கட்டுரைகள்

“எங்கள் தமிழாம் சிங்கார சென்னைத் தமிழும்” …. சொல்…2…..சங்கர சுப்பிரமணியன்

 நான் படித்த பார்த்த கேட்ட விடயங்களின் தொகுப்பையே நான் இங்கு வழங்குகிறேன். எதுவும் எனது சொந்தக் கருத்து அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நாம் பார்க்கப் போகும் சொல் வாழ்வோடு சம்பந்தப்பட்டது. வாழ்வு என்றால் பிறப்பு, இறப்பு மற்றும் இந்த இரண்டுக்கும்
இடைப்பட்ட வாழ்க்கையாகும். நான் இப்போது சொல்லப்போகும் சொல் இறப்புடன் தொடர்புடையது. சாவுடன் தொடர்புடைய சொல் என்னவாக இருக்கும்? என்னப்பா சாவுல தொடர்புடைய அப்படிப்பட்ட சொல் என்கிறீர்களா?

சாவில் தொடர்புடைய இச்சொல்
செத்தபின்தான் பிரச்சனையாய் மாறி நிற்கிறது. மனிதன் உயிரோடு இருக்கும்போதுதான் சாதி, மதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் என்று இல்லை. இறக்கும்வரை பேச்சு நின்றாலும் மூச்சு நிற்பதில்லை என்பதைப்போல இறந்தபின் இறந்தாலும்
பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

இறந்த பின்னும் பிரச்சனையா? ஆம், பிரச்சனைதான். இந்த இடத்தில் புதைக்கக் கூடாது இந்த இடத்தில்  எரிக்கக் கூடாது என்பதுதான். இது ஒரு பிரச்சனை என்றால் இந்த வழியாக பிணத்தை எடுத்துச் செல்லக்கூடாதென்று ஒரு பிரச்சனை. இறந்த பின் தெய்வத்திற்கு சமம் அல்லவா? அப்படியென்று யார் சொன்னது? அதெல்லால் வசதிவாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே.

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்பது திருக்குறளில் மட்டுமே. இறப்பொவ்வா
சமூக வேற்றுமையால் என்பதுதான் மெய். இறந்த பின்னும் ஆடம்பரம் சிலருக்கு தேவைப்படுகிறது. ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் புகழுக்காக ஒரு ஆட்டம். இறந்த பின் உடலை அடக்கும் பண்ணும்போதும் ஆட்டம்.

ஆவி போனபின் போனவன் தன் இறுதிச்சடங்கை கண்விழித்து பார்க்கவா போகிறான். எல்லாம் பணபலம் படைபலம் புகழை நிரூபிக்கவே இங்கு நடக்கிறது. நான்கு பேர் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாரதியின் புகழ் குறைந்தா போயிற்று. நானிலமே போற்றுகிறதே.

சராயு நதியில் இறங்கி தற்கொலை செய்த ராமன் புகழ் மங்கியா போய் விட்டது?
12 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பிறந்து இறந்தவருக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டி கொண்டாடவில்லையா?

எனவே இருக்கும்போது என்ன செய்தாய் என்பதுதான் அவசியமேயன்றி இறந்தபின் எப்படி செல்கிறாய் என்பது அவசியமல்ல.
பணமிருப்பவனின் இறதிச்சடங்கு பகட்டாய் அரங்கேறுகிறது. பணமில்லாதவன் அவன் இறந்த பின்னும் இல்லாமை துரத்துகிறது.

இந்த சடங்கு சம்பிராதயங்களில் பிறப்பிலிருந்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பணம் சுழல்கிறது. அந்த சம்பிரதாயச் செலவு இறப்பையும் விடுவதில்லை. பாடை கட்ட, எடுத்துச்செல்ல, சங்கு ஊத, தாரதப்பட்டை என்று குடம் உடைத்து கொள்ளி போடும் வரை பணம் பலவழிகளில் விளையாடுகிறது.

சாவு வீட்டிலும் பேரம்பேசி பணத்தை கறக்கிறார்கள். பொறுக்குபவனை பொறுக்கி என்று சொல்பவது மாதிரி கறக்கிறவனை கறக்கி என்றழைக்கப் படுகிறான். இதனால் பணம் கறப்பவனும் கறக்கிதான். அதைத்தான் சாவில் பணம் கறப்பவனை சாவுகறக்கி என்றார்கள்.

இப்படி சாவுகறக்கி என்ற சொல் அயன்புரம் அயனாவரம் ஆனதைப் போல அமைந்தகரை அமிஞ்சிக்கரை ஆனதைப்போல சாவுகிராக்கி ஆனது. இந்த சாவுகிராக்கியில் வரும் கிராக்கியின் வேர்ச்சொல் கிரயம் ஆகும். கிரயம் என்றால் விலை. கிரயக்காரன் என்றால் விற்பவன் என்று பொருளும் உண்டு.

வடமொழியில் கிரஹக் என்றால் வாடிக்கையாளர் என்று பொருள் வருகிறது. ஆதலால் இந்த வடசொல்லின் திரிபுகூட கிராக்கி என்றாகியிருக்கலாம். இவ்வாறு பல அவதாரங்களை எடுத்து வந்த சொல்லை ஆராதிப்பதை விட்டு அவதூறு செய்யலாமா?
அவதாரங்களை ஆராதிப்பதுதானே இங்கே பின்பற்றப் படுகிறது.

இனி இந்த சொல்லின் பயன்பாடு பற்றிப் பார்ப்போம். சென்னையில் பாதசாரியையோ அல்லது மற்ற வாகன ஓட்டிகளையோ அவர்கள் திடீரென்னு சாலையை கடக்கும்போது ஆட்டோ, பேருந்து, கார், மற்றும் லாரி ஓட்டுனர்கள் சாவுகிராக்கி என்று
சொல்லி திட்டுவார்கள்.

ஆனால் ஏன் அப்படி சொல்கிறார்கள்? விஞ்ஞானத்தில் மட்டுமே நடக்கக்கூடிய இடமாறு தோற்றப்பிழை இங்கு எப்படி நடக்கிறது? என்று யோசித்தபோது வாகனத்தில் அடிபட்டு இறந்து சாவுகிராக்கிகளுக்கு உதவப்போவதை
உணர்த்துகிறார்களோ? இருக்கலாம்.

இவ்வாறு சென்னைத் தமிழில் பல சொற்கள் வேறுபாட்டுடன் கலந்திருக்கிறது. ஏதோ திரைப்படத் துறையினர்தான் அறிமுகப் படுத்தியதுபோல் ஒரு பிம்பம்தைக் காட்டி அந்த சொல் உருவான முறையை உணராமல் திரைப்படத் துறையினருக்கு அந்த பெருமையை கொண்டு சேர்த்துவிடக் கூடாது.

திரைப்படத் துறையினர் அச்சொற்களை பயன்படுத்தாவிட்டாலும் அந்த வட்டாரவழக்கு அந்த வட்டாரத்தில் இருக்கவே செய்யும். சான்றாக சிறுவர்களை அழைக்கும் “ஏல” என்ற திருநெல்வேலியின் வட்டார வழக்கான சொல்லை பெங்களூரில் வாழ்ந்த நான் பயன்படுத்தாது போனாலும் நெல்லையில் அச்சொல் பயன்பாட்டில் இல்லாது போகுமா?

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.