“இது எனது கடைசி யூரோ கிண்ணம்”: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு
நடப்பு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் தனது கடைசி யூரோ கிண்ண கால்பந்து தொடர் என போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதிப்படுத்தினார்.
ஜேர்மனியில் தற்போது நடைபெற்றுவரும் யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துகல் அணி ஸ்லோவேனியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றிபெற்று கால்இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
கால் இறுதிப் போட்டியில் மிகவும் பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியை போர்த்துகல் எதிர்கொள்கின்றது. இந்தப் போட்டி எதிர்வரும் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், போரத்துகல் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரொனால்டோ, இது தனது கடைசி யூரோ கிண்ணம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“இது சந்தேகத்திற்கு இடமின்றி, எனது கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப். ஆனால் நான் அதைப் பற்றி உணர்ச்சிவசப்படவில்லை.
இந்த கால்பந்து விளையாட்டின் மீது எனக்குள்ள உற்சாகம், எனது ரசிகர்கள், எனது குடும்பத்தினர், மக்கள் என்மீது வைத்திருக்கும் பாசம் ஆகியவற்றால் நான் மிகவும் நெகிழ்ந்துள்ளேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
39 வயதான அவர் நடப்பு யூரோ கிண்ண தொடரில் இதுவரை கோல் எதையும் அடிக்கவில்லை. எனினும், தனது சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்களில் ஒருவரான ரொனால்டோ, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 14 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.