லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம்
லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மூவினங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா, இதுவரை இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களில் முதன்முறையாக புலம்பெயர் தமிழர்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே இச்சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார்.
நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகள் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.
அதேபோன்று தெற்கிலும், குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளை சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.
அதேபோன்று வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பற்றிய தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாகத் திரட்டிவருவதாகவும், அவர்களுடனான முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாதம் ஆரம்பமாகும் எனவும் இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது லண்டன் சென்றிருக்கும் யுவி தங்கராஜா, எதிர்வரும் வார தொடக்கத்தில் பாரிஸிலும், 19 மற்றும் 20ஆம் திகதி வார இறுதி நாட்களில் லண்டனிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புக்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என மூவினங்களைச்சேர்ந்த இலங்கையர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.
அவர்களுக்கு உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் அதன்கீழ் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆணைக்குழு என்பன தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள யுவி தங்கராஜா, அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.
‘இதற்கு முன்னர் இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களைப் பொறுத்தமட்டில், அவற்றில் புலம்பெயர் தமிழர்களோ அல்லது இலங்கையர்களோ பெரும்பாலும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் புலம்பெயர்ந்து சென்ற இலட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றனர்.
எனவே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பதற்கோ அல்லது அச்செயன்முறையில் பங்கேற்பதற்கோ புலம்பெயர் இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதன் ஓரங்கமாகவே இச்சந்திப்புக்களை நடத்துவதற்கு உத்தேசித்திருக்கின்றோம்’ என யுவி தங்கராஜா தெரிவித்தார்.