122பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயத்துடனும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், கூட்டத்தில் சொற்பொழிவாற்றிய பின் போலா பாபா தலைமறைவாகிவிட்டதாகவும் தற்போது இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனநெரிசலால் 122பேர் உயிரிழந்தார்கள் என்பதைவிட மூடநம்பிக்கை, முட்டாள் தனத்தால் இந்த உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன என கூறுவது பொருத்தமாக இருக்கும்.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.