சொல்லித்தான் ஆகவேண்டும்! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர்… வேண்டாம்! இந்த விஷப்பரீட்சை!! …. சொல்-02 …. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அண்மைக்காலமாகப் பேசு பொருளாக இருக்கின்ற விடயம் யாதெனில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் அதாவது தமிழர் தரப்பில் – தமிழ்த் தேசிய இனத்தின் சார்பில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது.
இது விடயமாக முதலில் கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழர்கள் போட்டியிட்டு என்ன நடந்ததென்ற அனுபவங்களை நோக்குவோம்.
1978 ஆம் ஆண்டின் நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பின் கீழான முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982 அக்டோபரில் நடைபெற்றது. அப்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் தலைமையாக விளங்கிய அ. அமிர்தலிங்கம் அவர்களைச் செயலாளர் நாயகமாகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி (அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியில் தற்போது உயிர் வாழும் வீ. ஆனந்தசங்கரி, இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராசா ஆகியோரும் உள்ளடங்கியிருந்தார்கள்) இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டது.
அதே வேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்க் கட்சியின் அப்போதைய தலைவர் குமார் பொன்னம்பலம் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை) தனக்கு அளிக்கப்படும் வாக்குகள் 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழீழத் தனி நாட்டுக்குத் தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெருவாரியாக வாக்களித்ததன் மூலம் வழங்கிய ஆணையை மீளவும் உறுதி செய்வதாகக் கருதப்படும் எனக் கூறி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டார்.
அத்தேர்தலில் வெற்றியடைந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா (ஐக்கிய தேசியக் கட்சி) பெற்ற வாக்குகளான 3,450,811 க்கும் இரண்டாவதாக வந்த ஹெக்டர் கொப்பேகடுவ (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) பெற்ற வாக்குகளான 2,548,438 க்கும் இடையில் உள்ள வித்தியாசம் 902,373 ஆகும். குமார் பொன்னம்பலத்துக்குக் கிடைத்த வாக்குகளான 173,934, ஜே.ஆர். ஜெயவர்த்தனா மற்றும் ஹெக்டர் கோப்பேகடுவ ஆகியோரது வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதிலும் கூட எந்தத் தாக்கத்தையும் செலுத்தவில்லை.
தமிழர் தரப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்த பரிஷ்கரிப்புக் கோரிக்கையும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் தமிழ் ஈழத்திற்கான ஆணையை மீளவும் உறுதி செய்யும் விடயமும் அரசியல் ரீதியாக அடிபட்டுப்போயிற்று.
இரண்டாவது அனுபவம் 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலாகும். தமிழர் தரப்பில் ‘ரெலோ’ சிவாஜிலிங்கம் போட்டியிட்டார் (அப்போது ‘ரெலோ’ வில் சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், என். ஸ்ரீ காந்தா, கோவிந்தம் கருணாகரன் (ஜனா) ஆகியோர் ஒன்றாய் இருந்தனர்).
இத்தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகள் 6,015,934. இரண்டாவதாக வந்த சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள் 4,173,185. வித்தியாசம் 1,842,749. சிவாஜிலிங்கத்திற்குக் கிடைத்தது 9 662 வாக்குகள், மஹிந்த ராஜபக்சவினதும் சரத் பொன்சேகாவினதும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் கிட்டவும் நெருங்கவில்லை.
இந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களும் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்கைப் பிடித்த கதையானது. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழர் ஒருவர் போட்டியிடுவது வெற்றி தோல்விகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லையென்பதைப் பௌத்த சிங்களப் பேரினவாதச் சக்திகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிற்று. தமிழரொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போலானது. வெற்றி பெறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தமிழர்களின் வாக்குகள் தேவையில்லையென்பதைத்தான் இந்த இரு தேர்தல்களிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் எடுத்துக்காட்டினார்கள்.
ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பு சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை போட்டிக்கு நிறுத்த வேண்டுமென்பதை ஆதரிக்கும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் புதுவிதமான விளக்கமொன்றை முன்வைக்கின்றனர்.
அது என்னவெனில், 1982 இல் போட்டியிட்ட குமார் பொன்னம்பலமும் 2010ல் போட்டியிட்ட சிவாஜிலிங்கமும் தமது கட்சி சார்பில் அல்லது தனிப்படத் தமிழ் வேட்பாளராகப் போட்டியிட்டார்களே தவிர, தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இல்லை என்பதாகும்.
அப்படியானால், தமிழர் தரப்பின் பொது வேட்பாளரைக் கட்சி சார்பற்ற ஒருவராகத் தெரிவு செய்வதற்கான பொறிமுறை யாது? அத்தகைய பொது வேட்பாளர் தமிழ் அரசியல் கட்சி ஒன்றைச் சேர்ந்தவராக அல்லது தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக நிற்கப் போவதில்லையா? அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து ஒரு பொது வேட்பாளரைத் தீர்மானிப்பது என்று எடுத்துக் கொண்டாலும் பூனைக்கு மணி கட்டுவது யார்? இது சாத்தியப்படுமா? எடுத்ததற்கெல்லாம் கோஷ்டி பிரிந்து குத்து வெட்டுப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் இந்தப் பொது வேட்பாளர் விடயத்திலாவது ஒருமித்து நிற்பார்களா?-இது ஒரு குழப்பம்.
தமிழர் தரப்பில் பொது ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தை ஆதரித்துப் பேசும் தமிழ் அரசியல்வாதிகள், இத்தகைய பொது வேட்பாளர் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது-சிவில் சமூகத்தினரிடையேயிருந்து சிவில் சமூகத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்-படித்த பட்டம் பெற்ற கல்விமானாக இருக்க வேண்டும்-ஆளுமை நிறைந்தவராக இருக்க வேண்டும்-விலை போகாதவராக இருக்க வேண்டும்-‘தமிழ்த் தேசிய’ப்(?) பற்றாளராக இருக்க வேண்டும்-‘துரோகி’ ஆக இல்லாமல் ‘தியாகி’ ஆக இருக்க வேண்டும்-வடக்கு கிழக்கு மாகாண தமிழர்கள் மட்டுமல்ல முழு இலங்கையிலுள்ள தமிழர்களும் ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்-இந்நாட்டின் சிறுபான்மை இனங்களான தமிழ்த் தேசிய இனம் மட்டுமல்ல முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒருவராக இருக்க வேண்டும்-நேர்மையானவராக – தூய்மையுடையவராக – துணிவுடையவராக – இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆளுக்காள் வரைவிலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான வரைவிலக்கணங்களைத்தான் 06.04.2024 அன்று மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் ‘மக்கள் மனு’ – வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழு எனும் அண்மையில் தோன்றியுள்ள அமைப்பு ‘டான்’ தொலைக்காட்சிக் குழுமத்தின் அனுசரணையுடன் நடத்திய ‘ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது எப்படி?’ என்ற கருத்தாய்வு நிகழ்வில் கருத்துக் கூறிய தமிழ்த் தேசியக்
(?) கட்சிகளின் பிரதிநிதிகள் அடுக்கித் தள்ளினார்கள். இப்படி ஒரு வேட்பாளரைப் பிரம்மாவிடம் சொல்லி இனிமேல்தான் படைக்க வேண்டும்.
அதற்குச் சொல்கிறார்கள் முதலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற விடயத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்திற்கு வந்த பின்னர் பொது வேட்பாளர் ‘மாப்பிள்ளை’யைத் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்று- இது அடுத்த குழப்பம்.
தமிழ்த் தேசிய இனத்தின்-தமிழ் மக்களின் உணர்வுகளைச் சிங்கள சமூகத்திற்கும்-இராஜதந்திர சமூகத்திற்கும்-முழு உலகுக்கும் வெளிப்படுத்துவதற்கு இத் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ எனும் துரும்பைப் பயன்படுத்தப்போகிறார்களாம் என்றும் இதனை ஆதரித்து நிற்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஆதரவான அனுசரணையாளர்களும் மற்றும் ஊடகவியலாளர்களும் கூறி வருகிறார்கள்.
1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே-பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவான காலத்திலிருந்தே-இறுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் பெற்ற காலத்திலிருந்தே இலங்கையில் நடைபெற்ற எல்லாப் பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழர்களின் உணர்வுகளை-தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்பார்ப்பைத்தானே வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இப்போது புதிதாகச் சொல்வதற்கு-வெளிப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது-இது இன்னொரு குழப்பம்.
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனைக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்குமான தீர்வைப் பேரினவாதக் கட்சிகளில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுபவர் முன்வைக்க வேண்டுமாம். அதற்கான அழுத்தத்தை அல்லது நிர்ப்பந்தத்தை இத்தமிழ்ப் பொது வேட்பாளர் ‘துரும்பு’ ஏற்படுத்துமாம். கேட்பதற்கு இது நன்றாகத்தான் இருக்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றைப் புரிந்து கொண்டு பேசும் கூற்றாக இது இல்லை. பேரினவாதக் கட்சிகளில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடப் போகிறவர்கள் எவரும் இனப் பிரச்சனைக்கான தீர்வைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும்-பகிரங்கமாகவும் முன் வைக்கப் போவதில்லை. இந்த நிலையில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ துரும்பு ‘புஸ்வாணம்’ ஆகிவிடும்.-இதுவும் இன்னொரு குழப்பம்.
இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.
இனப் பிரச்சனைக்குத் தீர்வாகத் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெறுமனே மொட்டையாகத் ‘தீர்வு வேண்டும்’ என்பதா? அதனால் எதுவும் ஆகப் போவதில்லை.
அப்படியானால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுபவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வாக எதனை முன் வைப்பது.
* இரு தேசம்; ஒரு நாடு எனும் அடிப்படையில் மீண்டும் தமிழீழத் தனி நாடா?
அல்லது
* இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒற்றை மொழிவாரி சுயாட்சி அலகா?
அல்லது
* குறைந்தபட்சம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அர்த்தமுள்ள முழுமையான முறையான அமுலாக்கலா?
மேற்கூறப்பெற்றவற்றில் ஏதாவது ஒன்றை முன்வைத்துத் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கிக் குறைந்தபட்சம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐம்பது வீதத்திற்கும் குறைவான வாக்குகளே அவருக்கு விழுமாயின் தமிழ் மக்களின் ‘தலைவிதி’ என்னவாகும்.
ஒரே குழப்பமாக இருக்கிறது! தலை சுற்றுகிறது. வேண்டாம்! இந்த விஷப்பரீட்சை!