“உரி பொருளும் அதன் உரை பொருளும்” …. பகுதி.2….. சங்கர சுப்பிரமணியன்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
என்கிறார் வள்ளுவர். அப்படியிருக்க நன்றி மறப்பது நன்றன்று. படைப்பாளிகள் தாங்கள்
படைக்கும் படைப்புக்களுக்கான கருப் பொருளை சமூகத்திடமிருந்தே பெறுகிறார்கள். இந்த கட்டுரை எழுதுவதற்குண்டான கருப்பொருளையும் நான் சமூகத்திடமிருந்தே பெற்றேன். கட்டுரையின் முதல் பகுதியிலேயே நான் நன்றி சொல்லியிருக்க வேண்டும். தவறிவிட்டேன், தவறுக்காக வருந்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மிடம் ஒரு சொல் உண்டே, கோடு போட்டா ரோடே போடுவேன் என்பார்களே அதுதான். நில்லுங்க, நில்லுங்க உடனே தவறாக எண்ணி விடாதீர்கள். கோடு போட்டால் ரோடு போட நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் (சென்னைத் தமிழ்) அல்ல.
இதுபோல் சொல்ல வருவதை சரியாக புரிந்து கொள்ளாமல் அன்பர் ஒருவர் எனக்கு சாபமே கொடுத்து விட்டார்.
வெச்சு செஞ்சுட்டார் என்பார்களே. அதுபோல எந்த மட்டத்துக்கு இறங்க முடியுமோ அந்த மட்டத்துக்கு இறங்கி அவரது ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார்.
நம்மால் ஒருவருக்கு மனம் குளிர்கிறதென்றால் அந்த புண்ணியத்தால் நமக்கு சொர்க்கத்தில் ஒரு ஓரத்திலாவது இடம் கிடைக்குமல்லவா? நான் அவர் என்னை இழிவு படுத்தினார் என்று எண்ண மாட்டேன். ஆனால் எதற்காக இவர்கள் பொதுத்தளத்தில் பயணிக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
பொதுவாழ்க்கையில் இதெல்லாம் நடக்கும் என்றறியாமல் கண்டதற்கெல்லாம் கோபப்படுவது கிடையாது. அதை வேறுவிதமாக எடுத்துக் கொள்வேன். மன அழுத்தம் ஒரு வியாதி. அந்த வியாதியைப் போக்க நாம் வடிகாலாகவாவது இருக்க எம்பெருமான் பாற்கடலில் பள்ளிகொண்டான் பலனைத் தந்திருக்கிறானே என்று பரவசமடைவேன்.
அதற்காக கண்முன் நடப்பதை கண்டும் காணாமல் இருக்கமுடியுமா? சிவன் எரித்து விடுவார் என்ற பயமில்லாமல் நக்கீரன் அவன் மனதில் பட்டதைப் பற்றி பேசவில்லையா? என்னைப் பொருத்தவரை கொள்கையற்று ஆமாம்சாமி போடுவதை விட கொள்கைக்காக எரிந்து சாம்பலாகலாம். இதை நான் சொல்லவில்லை. தமிழர் வரலாறு மெய்ப்பித்துள்ளது.
வந்தவேலையை விட்டு வடமிழுப்பதே என் வாடிக்கையாகி விட்டது. பொருள் சொல்லியே பொழுதும் விடிந்துவிடும் போலுள்ளது.கோடு போட்டால் ரோடு போடுவேன் என்பதை பலர் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்.
இதில் கோடு போட்டால் என்றால், சுத்த தமிழில் தாளில் கீறினால், ஆங்கிலத்தில் draw a line (as blue print) என்பதே பொருள். பொறியாளர் கொடுக்கும் அந்த வரை படத்தை வைத்துக் கொண்டு கூலித் தொழிலாளி சாலை போடுவது போல் நான் என்னை நினைத்து இக்கட்டுரையை எழுதுகிறேன்.
ஆங்கிலேயர் ஆட்சியில், ஆட்சிபுரியும் வசதிக்காக மொழிவாரி ராஜ்யமாக பிரிவு படாமல் இருந்த ஆந்திரா, கர்னாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஒன்றிணைத்த சென்னை ராஜஸ்தானியாக வைத்திருந்தார்கள். அப்போது தெலுங்கர், கன்னடர், மலையாளி மற்றும் தமிழர் என்ற வேறுபாடின்றி எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாகவே வாழ்ந்தனர்.
சென்னை தலைநகராக இருந்ததால் எல்லா இனத்தவரும் பணிக்காக சென்னையில் வந்து குவிந்தனர். ஏற்கனவே விஜயநகர பேரரசு மற்றும் நாயக்கர் காலத்தில் வந்த தெலுங்கர்கள் இருந்தனர். சேரர்கள் தமிழர் என்பதால் தமிழ்நாட்டில் மலையாளிகளும் இருந்தனர்.
இதுபோல் ஒரு இனத்தின் நிலப்பகுதியை தெலுங்கர், கன்னடர், மலையாளி, மராட்டியர் என்று பல இனத்தவர்கள் அபகரித்து ஆக்ரமித்ததைப் போல் உலகில் எங்கும் நடத்ததாகத் தெரியவில்லை. ஒரு இனத்தின் நிலப்பகுதியை இன்னொரு இனம் அபகரித்து ஆக்ரமிப்பு செய்ததாகவே வரலாற்றில் காண்கிறோம்.
தஞ்சை பெரிய கோவிலை மராட்டியரிடம்
இருந்து மீட்கமுடியவில்லை. சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் இருந்து மீட்க முடியவில்லை. தமிழ்நாட்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்யாதவர்களை தண்டிக்கும் அதிகாரமில்லை. கோவிலில் தமிழில்லை. சடங்கு சம்பிரதாயங்களில் தமிழில்லை.
இதையெல்லாம் கேட்கப்போனால் இங்கே இழிவாகப் பார்க்காமல் கொஞ்சவா செய்வார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதை சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதையே திராவிடர்கள் வாழும் அண்டை மாநிலத்தவர் நம்மை திராவிடர்கள் என்று பார்ப்பதுமில்லை அவர்களை அவர்களும் திராவிடர்களாக நினைப்பதுமில்லை.
இதனால் திராவிடம் என்பதெல்லாம் ஆரியமாயை என்பதுபோல் திராவிடமாயைதான். இந்த மாயையில் இருந்து பெரும்பகுதி தமிழர் இன்னும்
விடுபடவில்லை என்கிறபோது உண்மை எப்படி எல்லோருக்கும் விளங்கும்.
ஒருவேளை கல்கி வந்துதான் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பாரோ என்னவோ? நான் சொல்வது கல்கி ஆசிரியரை அல்ல. உலகில் அநியாயம் அதிகரிக்கும்போது தோன்றப் போகும் கல்கியைப்பற்றி சொல்கிறேன். நான் சிலசமயம் நினைப்பதுண்டு. ஒருமதத்துக்கு சொந்தக்காரரை பல மதங்களைக் கொண்ட உலகினர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
அதிகமானவர்கள் பேசும் மொழியை வைத்து அம்மொழிதான் ஆட்சி மொழி என்கிறபோது அதிகமானவர்கள் பின்பற்றும் மதத்திலிருந்து தோன்றும் ஒருவரைத்தானே உலகை காக்க வந்தவராக உலகத்தார் ஏற்பார்கள். அல்லது ஒவ்வொரு மதத்துக்கு ஒருவராக கல்கி போல் ஒருவர் தோன்றுவதாகவே வைத்துக்கொள்வோம் ஈழத்தில் மடிந்த ஒன்றரை லட்சம் போதவில்லையோ? வேறெங்காவது கல்கி தோன்ற கோடிக் கணக்கில் எதிர்பார்க்கிறாரோ?
எப்படியோ அந்தந்த மதத்திற்குரியவர்
தோன்றி உலகம் அழியும்போது சிதைக்கப் பட்ட மற்றும் திரிக்கப்பட்ட வரலாறும் அத்தோடு அழிந்தொழிந்து விடுமல்லவா? புலி வருது புலி வருது என்பதுபோல் அங்கே வருகிறார் இங்கே வருகிறார் அப்போது வருவார் இப்போது வருவார் என்று ஆட்டம் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். வந்தபாடில்லை. நம் ஆயுளுக்குள் வரமாட்டார் என்பது மட்டும் தெளிவாய்த்
தெரிகிறது.
-சங்கர சுப்பிரமணியன்.