இந்திய -அமெரிக்க உறவு வலிமையாக உள்ளது!
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும், அத்திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அதானிக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் விவகாரம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ள அதேவேளை இந்தியாவுக்கு எதிராக பைடன் அரசு சதி வலை பின்னுவதாக ரஷ்ய செய்தி நிறுவனமொன்றும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் அதானி மீதான முறைகேடு புகார் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ”அதானி மற்றும் அவரது நிறுவனத்தின் மீதான வழக்கு விவகாரம் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு தெரியும் எனவும், அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்திற்கும், நீதித்துறைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் எவ்வாறு இருப்பினும் இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலகளாவிய பிரச்னைகளை தீர்ப்பதில் இருநாட்டு மக்களும், அரசு நிர்வாகங்களும் இணைந்தே உள்ளனர் எனவும், ஏற்கனவே உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டதைப் போல, இந்த விவகாரத்தில் சுமூகமாக தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.