கட்டுரைகள்

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம். மஹா கும்பாபிசேகம்! …. (சிறப்புக் கட்டுரை) …. அருணாசலம் லெட்சுமணன்,

 அம்மன் என்பது ‘சீமாட்டி’ ‘உயர்வான பெண்’ என பொருளோடும் நோக்குவார்கள். இதற்கு சமானமாக ‘செல்வி’ என்ற பெயரும் அமைகிறது. கொற்றவையின் படிம வளர்ச்சியில் இப் பெயர் பல இடங்களில் பிரயோகத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குமரிக் கண்டத்துடன் தொடர்புப்பட்ட புவியியல் மாற்ற நிலையோடும் இலங்கை இந்திய கண்டத்துடன் தொடர்புபட்டு விளங்கியது. இராமாயணம் ஆரியவாத முனைப்பில் தமிழர்களை மலினப்படுத்தும் கைங்கரியத்தில் புனைவுகளை தன்வயப்படுத்தியிருப்பது அவதானத்திற்குறியதே! இயக்கர், நாகர் வரலாற்றுத் தடங்கள் தமிழர்களும் சைவசமயமும் இலங்கையில் நிலைப்பெற்றிருந்தமைக்கான ஆதாரங்கள் நிறையவே உ;ள்ளன. ஐந்து ஈச்சரங்கள் அதுனுடன் தொடர்புபட்ட ஆண், பெண் இறை வகைப்படுத்தல்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்; இலங்கையில் அமைத்த முருகன் ஆலயங்கள், கதிர்காமம் முருகன் ஆலயம் கொண்டுள்ள தொன்மவியல் அம்சங்கள் என்கின்ற வகையில் இலங்கையில் தமிழர்களின் மூத்த தொன்ம நிலையை ஆன்மீகத்துடன் உற்று நோக்கலாம்.

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு புலம்பெயர்ந்து இருநூறு வருடத்தை (1823-2023) நிறைவு செய்துள்ளார்கள். இந் நிலையில் பிரித்தானியர்களதும் சுதந்திர இலங்கையினதும்; பொருளாதாரத்தில் முதுகெழும்பாய் இம் மக்களே திகழ்ந்துள்ளார்கள். 1823ற்கு முன்னர் இப் புலம்பெயர்வுகள் இடம்பெற்றிருந்தாலும் இவ் வருடமே முனைப்பு பெறுவதற்கு ஏதுவானதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலமாக உழைப்பதற்காக மாத்திரம் இ;ந்த மக்கள் இலங்கை நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். டொனமூர் அரசியலமைப்பு சோலபறி அரசியலமைப்புகள் வழங்கிய நிவாரணங்கள் ஓரளவு திருப்தியை தந்தாலும் பின்னாளில் வாக்குரிமை பரிப்பு, பிரஜாவுரிமை பரிப்பு, 1964 ஸ்ரீமா சாஸ்த்திரி ஒப்பந்தம் போன்ற கசப்பான அனுபவங்கள் இம் மக்களில் வாழ்வியலில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியமை கவலைக்குறிய விடயமாகும். ஐக்கிய நாடுகள் சபை தோற்றம் பெற்று மனித உரிமை தொடர்பான கவனம் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கும் தருவாயில் இந்த மக்கள் இருப்பு தொடர்பில் பெற்ற கசப்பான அனுபவங்கள் ஏராளம். ஐந்து வருடத்தில் ஓர் நாட்டில் வசித்தாலே பிரஜையாகலாம் என்ற நடைமுறை உலகின் பல நாடுகளில் காணப்படுகின்ற நிலையில், இந்த மக்கள் அனுபவித்த துயரங்களின் பதிவுகளை இலக்கியங்களில் தரிசிக்கலாம். அவ்வப் போது பெரும்பாண்மை சமூகத்தின் ஆத்திரத்திற்கு உள்ளாகி பாதிக்கப்படும் அவல நிலையையும் நிறையவே அனுபவித்த சமூகமாக திகழ்கிறது. அறுபதுகளுக்கு பின்னர் எஞசியிருந்த மக்கள் கூட்டம் மீnழுழுகைக்கான உந்துதலை பெறுகிறார்கள். ஏக்கங்கள் ஒரு வகை உந்துதலுக்கு வாய்ப்பாக அமைகிறது. பாதிப்புகள் தொடர்பில் பேசவும் எழுதவும் முனைகிறார்கள். அதன் தொடர்ச்சி நிலையில் ‘மலையகம்’ எனும் சமூக உருவாக்கம் நிலைபெறுகிறது. அறுபதுகளில் தோன்றிய ஆத்திரப் பரம்பரையினரின் உத்வேக செயற்பாடுகள் ‘மலையகம்’ எனும் பிரங்ஞையை காத்திரப்படுத்துகிறது. தொழிலாளர்கள் மாத்திரம் என்ற நிலை மாற்றமடைந்து வர்த்தகத்துறை முன்னெடுப்புகளும் நகர உருவாக்கம், நகரம் நோக்கிய புலம்பெயர்வு, அரச தனியார்த்துறை வேலைவாய்ப்புகள் என்றவாறு சமூக அசைவியம் விரிவுபெறுகிறது. இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற சட்ட ரீதியான பதிவு இருந்த போதிலும் ‘மலையக மக்கள்’ என தன்னை அடைளாளப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சட்ட ரீதியான பெயரை விட செல்லப்பெயரில் அதீத அக்கறை செலுத்துகின்ற போக்கை அவதானிக்கலாம். ‘மலையகம்’ எனும் போது புவியியல் ரீதியிலான வரையறையைக் கடந்து எண்ணக்கரு ரீதியிலான வரையறைக்குள் அடையாளம் ஆகுவதையே குறித்து நிற்கிறது. தோட்டங்கள் கடந்து, நகரங்கள் கடந்து, பிரதேசங்கள் கடந்து, தேசங்கள் கடந்து ‘மலையகம்’ எனும் வலையமைப்பு எண்ண ரீதியில் கட்டமைத்து விரிவு பெறுகிறது.

மலையக சமூக உருவாக்கத்தில் வழிபாட்டு மரபும் பெரிதும் துணை நின்றமை கவனிக்கத்தக்கது. தொழிற் களங்களை விட மக்கள் ஒன்று கூடுகின்ற தளமாகவும், கலந்துரையாடுகின்ற களங்களாகவும் வழிபாட்டுத் தளங்கள் அமைந்துள்ளன. வேற்றுமைகள் கட்டமைக்கப்பட்ட களங்களாக

வழிபாட்டுத் தளங்கள் காணப்பட்ட போதிலும் சமூக ரீதியிலான தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வகையில் இவ் வழிபாட்டுக் களங்கள் மிகுந்த முக்கியத்துவததை ஏற்படுத்துகின்றன. இந் நிலையில் மலையக மக்களின் வழிபாட்டு முறை பற்றிய அவதானமும் இன்றியமையாதவொன்றாக விளங்குகிறது. தென்னிந்தியாவில் பெண்தெய்வங்களில் முத்துமாரியம்மன் வழிபாடு முதன்மையானதாக விளங்கியது. அம் முத்துமாரியம்மன் வழிபாடே இலங்கைக்கு புலம்பெயர்ந்த மக்களாலும் முதன்மைபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மலையகத்திலும் கொற்றவை, காளி போன்ற தெய்வங்களுடன்; மாரியம்மனுடன் தொடர்புபட்ட ஏனைய தெய்வங்களையும் வழிபட்ட போதிலும் மலையகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட முத்துமாரியம்மன் ஆலயங்களைக் கொண்டே வழிபடும் மரபு மேலோங்கி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கிராமிய தெய்வமாகவே அனுஸ்டிக்கப்பட்டு வரும் மாரியம்மன், கருமாரியம்மன், கங்கையம்மன் என்றவாறும் அடையாளப்படுத்தப்படுகிறாள். மாரி என்றால் மழை அல்லது அம்மை நோய் எனப் பொருள்படும். அம்மை நோயை போக்கும் அவதாரமாகவும் மாரியம்மன் வழிபாட்டிற்குறியவளாக அமைகின்ற அதே வேளை மழையைத் தருகின்ற சக்தி படைத்தவளாகவும் அனுகப்படுவது இவ் வழிபாட்டில் சிறப்பம்சமாகிறது. வெப்பு நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும் அம்மனின் கோபம் குறித்த மக்களின் நம்பிக்கையும் கவனிக்கத்தக்கதாகும். செல்வி, செல்லி, ஆத்தாள், செல்லியாத்தாள், செல்லாண்டியம்மன், ஆயிரம் கண்ணுடையாள், ஆயி, மகமாயி முதலிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள். மாரியம்மன் வழிபாடும் இதனுடன் தொடர்புபட்ட பெண் தெய்வ வழிபாட்டும் மரபு நாவலப்பிட்டி பிரதேசத்தில் மக்களால் எவ்வாறான அனுகப்படுகின்றமை பற்றி அவதானிக்க வேண்டியுள்ளது.

நாவலப்பிட்டி எனபது மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் நுவரெலியா மாவட்டத்தை எல்லையாகக் கொண்ட நிர்வாக பிரதேச பிரிப்பாக அமையப்பெற்றுள்ளது. தேர்தல் தொகுதி என்ற வகையில் கண்டி மாவட்டத்திலுள்ள ஓர் தொகுதியாக வரையறுக்கப்படுகிறது. நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிக்குள் பஸ்பாகே கோரளை, கங்கே இஹல கோரளை ஆகிய பிரதேச சபைகள் உட்பட்ட நாவலப்பிட்டி நகர சபையும் உள்ளடங்குகிறது. நாவலப்பிட்டி நெடுங்காலமாகவே ‘நாவல் நகர்’ என்றே அழைக்கப்பட்டு வருகின்றமை கவனிக்கத்தக்கது. 1947ம் ஆண்டு காலப்பகுதியில் தற்போது கம்பளை உடபலாத்த பிரதேச சபைக்குற்பட்ட புசல்லாவை நகரம் உள்ளடங்களாக அப் பிரதேசங்களையும் இணைத்த வகையில் நாவலப்பிட்டி

தேர்தல் தொகுதி பொது நிர்வாக கட்டமைப்பில் உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சி நிலையிலேயே எல்பட உப நீதிமன்றம் தற்போதும் நாவலப்பிட்டி நீதிமன்ற நிர்வாகத்தில் இயங்குகின்றமை கவனிக்கத்தக்கது. 1947ம் வருடம்; சோல்பரி அரசியலமைப்பே அமுலில் இருந்தமையும் கவனிக்கத்தக்கது. இக் காலப்பகுதியில் மலையகத் தமிழர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பாண்மை இனத்தவர்களுடன் போட்டியிட்டு வெற்றியீட்டி இத் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. அக் காலம் தொடக்கம் மலையக மக்களின் கண்டி மாவட்ட அரசியல் அபிலாசைகளை சிதைக்கும் கைங்கரியத்தை தேசத்தின் அரசியல் சிறப்பாகவே அரங்கேற்றி வருகின்றமை கவலைக்குறியதாகும்.

இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த இந்நிய வம்சாவளி தமிழர்கள் மன்னார் தொடக்கம் மாத்தளை ஊடாக கால்நடையாக மலையக பிரதேசங்களுக்கு வருகைத் தந்தார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் தப்பிப் பிழைத்தவர்கள் மாத்திரம் இலங்கையில் பெருந்தோட்ட பொறிமுறைக்கு இரையாகி பிரித்தானியர்களுக்கும் சுதந்திர இலங்கைக்கும் செல்வத்தை பெற்றுக்கொடுத்தார்கள். இப் பிரயத்தனத்தில் பெற்ற கசப்பான அனுபவங்களை கண்டிச்சீமையிலே, பஞ்சம் பிழைக்க வந்த சீமை ஆகிய நாவல்கள் உட்பட்ட கண்டிச் சீமை ஆய்வு நூலும் பதிவு செய்துள்ளமை குறிப்pடத்தக்கது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே கால் நடையாக வருகைத்தந்த மக்கள் அந்தியாகும் பொழுதுகளில் உறங்கி களைப்பை போக்கி வந்துள்ளார்கள். இவர்களது வரவோடு நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்தே காணப்பட்டன. தெய்வ நம்பிக்கையும் அவற்றோடு தொடர்புபட்;ட சமபிரதாயங்களும் மிக முக்கியத்துவத்திற்குறியவைகளாகும். தனது தாய் பூமியில் இருந்து நம்பிக்கையோடு வழிபட்ட சிலைகளையும், சிலைகளுக்கு ஒப்பான கற்கலையும் எடுத்து வந்துள்ளார்கள். ‘பிடிமண்’; என்பது மலையக மக்களோடு சமகாலத்திலும் மிக நெருங்கிய தொடர்பினையும் நம்பிக்கையினையும் கொண்டுள்ளது. இப் பிடி மண்ணை பொட்டலமாக்கிய நிலையில் அதனையும் எடுத்துக் கொண்டே அவர்களது பயணம் அமைந்துள்ளது. இவ்வாறு நம்பிக்கையின் பிரவாகமாக அமைந்த சிலைகள், கற்கள், பிடிமண் பொட்டலங்கள் ஒய்வு நிறைந்த பயணத்தின் பின்னர் அவற்றை காவிக்கொண்டே ஒவ்வொரு நாளும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறு காலை வேளையின் பயணத்தை தொடங்கும் போது மேற்குறித்த நம்பிக்கை வடிவங்கள் வைத்த இடத்திலிருந்து எடுக்க முடியாத நிலைக்குற்பட்டிருக்கின்றது. அவ்வாறான இடங்களில் வருகைத்தந்த

கூட்டத்தினரை அம்மன் இப் பிரதேசத்தல் தோட்டம் அமைப்பதற்கு ஆணை வழங்கிகிட்டாள் என்ற நம்பிக்கையில் தோட்டங்களை உருவாக்கியுள்ளார்கள். கல் அல்லது சிலை அல்லது பிடிமண் இயல்பாகவே மண்ணோடு ஒட்டிக்கொண்ட இடங்களே அம்மன் ஆலயங்களாக உருப்பெற்றன. அவ்வாறு உருவான முதலாவது ஆலயமாகவே பன்னகாமம் முத்துமாரியம்மன் ஆலயம் கருதப்படுகிறது. பன்னகாமம் எனும் தோட்டமே பின்னாளில் மாத்தளை என அழைக்கப்படுகிறது. இவ் ஆலயத்தை சூழ தேயிலை தோட்டங்களும் ஆலயங்களும் இம் மாவட்டத்தில் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறே மலையகத்துடன் தொடர்புபடுகின்ற மாவட்டங்களில் இந்திய வம்சாவளி தமிழர்கள் நிலைகொள்கிறார்கள்.

சம காலத்திலேயே மாத்தளை ஊடாக கண்டியை சூழவும் நாவலப்பிட்டி வழியாகவும் குடியேற்றங்கள் ஊடுருவப்படுகின்றது. இப் புலம்பெயர்வின் முக்கிய அங்கமாக நாவலப்பிட்டி பிரதேசத்தை சூழ இம் மக்களின் குடியேற்றம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. நாவலப்பிட்டிக்கு அண்மையிலுள்ள கம்பளை சிங்கபிட்டியில் கோப்பி பயிர்ச்செய்கை ஆரம்பம், லூல்கந்துரவைத் தொடர்ந்து தேயிலை பயிர்ச்செய்கையின் தீவீரம், இரயில் போக்குவரத்தில் கேந்திர நிலையமாக நாவலப்பிட்டி புகையிரத நிலையம் என்ற வகையில் இப் பிரதேசத்தில் மலையக மக்களது ஊடாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந் நிலையில் இம் மக்களோடு தொடர்புபட்ட வழிபாட்டு முறையும் நம்பிக்கைகளும் மிகுந்த கவனத்தை கொண்டதாக அமைகிறது. இப் பிரதேசங்களின் காணப்படும் அம்மன் ஆலயங்கள் பிரதான வீதிகளுக்கு அருகில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ஆலயங்களில் நாவலப்பிட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், இம்புல்பிட்டி, கல்லாறு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், கடியன்லென கருமாரியம்மன் ஆலயம், கட்டபுலா ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், கொலபத்தனை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும். கொலபத்தனை தோட்டத்தை அடுத்து அமைந்துள்ள குயின்ஸ்பெரி தோட்டம் மலையக மக்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும், ஆன்மீக நம்பிக்கையோடும் மிக நெருக்கமான தொடர்பினை கொண்டமைந்துள்ளது. மலையகத்தோடு தொடர்பு கொண்ட ஆன்மீக அடையாளமாக ‘நவநாதர் சித்தர்’ எனும் நாமம் விளங்குகிறது. நவநாதர் சி;த்தரின் அற்புதங்கள் மலையக மக்களின் வரலாற்றறோடு தனித்துவமாக நோக்கப்படுகிறது. மாரியம்மன் வழிபாட்டுடனும் நம்பிக்கையுடன் தொடர்புபடுகின்ற தொன்மங்களோடு நெருங்கியத் தன்மையை உணர முடிகிறது.

அம்மன் வழிபாடு தொடர்பில் பல தொன்மக்; கதைகள் கூறப்படுகின்றன. அவற்றுள் மாத்தளை வடிவேலன் குறிப்பிட்டுள்ள இரேணுகாதேவி பற்றிய தொன்மக்கதை பிரதானமாக கொள்ளப்படுகிறது. அபிதான சிந்தாமணியில் ஜமதாக்கின்p மாமுனிவரின் துணையாக இரேணுகாதேவி சித்தரிக்கப்படுகிறாள். இரேணுகையின் கணவன் இறந்த போது, இரேணுகை உடன்கட்டை ஏறுகிறாள். ரேணுகை உடன்கட்டை ஏறிய நிலையில் இந்திரன் வருணனை ஏவிப் பெருமழை பெய்வித்துள்ளான். உடலிலுள்ள ஆடைகள் எரிந்து போயின. உடலெங்கும் தீக்கொப்பளங்கள் தோன்றின. ரேணுகை தனது உடலில் உடைகளற்ற நிலையில் அங்கிருந்த வேப்பிலைகளை பறித்து உடையாக அணிந்துக்கொள்கிறாள். பின்னர் அருகிலுள்ள ‘புலையச் சேரி’ எனப்படும் ஒடுக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று உணவு தருமாறு வேண்டுகிறாள். இச் சேரியில் வாழும் மக்கள் தமது உணவை வழங்காது பச்சரிசி, வெல்லம், மா, இளநீர், முதலியவற்றை வழங்கியுள்ளார்கள். அவற்றை உண்ட நிலையில் வண்ணார் வீதி சென்று உடையை பெற்று அணிந்து கணவனை எரித்த இடத்திற்கு காலை வேளையிலேயே வந்துள்ளாள். ரேணுகையின் முன்னால் தோன்றிய சிவனின் அசரீரி ‘நீ நம் சிவசக்தி அம்சமாக வந்தவள்: நீ பூவுலகில் கிராம தேவதையாகக் கோயில் கொண்டு வாழ்ந்திடு. கிராமப்புற மக்களுக்கு வரும் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி, அவர்களுக்கு அருள் செய்து, நீ மாரி எனப் பெயர்க்கொண்டு சக்தி அம்சமாக வாழ்ந்திடு, உன் உடம்பில் ஏற்பட்ட தீப்புண் கொப்பளங்களே அம்மை நோய். நீ தரித்த வேப்பிலையே அந் நோய்க்கு மருந்தாகும். இச் சந்தர்ப்பத்தில் பச்சரிசி, மா, வெல்லம், இளநீர், கூழ் ஆகியவைவே உனக்குறிய நைவேத்தியம் ஆகும். உனை போற்றி வழிபடுபவர் துயர் நீக்குக.’ எனற சிவனது வரத்திற்கு அமைய இரேணுகை ‘மாரி’ எனும் நிலை பெறுகிறாள். ஜமத்க்கினி முனிவரின் கட்டளைப்படி இரேணுகையின் தலையை வெட்டி பரசுராமர் புலையர் குல பெண்ணுக்கும், புலையர் குல பெண்ணின் தலையை பிராமண பெண்ணான ரேணுகையின் உடம்புக்கும் பொருந்தியதாகவும் நம்பப்படுகிறது. இங்கு மாரியம்மன் பிராமணப் பெண்ணின் தலையையும், புலையர் குல பெண்ணின் உடலையும் கொண்டிருப்பதால் சில மாரியம்மன் கோயில் கருவரையில் மாரியம்மனின் தலையை மாத்திரம் வைத்து வணங்கும் மரபும் காணப்படுகிறது. உயர்ந்த சாதியினர் இரேணுகாதேவியாகிய மாரியம்மனை வழிபடலாம் என்பதோடு, புலையர்குல பெண்ணான மாதங்கி அல்லது கங்கம்மாவை வழங்கலாம் என முனிவர் அறிவித்ததாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கத்தில் இம் மக்களிடம் நிலவிய சாதிய வேறுபாடுகளை இல்லாமல் செய்யும்

கைங்கரியமாகவும் அமையப்பெறுகிறது. மாரியம்மன் திருவிழாவில் எல்லா சாதியினரும் பங்கெடுக்கும் வகையில் கிரியைகள் கட்டமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ரேணுகைக்கு உடை வழங்கி உதவிய வண்ணார் குலத்தை அடையாளப்படுத்தும் வகையிலேயே ஆலயத்திலும், திருவிழாக்களிலும் மாத்து கட்டும் நடவடிக்கைகளில் வண்ணார் அப் பொறுப்பை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மாறாக மாரியம்மன், மாதங்கி நிலையிலிருந்த வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றமையும் அவதானத்திற்குறியதாகும். மக்களின் அம்மை நோயை போக்கிய புத்த சமய பெண்துறவியே பின்னர் மாரியம்மனாக வழிபாட்டிற்குறியவளாக ஆக்கப்பட்டாள் என்ற நம்பிக்கையும் கட்டியெழுப்பப்படுகிறது.

தமிழக கிராமங்களில் இருந்து ஆள் திரட்டும் பணிகளில் பெரிய கங்காணிமார்கள், சிறிய கங்காணிமார்கள் தீவிரமாக டீடுபட்டார்கள். இராமேஸ்வரம், தனுஸ்கோடி ஆகிய இடங்களில் இருந்து பாக்கு நீரிணை ஊடாக படகுகள் மூலமாக வருகைத் தந்த தமிழர்கள் மன்னார், மாந்தை ஆகிய துறைகளில் இறங்கினார்கள். கால்நடையாக பன்னகாமம் (மாத்தளை) நோக்கிய பயணத்தில் துன்பியல் அனுபவங்களை தனதாக்கிக் கொண்டார்கள். தனது குல தெய்வமான அம்மனை மனதில் இருத்திய நிலையில் அவர்களது பயணம் தொடர்ந்துள்ளது. அவரகளது பயணம் பன்னகாமத்தை அடைந்த நிலையில் அச் சூழலில் மாலை வேளையில் பட்டுப்பாவாடையுடன் சிறுமி ஒருத்தி பூப்பறித்து விளையாடிக் கொண்டிருந்தாள். இதனை அவதானித்த கூட்டத்தினர், இது நம்முடன் வந்தவர் அல்ல, என அடையாளம் கண்டு கொண்டார்கள். அச் சிறுமியின் அருகே சென்று பார்த்ததும் அச் சிறுமியை காணமுடியவில்லை. பூ வாசனையோடு சாம்பிராணி வாசனையும் மணி ஓசையும் கேட்டுள்ளது. இவ்வாறு காட்சி தந்தவள் மாரியம்மன் என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஏலவே இவ்வாறு வருகைத் தந்தவர்களுக்கும் அம்மன் இவ்வாறே காட்சி தந்தமை பற்றிய கவனம் எடுத்துரைக்கப்படுகிறது. இவ்விடமே மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமையப்பெற்றுள்ள இடமாக அமைகிறது.

முத்துமாரியம்மனின் அனுக்கிரகம் தொடர்பில் நாவலப்பிட்டி குயினஸ்பெரி தோட்டத்தோடு தொடர்புபட்;ட பின்வரும் தொன்மக்கதையும் கவனிக்கத்தக்கது. குயின்ஸ்பெரி பெரியங்கங்கானி தென்னிந்தியாவிற்கு சென்று பெண் தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளார். அவ்வாறு வந்த பெண்களில் ஒருவர் மிக அழகாக தென்பட்டுள்ளார். அவள் அழகில் மயங்கிய

பெரியங் கங்காணி, அவள் மீதுள்ள பாலியல் இச்சையயை தீர்த்துக்கொள்வதற்கு பல முறை முயன்றுள்ளார். அதற்கு ஒத்துழைக்காத நிலையில் ஓர் நாள் கூடையும், கம்பளியும் வழங்காது தூரத்து மலைக்கு தன்னந்தனியே அனுப்பி வைக்கின்றார். அன்றைய தினம் ஏனைய பெண்கள் ஆறு இறாத்தல் மாத்திரம் கொழுந்து பரித்துள்ள நிலையில் குறித்த அப் பெண் அறுபது இறாத்தல் கொழுந்து பரித்துள்ளாள். நிறுவை முடிந்ததன் பின்னர் அப் பெண் மலை உச்சியை நோக்கி வேகமாக நடந்துள்ளாள். அவளை கங்காணி உட்பட்ட ஏனையவர்கள் பின் தொடர்ந்துள்ளார்கள். மலையுச்சியில் வேப்பமரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அப் பெண்ணுடன் பேச முயற்சி செய்துள்ளார்கள். அருகில் சென்று பார்த்த போது அப் பெண் சிலையாக மாறியுள்ளார். இதன் பின்பே இப் பெண் மாரியம்மன் என அடையாளப்படுத்தியுள்ளார்கள். தனது தீய செயலுக்காக மனம் வருந்திய பெரிய கங்காணியும் தனது தவறை உணர்ந்து, மனம் திருந்தி அம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.

1823ம் வருடத்தின் பின் ஏற்பட்ட மலையக மக்களின் புலம்பெயர்வு காலத்திலேயே நாவலப்பிட்டியில் முத்துமாரியம்மன் ஆலயம் அமைக்கப்பெற்றிருந்தமைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குயின்ஸ்பெரி தோட்டத்தோடு தொடர்புபட்ட அம்மன் தொடர்பான தொன்மச் சான்றும் கவனிக்கத்தக்கது.

குயின்ஸ்பெரி தோட்டத்தில் நவநாத சித்தர், நாவலப்பிட்டிக்கு அருகாமையிலுள்ள குயில்வத்தை தோட்டத்தில் நாகநாத சித்தர் ஆகியோரது அபரீத செயற்பாடுகள் கவனிக்கத்தக்கது. 1870 காலப்பகுதியில் கோயில் அமையப்பெற்றுள்ள இடத்தில் கிழக்கு முகம் பார்த்த நிலையில் கோயில் அமையப்பெற்றுள்ளது. கொரக்காவத்தை தோட்டத்தின் தொழிலாளர்களும் நகர வர்த்தகர்களும் இணைந்து அமைக்கப்பட்ட அவ் ஆலயத்திற்கு முன்னால் தற்போது காணப்படும் வைத்தியசாலையும் அமையப்பெற்றுள்ளது. இவ் ஆலயத்தில் காணப்படும் குஸ்டரோக நோயினால் அவதியுற்ற நோயாளி ஒருவரை இரவு வேளையில் பயணித்த நவநாதர் சித்தர் அவரை கண்டு வைத்தியசாலைக்கு முன்பு இருக்கும் அம்மனின் அருளால் அது குணமாகும். என்னுடன் வாருங்கள் என குயின்ஸ்பெரிக்கு அழைத்து சென்றுள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு சென்ற குறிப்பிட்ட நோயாளிக்கு குயின்பெரி செல்லும் முன்பே அவரது நோய் குணமாகியது தொடர்பில் செவிவழியாக கதைகள் உள்ளன.

தொள்ளாயிரம் ஆண்டின் முற்பகுதியில் சன்னியாசி ஒருவர் நாவலப்பிட்டிக்கு வருகைத் தந்துள்ளார். இவ் ஆலயத்தின் செயற்பாடுகளில் பொறுப்பாக இருந்த அப்பாவு ஆச்சாரி, வேலு ஆச்சாரி ஆகியோரை சந்தித்து தான் சமயபுரயத்தில் இருந்து வருவதாக கூறியுள்ளார். இவ் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் சமயபுரத்தில் இருந்து கொண்டு வந்த அம்மனின் திருமுகத்தை இவ் ஆலயத்தில் வைத்து கொடுத்துவிட்டு தான் சுகவீனமடைந்திருப்பதால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற போவதாக கூறி விட்டு சென்றுள்ளார். விக்கிரகத்திற்குறிய பூசைகளை உரியவாறு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய வேலு ஆச்சாரியினுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்துள்ளார்கள். பின்னர் ஆச்சாரிகள் இருவரும் குறித்த சன்னியாசியைத் தேடி வைத்தியசாலைக்குள் சென்ற போது அவ்வாறு ஒருவர் வரவில்லை என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. மறாக சிகிச்சைப் பெற்று மீளவும் வருகைத்தந்து வேலு ஆசாரியின் வீட்டில் அச் சிலை பூஜிக்கப்பட்ட முறையை அவதானித்து மகிழ்ச்சியுற்று ஆலயத்தில் வைத்து பூஜை செய்யுமாறு ஆலோசனை வழங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் சமயபுர அம்பாளின் அனுகிரகத்தால் அம்மனே இயலபாக அருள் பாலிக்க வந்துள்ளதான நம்பிக்கை இப் பிரதேசத்தில் நிலவுகிறது. குறித்த அம்மனின் தலை உருவம் இன்னமும் இவ் ஆலயத்தில் பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் ஆச்சாரிகள் இருவர் உட்பட பிரமுகர்கள் இணைந்து அவ் ஆலயத்தை நிரந்தர கட்டிடமாக அமைக்க முற்பட்டுள்ளார்கள்.

கோப்பி பயிரச்செய்கை அதன் பின்னர் கோப்பி பயிர்ச் செய்கையில் பாதிப்பை ஏற்படுத்திய நோய் நிலைமை, பிளேக் நோய் பரவல் போன்ற காரணங்களோடு நாவலப்பிட்டியில் இந்திய வம்சாவளி தமிழர்கள் தொடர்பு படுகிறார்கள். நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள கொத்மலை வீதியிலுள்ள கடைகள், வீடுகள் கொடூர பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் அப் பகுதியில் வசித்தவர்கள் அப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டவர்கள் தற்போது ஐ.டீ.எச் பிரதேசத்தில் வைத்தே பராமரிக்கப்பட்டார்கள். இப் பகுதிக்கு அக் காலத்தில் வைக்கப்பட்ட பெயரே இது வரையில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. அப் பகுதியில் அருகிலேயே அக் காலத்திலும் பொது மையவாடியும் அமைக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொத்மலை வீதியில் அப்புறப்படுத்த வேண்டிய பட்டியலில் கோயில் கட்டிடமும் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பணியில்

ஈடுபடுத்தப்பட்டவர்கள் தயங்கினார்கள். கோயிலையும் உடைக்க வேண்டும் என்ற ஆங்கிலேய பொது சுகாதார ஊழியரும் பணிக்கவே அருகில் இருந்தவரகள் உடைக்க வேண்டாம் என மன்றாடியுள்ளார்கள். வேலையாட்கள் ஒதுங்கிய நிலையில அப் பணியை பொது சுகாதார உத்தியோகத்தரே செய்வதற்கு துணிந்துள்ளார். அவரினால் கதவு உடைக்கப்பட்ட போது பார்த்தவர்கள் அதிசயிக்கும் வகையில் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரண்டு மாதமளவில் மூடி வைக்கப்பட்டிருந்த கருவறையில் காலையில் பூ வைத்து அலங்கரித்தது போன்றும் இரண்டு மாதத்திற்கு முன்னர் ஏற்றி வைத்த விளக்கும் எரிந்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அனைவரும் வியந்துள்ளார்கள். குறித்த பொது சுகாதார உத்தியோகத்தரும் கோயிலை உடைக்க வேண்டாம் என கூறி வழிபட்டுள்ளார்.

சமூகம் ஏற்றத்தாழ்வுகளுடனே கட்டமைக்கப்பட்டு நகர்கிறது. அவ் ஏற்றத்தாழ்வுகள் நிகழ்வதற்கு பல காரணிகள் ஏதுவாக அமைகின்றன. ‘நாகரீக விளக்கின் ஒளியை பெறும் மேல் நிலை மக்களை மேற்கத்திய சமூகவியலாளர்கள் ‘மேலோர்’ என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் கருத்துப்படி இம் மேலோர்கள் சமுதாய மேலடுக்கில் இருந்து கொண்டு, சமுதாயத்தினை ஆள்வோர்களாக அமைகின்றனர். இவர்கள் பரம்பரை மேலோர்களாக இருக்கலாம், அல்லது அடிமட்டத்திலுள்ள ஒரு மனிதனோ மேலோர்களாக மாறலாம்’ என்ற ஆ.சிவசுப்ரமணியத்தின் கூற்று கவனிக்கத்தக்குது. அவ்வாறே இந்திய சூழலில் அடித்தள மக்கள் பற்றிய அவரது பின்வரும் கருத்து நிலையும் குறிப்பிடத்தக்கதாகும். ‘ சாதி, செய்யும் தொழில், அரசியலாதிக்கம், பாலியல் நிலை, பொருளாதார நிலை, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் மக்களே அடித்தள மக்கள்.’

தமிழ் நாட்டில் பெரும்பாலும் மக்களால் வணக்கத்திற்குறிய தெய்வங்களாக போற்றுபவர்கள் கொலையுண்ட மானிடர்களாகவே திகழ்கிறார்கள். இக் கொலைகள் பொது நலம் கொண்ட வேறுபாடுகளை களைய முற்பட்டவர்கள் கொலையுண்டதன் பின்னரே இந் நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அதனடிப்படையில் பெண் தெய்வங்கள் பாலியல் தொல்லைகளில் இருந்தே தன்னை மீட்டுக்கொண்ட நிலையிலேயே உரு பெறுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை மேலோர் அடித்தள மக்களிடத்தே தொடர்ச்சியாக பிரயோகித்த வரலாற்றை தமிழ் சமூகம் தொடர்ச்சியாகவே அனுபவித்து வந்துள்ளது. பெண் தெய்வங்களை தாய் தெய்வங்கள், கன்னி தெய்வங்கள் என வரையறுப்பார்கள். மேலாதிக்கத்தை செலுத்தும் தரப்பினர் அடித்தட்டு மக்களில் பெண்களை பாலியல் இச்சைக்கான பொருளாக பிரயோகிக்கும் விடயத்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மூன்று வழிகளில் கற்பு நிலை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றாக பாதிப்பு நடக்கும் ஊரில் இருந்து வேறு ஊருக்கு தப்பி செல்லும் முயற்சி இடம்பெற்றுள்ளது. அம் முயற்சி; வெற்றியளிப்பதுமுண்டு. சில சந்தர்பபங்களில் அப் பெண் தப்பிச் செல்லும் போது கொலையாவதும் உண்டு. அவ்வாறான பாதிப்பு நிலையை அறிந்து உறவினர்களே

அப் பெண்களை கொலை செய்வதுமுண்டு. இல்லாவிட்டால் அப் பெண்களை தற்கொலை செய்வதற்கு தூண்டுவதுமுண்டு. இதன் மூலம் தங்கள் குல பெருமை பாதுகாக்கப்பட்ட திருப்தியில் மறைந்த பெண்கள் நடுகல் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு தெய்வங்களாக்கிய வரலாறையே தமிழ் சமூகம் கொண்டுள்ளது. இதனை பொன்னு மாரியம்மன், போத்தி அம்மன், புதுப்பட்டி அம்மன் ஆலய வரலாறுகள் புலப்படுத்துவதை அறியலாம்.

மேற்குறித்த சிக்கல் நிலையுடன் வாழ்வை கழித்த நிலையிலேயே இருநூறு வருடத்திற்கு முன்னர் புலம்பெயர்ந்த தமிழர்களிலும் இவ்வாறான நிலை காணப்பட்டமை கவணிக்;கத்தக்கது. அதனுடைய நீட்சி நிலையிலேயே தமிழ் சமூகத்தோடு ஒன்றாக இருந்த மோலோர் என்ற வரையறைக்குள் இருந்த கங்காணிகள், கங்காணித்தனத்திற்கு ஆதரவானவர்களின் பாலியல் இச்சைகளுக்கு புலம்பெயர்ந்த பெண்களும் இரையானதையும் அதற்கான முயற்சிகள் இடம்பெற்றதையும் அறிய முடிகிறது. இவ்வாறான சூழலோடு பிரித்தானிய காலனித்துவத்தின் நிர்வாகிகளும் இணைந்து மலையக பெண்களை சிதைக்கும் செயற்பாட்டில் உள் நுழைகிறார்கள். பிரித்தானிய துரைமார்களின் தனிமை, ஆதிக்க நிலை என்பன அதற்கு சாதகமான சூழ்நிலைகளையே உருவாக்கின. இந் நிலையில் பெண்களின் நிலை பாதுகாபப்பற்றதாக அமைந்தது. இந் நிலையில் இவ் அம்மன் வழிபாடு பாதுகாப்பு பொறிமுறையாகவும் கவசமாகவும் பிரியோகிக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. மலையக மக்களிடத்தே நம்பிக்கையை தருகின்ற அதே வேளை மலையக பெண்களிடத்தே பாதுகாப்பை உறுதிபடுத்தியதோடு, அம்மன் எந்த பெண் உருவத்தில் இருப்பாள் என்ற பயம் ஆண்களிடத்தில்

நிலைகெண்டுள்ளமையும் தெளிவாகிறது. இம் மக்களால் நேசிக்கப்படுகின்ற காமன் கூத்து எல்லா கூத்துக்களிலும் தலை சிறந்ததாக விளங்குகிறது. அக் காலத்தில் நிகழ்ந்த பலதார மணம், பாலியல் ஒழுக்கமின்மை போன்ற காரணத்தினால் காமன் கூத்து ஓர் ஒழுக்க கோவையாக, காமத்தை முறையாக கைக்கொள்ள வேண்டிய பாடத்திட்டமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே பெண்கள் மதிப்pற்குறியவர்கள் என்பதை ஆண்கள் உணர்வதற்கும், உணர்த்துவதற்கும்; அம்மன் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிற அதே வேளை பெண்களின் பாதுகாப்பையும் கற்பின் மேன்மையையும் எடுத்துரைக்கும் பணியையும் பெண் தெய்வ வழிபாட்டு மரபு போதித்து நிற்கிறது. மலையகத்தல் அவ்வப்போது நிகழும் வன்முறை சம்பவங்கள் தமிழர்களை தாக்குவதற்கான களமாக அமைந்தாலும் இவ் வழிபாட்டு முறையை அவதானிக்கும் பெரும்பாண்மை ஆதிக்க சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் கருவியாகவும் அமைகின்றமை சிறப்பம்சமாகிறது. இது வெறுமனே கலவர சூழ்நிலையில் மட்டுமல்லாது சமூக பொருளாதார கல்வி கலாசார அம்சங்களின் நகர்வுகளிலும் உத்தரவாதத்தை தருவதாக மலையக மக்களால் நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு முகம் பார்த்த நிலையில் அமையப்பெற்றிருந்த ஆலயம் 1918ம் வருடத்திற்கு பின்னரே மேற்கு திசையை பிரதானப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. 1928ம் வருடம் முதலாவது கும்பாபிசேகம், 1067ம் வருட கும்பாபிசேகம், 1996ம் வருட கும்பாபிசேகம், 2009ம் வருட கும்பாபிசேகம் என்ற வகையில் இக் காலக்கட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதன் தொடர்ச்சி நிலையில் 2024.06.09 இன்றைய கும்பாபிசேகம் இவ் ஆலய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. கஜலக்சுமி மண்டபத்தை நன்கொடையாக வழங்கியமை, தமிழ் கலாசார மண்டபம் அமைத்தல், அறநெறி பாடசாலைக் கட்டிடம் அமைத்தல், சித்திரதேர் நிர்மானம், ஆலயத்தை முறையாக பதிவு செய்தல், அறநெறி பாடசாலையை நடத்துதல், முறையே 1967ல், 1996ல் கும்பபாபிசேக சிறப்பு மலர் வெளியீடுகள், 2016ல் சித்திரதேர் நிர்மானத்தை சிறப்பு படுத்திய சிறப்பிதழ் வெளியீடு போன்ற செயற்;பாடுகள் ஆலய வரலாற்றில் முக்கியத் தடம் பதித்த நிகழ்வுகளாக அமைகின்றன. ஆலய நிர்மானித்த நாள் தொடக்கம் இதன் வளர்ச்சிக்கு பங்கேற்ற அத்தனை பெரும் உள்ளங்களையும் நினைவு கூர்ந்த வண்ணம் தற்போதுள்ள நிர்வாகிகள் இப் பணியையும் ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. சமூக ரீதியிலான பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இனிவரும் செயற்பாடுகள் அமையவும் இன,

மதங்களுக்கிடையிலான நேச உறவும் விரித்தி பெறவதற்கான அனுகுமுறைகளை சமூக நிறுவனம் என்ற வகையில் முன்னெடுக்க பிரார்த்திபோமாக.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.