இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகள் / கூட்டணிகள் 10% முதல் 18% வாக்குகளைப் பெற்றுவந்திருப்பதை மக்களவைத் தேர்தல்கள் உணர்த்தி வந்திருக்கின்றன. அந்த வாக்கு விகிதம் 20% தாண்டிச் சென்றதில்லை. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு விகிதம் 25%ஐத் தாண்டிச் சென்றிருக்கிறது.
பாஜக தலைமையிலான கூட்டணி 18.28% வாக்குகளையும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (நா.த.க.) 8.11% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. அதேநேரம், மாநிலத்தில் திமுகவின் மூன்று ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் இது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
அதிமுகவோடு இணைந்து பணியாற்ற வேண்டும் அல்லது அதிமுக தங்கள் கைகளுக்கு வர வேண்டும் என்று எண்ணும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுகவின் டிடிவி தினகரன் ஆகிய திராவிடக் கட்சிகளின் வழிவந்தவர்களையும் உள்ளடக்கிய அணிதான் பாஜக கூட்டணி. ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கும் மாற்றாக நா.த.க. தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது. தேர்தல் களமிறங்கிய 2016 முதல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது.
உயரும் வாக்கு விகிதம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.07% வாக்குகள், 2019 மக்களவைத் தேர்தலில் 3.90% வாக்குகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.58% வாக்குகள் என வாக்கு வங்கியைச் சிறிது சிறிதாக உயர்த்திவந்தது நா.த.க. 2024 மக்களவைத் தேர்தலில் 8.11% வாக்குகளைப் பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உயரும் அளவுக்கு வாக்கு விகிதத்தை உயர்த்திக்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்சியின் ‘பி’ அணி என்று நா.த.க. விமர்சிக்கப்பட்டாலும், மற்றொருபுறம் வாக்கு விகிதம் உயர்ந்துவருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்குகளை நா.த.க. பெற்றிருக்கிறது, இதில் திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் மூன்றாவது இடம். தேர்தல் வெற்றி, தோல்விக்கு அப்பால் 50% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவதை ஓர் உத்தியாக நா.த.க. பின்பற்றிவருகிறது. சிவகங்கை தொகுதியில் எழிலரசி 1.62 லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இவரைப் போலவே பல தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களைவிட பெண் வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, கன்னியாகுமரியில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
இளையோர் வாக்குகள்: சீமான் பின்பற்றும் தமிழ்த் தேசிய, இனவாத, தூய்மைவாத அரசியல் தமிழ்நாட்டில் பிற கட்சியினரால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அதே நேரம், சீமான் பேசும் பேச்சை ரசிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் நா.த.க.வை ஆதரிப்பதன் வெளிப்பாடே மெதுவாக உயர்ந்துவரும் வாக்கு விகிதம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றைத் தேடும் நோக்கில் நா.த.க.வை இளைய தலைமுறையினர் ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்டு. அது சரி எனில், அவர்களின் வாக்குகளைக் கவர்வதில் திராவிடக் கட்சிகள் எந்தப் புள்ளியில் தடுமாறுகின்றன அல்லது தவறவிடுகின்றன என்கிற கேள்வி எழுகிறது.
இரண்டு பொதுத் தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நா.த.க.வுக்கு இந்த முறை அந்தச் சின்னம் கிடைக்கவில்லை. 15 நாள் இடைவெளியில் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தைப் பிரபலப்படுத்தி, 8.11% வாக்குகளைப் பெற முடிகிறது என்றால், நா.த.க.வையும் சீமானையும் வாக்காளர்கள் கவனிக்கிறார்கள் என்பதை இனிமேலும் யாரும் மறுத்துக்கொண்டிருக்க முடியாது.
இதுவரையில், கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்டு வரும் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி’ என்கிற முழக்கத்துக்கு மாறாக, தேர்தலில் பெறும் வாக்குகளைவிட வெற்றியின் முக்கியத்துவத்தை சீமான் உணரத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது.