ஆப்கான் அகதிப் பெண்ணான ஆஸி செனட்டரின் பாலஸ்தீன ஆதரவால் ஆளும் அரசுக்குள் சர்ச்சை!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா
(முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை எதிர்பார்த்து இருக்கும் தொழிற்கட்சிக்கு எதிர் காலத்தில் பாரிய பின்னடைவுகள் வரும் தேர்தல்களில் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் இந்த அரசியல் நெருக்கடியை ஆளும் கட்சி இலகுவாக தீர்க்குமா என்பதும் கேள்விக்குறியே)
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்காக அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி (Green Party) பிரேரணைக்கு ஆதரவளித்து வாக்களித்தமையால் செனட்டர் பாத்திமா பேமனின் (Fatima Payman ) நடவடிக்கையால் தொழிற்கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
பசுமைக் கட்சிக்கு ஆதரவு:
பாலஸ்தீனத்திற்கான இரண்டு நாட்டுத் தீர்வுக்கான தேவை குறித்து சக தொழிலாளர் செனட்டர் பென்னி வோங்கால் மாற்றப்பட்ட திருத்தம் குறித்த அவரது பார்வை பற்றி விமர்சிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் பாலஸ்தீனத்தை இரு நாடுகளின் தீர்வினை அங்கீகரிக்கும் பிரேரணையை சபையில் முன்வைத்தது.
பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணையில் அவுஸ்திரேலிய பாராளமன்ற செனட்டில் பலத்த சர்ச்சையை கிளப்பிய ‘பாத்திமா பேமன்’ ஆஸி நாடாளுமன்றத்தின் முதல் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் செனட்டராக 2022 ஜூனில் உலக அகதிகள் தினத்தன்று பதவியேற்றவர் ஆவார்.
அகதிகளுக்காக குரல் கொடுத்த, முன்னாள் அகதியுமான பாத்திமா பேமன் 2022 தேர்தல் முடிவுகளின்படி மேற்கு ஆஸி செனட் இடத்தை வென்றமை அறிந்ததே.
பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணை:
ஆளும் கட்சியின் பிரதமர் அல்பானீஸ் தொழிலாளர் கட்சி, பாலஸ்தீன நீதிக்காக, அவர்களின் கடந்தகால அழுகைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று பாத்திமா பேமன் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார்.
மேலும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது அமைதி முன்னெடுப்பை விரக்தியடையச் செய்யாது, மாறாக அமைதி செயல்முறையை மீட்டு வைத்திருக்கும் எனவும் கூறினார்.
பாலஸ்தீன தனி அரசை அவுஸ்திரேலிய செனட் அங்கீகரிக்க வேண்டும் என்ற அவசரத் தேவையை அறிவிக்கும் ஒரு பிரேரணையில் வாக்களித்தார். அத்துடன் அவர் கட்சி தாவி பசுமைக் கட்சிக்கு பக்கபலமாக ஜூன் 25 அன்று செனட் வாக்கெடுப்பில் கலந்து கொண்டமை சர்ச்சையின் உச்சக்கட்டத்தை அடைந்தது.
அவுஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதும், இரண்டு நாடுகளின் தீர்வு மற்றும் நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கு ஆதரவாக ஒரு அமைதி செயல்முறையின் ஒரு பகுதியாக நிகழலாம் என்று குறிப்பிட்டார். ஆயினும் அவரது பிரேரணையின் மாற்றங்கள் செனட்டில் தோல்வியுற்றது.
ஆளும் கட்சியிலிருந்து விலகல்:
இத்தகைய சர்ச்சைகளின் பின்னர் செனட்டர் பாத்திமா பேமன் ஆளும் தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேறியதாக கூறியுள்ளார்.
செனட்டர் பாத்திமா பேமன் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆஸ்திரேலிய செனட்டர், அவர் தனது சகாக்களால் முழுமையாக கைவிடப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் மேற்கு அவுஸ்திரேலியாவின் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான சிறந்த வழி பற்றி சிந்திப்பதாகவும், கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக தொழிலாளர் கட்சியால் செனட் காக்கஸில் இருந்து பேமேன் ‘காலவரையின்றி இடைநீக்கம்’ செய்யப்பட்டார். முன்னாள் தொழிற்கட்சி செனட்டர் பாத்திமா பேமன், பாலஸ்தீனத்திற்கான அவரது ஆதரவைப் பற்றிய தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்குப் பிறகு, பிரதம மந்திரியால் தொழிலாளர் கட்சிக் கூட்டத்தில் இருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
செனட்டர் பாத்திமா பேமன் தொழிலாளர் கட்சிக்கு வெளியே தன்னை நிறுத்தி, சுயேட்சையாக நிலை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார் என்று அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.
ஆப்கான் அகதிப் பெண் :
பேமன் 2022 இல் செனட்டில் தனது முதல் உரையில் அவர் பிறந்த சிறிது காலத்திலேயே தலிபான் ஆட்சியில் இருந்த ஆப்கானிஸ்தானிலிருந்து அவரது குடும்பம் எப்படி வெளியேறியது என்பதை விவரித்து நாடாளமன்றை கண்கலங்க வைத்தவர்.
“இன்று இரவு ஒரு இளம் பெண்ணாக, மேற்கு ஆஸ்திரேலியப் பெண்ணாக, ஒரு முஸ்லீம் நம்பிக்கையில், பெருமையுடன் நிற்கிறேன். அவளுடைய பாரம்பரியம் மற்றும் இந்த அழகான நாட்டிற்கு நன்றியுள்ளவள்” என்ற அவரின் பேச்சு பலரையும் கவர்ந்தது.
சமீப காலங்களில், காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்டிப்பதில் வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
எனது மனசாட்சி மிக நீண்ட காலமாக சங்கடமாக இருந்தது. அது என்னவென்று நான் சொல்ல வேண்டும். இது ஒரு இனப்படுகொலை, வேறுவிதமாக பாசாங்கு செய்வதை மேற்குலக அரசுகள் நிறுத்த வேண்டும்” என்று மே மாதம் அவர் கூறியிருந்தார்.
மே மாதம் அவர் விடுத்த அறிக்கையில், “நதியிலிருந்து கடல் வரை, பாலஸ்தீனம் சுதந்திரமாக இருக்கும்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தில் சுதந்திரமான மற்றும் சமமான குடிமக்களாக வாழ விரும்புவதாகவும், மற்றவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படாமல் இருக்க விரும்புவதாகவும் கூறினார்.
அல்லது ஆதிக்கம் செலுத்தவில்லை”. அப்போதிருந்து, Payman தனது காக்கஸ் சக ஊழியர்களுடன் முரண்படுவதைக் கண்டார்.
இதேவேளை ஜூன் 17 அன்று அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் பேமன், பாலஸ்தீன மக்களை அழிக்க இஸ்ரேலின் தற்போதைய முயற்சியினை சர்வதேசம் தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் கோரினார். இதற்காகவே
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க தனது சொந்த அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்காக அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி பிரேரணைக்கு ஆதரவளித்து வாக்களித்தமையால் செனட்டர் பாத்திமா பேமனின் (Fatima Payman ) நடவடிக்கையால் தொழிற்கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை எதிர்பார்த்து இருக்கும் தொழிற்கட்சிக்கு எதிர் காலத்தில் பாரிய பின்னடைவுகள் வரும் தேர்தல்களில் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் இந்த அரசியல் நெருக்கடியை ஆளும் கட்சி இலகுவாக தீர்க்குமா என்பதும் கேள்விக்குறியே.
ஐங்கரன் விக்கினேஸ்வரா