இந்தியா

கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.

கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்வதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதையடுத்து கச்சத்தீவை மீண்டும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர.

ஒவ்வொரு பாாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்து இருக்கிறது.

இந்த நிலையில் சச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அதில் கூறப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார்.

அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை.

இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.

முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.

1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.

ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.

கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.