கவிதைகள்
“உழைப்பவர் உழைப்பைப் போற்றிடும் உயர்தினம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
மேதினம் என்பது விடி வெள்ளியாகும்
வியர்வையைச் சிந்துவார் உயர்வினைக் காட்டும்
சாதனை நாயகர் தம்மையே போற்றிட
பூதலம் மீதிலே பூத்தநல் நாளாகும்
உழைப்பினை நல்குவார் உழன்றுமே இருந்தனர்
உழைப்பினை உறுஞ்சுவார் உயர்ந்துமே நின்றனர்
உழைப்பினை நல்குவார் உணர்வுடன் எழுந்தனர்
உழைப்பினை உறுஞ்சுவார் ஓரமாய் ஒதுங்கினர்
முதலைக் கொடுத்தவர் முதலையாய் நின்றனர்
முயற்சியைக் கொடுத்தவர் முடங்கியே கிடந்தனர்
முயற்சியைக் கொடுத்தவர் எழுந்தனர் கனலாய்
முதலைகள் அனைத்தும் சுருண்டுமே போயின
உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்
உறையும் வீடும் உழைப்பின் வரமே
மண்ணைப் பொன்னாய் மாற்றிடும் உழைப்பை
மாநிலம் நினைக்கவே மேதினம் வந்தது
எத்தனை பேர்கள் இரத்தம் சிந்தினர்
அத்தனை பேரும் உழைக்கும் மைந்தர்கள்
உழைப்புக் கூதியம் உயர்வாய் கேட்டால்
கேட்டவர் வாழ்வை கிழித்துமே போட்டனர்
களைப்பே இன்றி உழைப்பைக் கொடுத்தார்
கண்ணீர் கடலில் மூழ்கியே நின்றார்
காசினைக் கருத்தில் கொண்டுமே இருந்தார்
கடும் உழைப்பதனை காணா நின்றார்
முதலை ஆண்டவர் முதலாளி ஆகினார்
தொழிலில் இருந்தவர் துவண்டே கிடந்தார்
வளமும் உரமும் வழங்கிய மக்கள்
உளமும் மடிந்து உழன்றே கிடந்தார்
எத்தனை பொருட்கள் எத்தனை உழைப்பு
எத்தனை வேதனை இடருடன் வாழ்க்கை
இத்தரை உழைப்பவர் சித்தத்தில் வைப்போம்
இடரினைப் போக்கிட எல்லோரும் இணைவோம்
ஓடப்பராய் இருந்தார் உழைத்திடு மக்கள்
உயரப்பராய் வந்தால் உயர்ந்திடும் உழைப்பு
வாடப்பராய் இருப்பார் மனவுறுதி கொண்டால்
வையகமே வாகைசூடி வரவேற்ற நிற்கும்
வையகமே வியந்து பார்த்திட்ட நாளாய்
வருடத்தில் மேதினமே மலர்ந்துமே இருக்கு
மேதினத்தில் வியர்வையெலாம் வெற்றியையே காட்டும்
மேதினத்தில் உழைப்பாரை அரவணைத்து மகிழ்வோம்
உழைப்பவர் கரங்கள் ஓங்கிட வேண்டும்
உழைப்பவர் வாழ்வும் உயர்ந்திட வேண்டும்
உழைப்பவர் உழைப்பை மதித்திடு நாளாய்
உலகமே போற்றுது மேதின நாளை.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா.
மிக அழகான கவிதை