காலநிலைதோட்டப் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றது? …. முருகையா தவமணி தேவி, வட்ட கொட.
மலையகம் 200 ஆண்டை பூர்த்தி செய்தாலும் இன்னும் மலையகத்தின் பூரணப்படுத்தப்படாத பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தமிழர் அதாவது மலையக வம்சாவழியினர் தேயிலை, கோப்பி, இறப்பர் பயிர்ச்செய்கைக்காக அழைத்து வரப்பட்டனர். இவர்களே மலையகத் தமிழர்களாக கருதப்படுகின்றனர்.
1844 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலாக கோப்பி பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டனர். கோப்பிப் பயிர்ச் செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதும் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இது பெருமளவு வெற்றியை கண்டது. எனவே தேயிலை அறுவடைக்கு அதிகளவான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதற்காகவும் இந்தியாவிலிருந்து அதிகளவான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் நிரந்தரமாக இங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு வந்தவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. மறக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வாறு மலைப் பிரதேசத்தை அடைந்த மக்கள் இங்குள்ள காடுகளை அழித்து விளைச்சல் நிலமாக மாற்றினர். இவர்கள் மலைப்பாங்கான இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். மலையகமானது இலங்கைத் தீவின் மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதியாகும். அதனடிப்படையில் மாத்தளை, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றன. மலையகத்தின் புவியியல் அமைப்பும் ஈரப்பதனும் இங்கு தேயிலைப் பயிர்ச்செய்கை வெற்றியடைவதற்கு காரணமாகும். வருடத்தின் பெரும்பகுதி மழைவீழ்ச்சியே காணப்படுவதால் ஈரப்பதன் அதிகமுள்ள இடமாக கருதப்படுகின்றது.
மலை நாட்டைப் பொறுத்த வரையில் தேயிலைத்தொழிலே வாழ்வாதார தொழிலாக கருதப்படுகின்றது. இதன் மூலம் நாட்டிற்கு பாரியளவிலான அந்நிய செலாவணியை தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுத் தருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் 1.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கைக்கு பெற்றுத் தருகின்றனர். மலையகத்தில் சுமார் 10 இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சுமார் 2 இலட்சம் பேர் தொழிலாளர்கள் ஆவர். இவர்களில் அதிகமானோர் பெண் தொழிலாளர்களே தேயிலைத் தொழிலில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
ஆம் இவ்வாறு தேயிலைத் தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களும், காலநிலையும் பற்றி சற்று நோக்குவோம். தற்போது மலையகப் பிரதேசத்தின் காலநிலையானது மிகவும் சீரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. அதிகமான மழைவீழ்ச்சி, வேகமான காற்று என்பன நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகின்றது. இவற்றை தமது சவாலாக எடுத்துக் கொண்டு தமது ஒவ்வொரு நாளையும் கடக்கின்றனர்.
பலத்த காற்றும் கொட்டும் மழையும் இவர்களுக்காக விதிக்கப்பட்டதா? கொட்டும் மழையிலும் கொழுந்துகளை பறிக்கும் இவர்களின் பணி உன்னதமானதே. மழை நாட்களில் குளிரில் நடுங்கியபடியே பணியில் ஈடுபடுகின்றனர். சுமார் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தமது வாழ்க்கைச் செலவினை பூர்த்தி செய்ய இவர்களின் ஒவ்வொரு விடியலையும் போராட்டத்துடன் கடக்கின்றனர். வேலைக்குச் சென்றால் மாத்திரமே சம்பளம் என்றும் மாதாந்தம் பெறும் சம்பளப் பணத்திலேயே தமது குடும்பத் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்றும் தமது நாட்களை தேயிலை மலையுடன் நகர்த்துகின்றனர். குடும்ப பொருளாதாரத்தை சுமக்கும் ஒவ்வொரு மலைத் தாய்களினதும் விடியல் எப்போது கிட்டும்?
இவ்வாறு சீரற்ற காலநிலையுடன் தமது தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் குடியிருப்பு வசதிகளும் மிகவும் கவலைக்குரிய விடயமே. அடிப்படை வசதிகளற்ற லயன் குடியிருப்புகளிலேயே தமது வாழ்நாட்களை நகர்த்துகின்றனர். பல்வேறுபட்ட சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். 200 வருட துயர் வாழ்க்கையின் விடியல் தான் எப்போது?
அட்டைக் கடியும் கொட்டும் இரத்தமும் இவர்களுக்காக வழங்கப்பட்டதா? இதற்கான தீர்வு தான் என்ன? இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிதான் என்ன?